புதன், 25 ஜூலை, 2018

மரணத்தின் 'கிடுக்கி'ப் பிடியில் மதங்கள்!!!

இன்று, உலகில் மிகக் குறைவான மதங்களே உள்ளன. அவற்றில் கிறித்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், ஜைனம், யூத மதம், கன்ஃப்யூஷிய மதம், சீக்கிய மதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவற்றில் எந்த ஒன்றும், 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லுமளவுக்குப் பழைமையானது அல்ல.

2500 ஆண்டுகளுக்கு முன்பும் ஏராளமான மதங்கள் இருந்தன. புதிய மதங்கள் தோன்றத் தோன்ற, அவை  காலப்போக்கில் அழிந்தொழிந்தன; புதியவற்றுடன் இரண்டறக் கலக்கவும் செய்தன.

மதங்கள் தோன்றியதற்கான முதன்மைக் காரணம் மனிதனுக்கு இயபல்பாய் அமைந்திருந்த அச்ச உணர்வே என்பது பலரும் அறிந்த ஒன்று.

பல்வேறு காரணங்களால் பழைய மதங்கள் அழிந்து மறைந்தமை போல, இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் முன்னணி மதங்களும் காலப்போக்கில் அழிந்துபோதல் நிகழுமா என்னும் கேள்வி தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

''நிகழும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவர்கள் சொல்லும் காரணங்கள் யாவை? பட்டியல் கீழே.....

#ஒன்று:
மனிதர்களில் பலரும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மத நம்பிக்கை உட்படப் பலவகை மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது 100%  உண்மை.

இரண்டு:
'உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் மத நம்பிக்கையாளர்கள் அல்ல' என்னும் புள்ளிவிவரம் இதற்கு ஆதாரமாக அமைகிறது.

மூன்று;
வழிபாடு நிகழ்த்தியும்கூட, மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் தொகை நாளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கடவுளின் மீதான நம்பிக்கையை இழப்பவர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நான்கு:
கிறித்தவ மதத்தினர் தம்முள் பிளவுபட்டு ஒரு பிரிவினர் பிற பிரிவினருடன் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ஐந்து:
இஸ்லாம் மதத்திலும் பிரிவுகள் உருவாகி, ஒன்றோடொன்று மோதிப் போரிடுகின்றன.

ஆறு:
இந்து மதத்தவர்கள், பிற மதத்தவரைக் காட்டிலும் அதிக மூடநம்பிக்கைகளைக் கட்டிக்காப்பதோடு அவற்றை எதிர்ப்பவர்களைத் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்துமதத்தின் மீதான நம்பிக்கையை இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஏழு:
முன்னணி மதத்தவர் 'மத மாற்றம்' செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதால் மதங்களுக்கிடையிலான மோதல் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.

எட்டு:
சமணம் போன்ற மதங்களின் கொள்கைகள் மக்களால் எளிதாகப் பின்பற்ற இயலாதவை என்பதால் அவை மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கின்றன.

ஆக, இத்தனை ஆண்டுகள் என்று திட்டவட்டமாய்க் கணிக்க முடியாது எனினும், காலப்போக்கில் அனைத்து மதங்களும் முற்றிலுமாய் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்#

முக்கிய குறிப்பு:
நான் ஆய்வாளன் அல்ல; இந்தப் பதிவு என் கற்பனையில் உருவானதும் அல்ல. 'த.அமலா' அவர்களால் மலையாள மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட'மதமும் பகுத்தறிவும்'[சூலூர் வெளியீட்டகம், கோவை 641402; முதல் பதிப்பு: ஜூலை, 2004] என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

Tamil translation made from
YUKTHIDARSANAM[Philosophy of Rationalism]
Edited by Pavanan
Published by Yukthivada Sanghom, Calicut.
September 1982.

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஒரு நடுவணமைச்சரின் 'நவ அநாகரிக'ப் பேட்டி!!!

ஒரு நடுவணமைச்சரின் பேட்டி இந்த வார விகடனில்[25.07.2018] வெளியாகியிருக்கிறது. நிருபர் தொடுத்த பல கேள்விகளில் இரண்டனுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் என் கவனத்தை ஈர்த்தன.

#கேள்வி 1:
'தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் தவறு செய்யத் துணிந்தவர்கள்' என்கிறீர்கள். சிறைச்சாலைக் கைதிகளில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கை கொண்டவர்கள்தானே?

அமைச்சரின் பதில்:
தமிழகத்தில் தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று கணக்கிட்டால்[அமைச்சர் கணக்கு ஏதும் போடவில்லை; ஆதாரபூர்வமான புள்ளிவிவரப் பட்டியலும் தரவில்லை; குத்துமதிப்பாக அடித்துவிட்டிருக்கிறார்] ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே[ஒரு விழுக்காடு என்றே வைத்துக்கொள்வோம்] இருப்பார்கள். இந்த விகிதாச்சாரப்படிக் கணக்கிட்டால், தெய்வ நம்பிக்கை இல்லாத சிறைக் கைதிகளின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு விழுக்காடாக இருக்கும்[நான்கு விழுக்காடாகவே இருக்கட்டும்]. இதைச் சவால்விட்டே சொல்கிறேன். ஏனெனில் அவர்களுக்குப் பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கிடையாது#

இங்கே ஆதாரமில்லாத ஒரு புள்ளிவிவரத்தைத் தந்திருக்கிறார் அமைச்சர். தவறான புள்ளிவிவரம் தருவது எத்தனை பெரிய தவறு என்பது இந்தப் பெரிய மனிதருக்குப் புரியாமல் போனது ஏன் என்று புரியவில்லை. சவால் விட்டதன் தேவை என்ன என்பதும் தெரியவில்லை.

மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள நாத்திகர்களில் குற்றம் புரிந்து சிறைக்குச் சென்றவர்கள் 4 விழுக்காடு. மக்கள் தொகையில் 99 விழுக்காடாக இருக்கும் ஆத்திகர்களில் குற்றம் புரிந்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் 94 விழுக்காடு[ஆத்திகர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் ஆயிற்றே. குற்றம் புரிந்து இத்தனை பேர் சிறை புகுந்தது எவ்வாறு?] மட்டுமே என்பது மாண்புமிகுவின் கணக்கு.

நாத்திகரில் குற்றம் புரிவோர் அதிகம் என்பதும் ஆத்திகரில் அந்த எண்ணிக்கை குறைவு என்பதும் அமைச்சரின் வாதம்.

நிருபரின் கேள்விக்கு மிகச் சரியான விடையளிக்கும் வகையறியாமல் இப்படிச் சதவீதக் கணக்குப் போட்டுச் சொதப்பியிருக்கிறார் நடுவணமைச்சர். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

''சமுதாயத்தில் உள்ள அத்தனை ஆத்திகர்களுமே பரம யோக்கியர்கள். சிறையில் இருப்பவர்கள் எல்லாம் வெளியில் நாத்திகம் பேசி வாழ்ந்த அயோக்கியர்கள். இவர்கள்  தண்டனைக்காலம் முடிவதற்குள் விடுதலை பெறும்[நன்னடத்தைக்காக] ஆசையில் ஆத்திக வேசம் போட்டு நல்லவர்களாக நடிக்கிறார்கள்'' என்று சொல்லி நிருபரின் வாயை அடைத்திருக்கலாம். ஏனோ செய்யவில்லை!

#கேள்வி 2:
எல்லாம் வல்ல இறைவனை மனிதனால் அவமானப்படுத்த முடியுமா? தெய்வத்துக்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வது இறைவனை அவமானப்படுத்துவதாக ஆகாதா?

மாண்புமிகு பதில்:
அதாவது, தெய்வத்தை யாரும் அசிங்கப்படுத்த முடியாது... ஆனால், அவமானப்படுத்த முடியும். எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளும் 'எனக்கு மரியாதை வேண்டும்' என்று கேட்பதில்லை. ஆனாலும், அவரவர் மதத்துக்கு ஏற்றபடி தெய்வத்துக்குச் செய்யக்கூடிய மரியாதையைச் செய்து வருகிறார்கள். அந்த மரியாதையை அவமானப்படுத்தும்போது, அது தெய்வத்தையே அவமானப்படுத்திவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். அதையேதான் நானும் சொல்கிறேன்#

அசிங்கப்படுத்த முடியாது, அவமானப்படுத்த முடியும் என்கிறாரே அமைச்சர், அசிங்கப்படுத்துதலுக்கும் அவமானப்படுத்துதலுக்கும் என்னங்க வேறுபாடு? நிருபர் கேட்டிருக்கலாம் கேட்கவில்லை. நாம் கேட்கலாம். கேட்டால் பதில் வருமா?

'மரியாதையை அவமானப்படுத்தும்போது...' என்றும் சொல்லியிருக்கிறார். 

மனிதர்களை மனிதர்கள் அவமானப்படுத்தலாம். மரியாதையை அவமானப்படுத்த முடியுமா? எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சி.

மாண்புமிகு நடுவணமைச்சர்[பொன்.ராதாகிருஷ்ணன்]  அவர்கள் சிறந்த பக்திமானாக வாழ்ந்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழட்டும். ஆனால், ஆத்திகம் நாத்திகம் ஆகியவை குறித்து அதிகம் அறிந்திராத நிலையில், அவை குறித்தான விமர்சனங்களை அவர் தவிர்ப்பது நல்லது. இது அறிவுரை அல்ல; இகழ்வுரையும் அல்ல; என் அன்பான பரிந்துரை.
------------------------------------------------------------------------------------------------------------------
ஆனந்த விகடனுக்கு என் நன்றி.