செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

'பத்தரை மாற்று'ப் பகுத்தறிவாளன்!!!

30.05.1778 அன்று இரவு 11 மணி.

200 ஆண்டுகளுக்கு முன்னரே, மக்களைப் பிணித்திருந்த மூடநம்பிக்கைத் தளைகளை அறுத்தெறிவதற்காக ஓய்வறியாது உழைத்த ஓர் இதயம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இதயத்துக்குச் சொந்தக்காரர்.....

''அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்களின் உபதேசங்கள் அறிவுக்குப் பொருத்தமானவையா என்று எண்ணிப்பார். பொருத்தம் என்றால் ஏற்றுக்கொள். இல்லையேல், தயவுதாட்சண்யமின்றி அவற்றை ஒதுக்கித் தள்ளு'' என்று எவருக்கும் அஞ்சாமல் முழக்கமிட்ட பிரெஞ்சு நாட்டு அறிஞன் 'வால்ட்டேர்'[Voltaire] ஆவார்.

வால்ட்டேர், மரணத்தைத் தழுவுவதற்குச் சற்று முன்னர் மதகுருமார்கள்  இருவர் அவரை நெருங்கினார்கள். ஒருவரின் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதில்.....

'எல்லாம் வல்ல ஆண்டவனே, நான் அறியாமை காரணமாக மதங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறேன். மதகுருமார்களின் செயல்பாடுகளையும் கண்டித்திருக்கிறேன். என் அறியாமை காரணமாகக் கடவுள் தத்துவங்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறேன். என்னுடைய அடாத இச்செயல்களுக்காக இப்போது வருந்துகிறேன். இறைவனே, நான் மரணத்தைத் தழுவ இருக்கின்ற இந்தத் தருணத்தில் நீர் என்னை மன்னிப்பீராக!' என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பத்திரத்தில் வால்ட்டேர் கையொப்பம் இடுவாரேயானால், 'நம் மதத்தை எதிர்ப்பவர் எவராயினும் என்றேனும் ஒரு நாள் இப்படிச் சரணடைந்தே தீரவேண்டும்' என்று மக்களிடையே பரப்புரை செய்வது மதகுருமார்களின் நோக்கமாக இருந்தது. சாவைத் தழுவவிருந்த வால்டேரைப் பத்திரமும் கையுமாக அவர்கள் சந்தித்ததன் நோக்கமும் அதுவே.

பத்திரம் வைத்திருந்த மதகுரு, ''வால்ட்டேர் அவர்களே, உங்களுடைய வாழ்க்கை முடியப்போகிறது. இந்தத் தருணத்திலாவது, நீங்கள் ஏசுநாதர் கடவுளின் அவதாரம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பாவ மன்னிப்புக் கிட்டும்'' என்றார்.

வால்ட்டேர் அதற்கு உடன்பட்டாரா? ஊஹூம்!

மதகுருவின் நடவடிக்கையால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார் பகுத்தறிவுச் சிந்தனையாளர் வால்ட்டேர்; ஒரு கையால் அந்த மதகுருவை ஒதுக்கித் தள்ளினார்; சொன்னார்:

''என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள்.''

வால்ட்டேர் இறந்த பின்னரும், குருமார்களின் பழிவாங்கும் போக்கு நீடித்தது. அவரைப் புதைப்பதற்கு எந்தவொரு கல்லறையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அவரின் கல்லறைப் பெட்டி 100 கல் தொலைவிலிருந்த திருச்சபையின் மண்ணில் புதைக்கப்பட்டது.

வால்ட்டேர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. ஆட்சிக்கட்டிலில் வீற்றிருந்த பதினாறாம் லூயியின் தலை துண்டிக்கப்பட்டது. பிரபுக்களின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவை அனைத்தையும்விட மகத்தானதொரு சம்பவமும் இடம்பெற்றது பிரெஞ்சு மண்ணில்! அது.....

வால்ட்டேரின் கல்லறைப் பெட்டியைத் தோண்டி எடுத்து, மாபெரும் ஊர்வலம் நடத்தி, பாரீஸ் நகரத்துக்குக் கொண்டுவந்து மீண்டும் புதைத்து வால்ட்டேருக்குச் சிறப்புச் செய்தார்கள் பிரெஞ்சு மக்கள்!
========================================================================
ஆதார நூல்: 'வால்ட்டேர்', வ.உ.சி.நூலகம்; ராயப்பேட்டை, சென்னை. முதல் பதிப்பு: 2003.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அதென்ன 'நானோ டெக்னாலஜி'[Nanotechnology]?

'நானோ' என்பதற்கு அதி நுட்பமான என்று பொருள். 

'மைக்ரோ' என்பது 10 லட்சத்தில் ஒரு பகுதி. நானோ அதைவிட ஆயிரம் மடங்கு நுட்பமான சில்லுகளும் அதற்கொத்த உதிரிப் பாகங்களும் கொண்டு சாதனங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எறும்பு வடிவிலான ரோபாட்டுகள் செய்து, நம் உடம்புக்குள் அனுப்பி உறுப்புகளைப் பழுது பார்க்கலாம்.

நுண்ணியிரிகள்[பாக்டீரியா] வடிவில் ஒரு ரசாயன ஆராய்ச்சி சாலையையே அனுப்பிப் பெட்ரோல்கூட உற்பத்தி செய்யலாம்.

அமெரிக்க எம்.ஐ.டி.யின் ஏஐ[செயற்கை அறிவு] ஆராய்ச்சி சாலையின் இயக்குநர் 'ராட்னி ப்ரூக்ஸ்' எழுதிய கட்டுரையைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும்.

சிலிக்கான் சிப்களையும் டி.என்.ஏ.ஜினோம்களையும் கலக்கும் பாக்டீரியல் ஆராய்ச்சி தீவிரமடைந்திருக்கிறது. இதன் மூலம்.....

மரத்தை வளர்த்து, அதை வெட்டிப் பலகைகளாக்கி மேஜையாக மாற்றுவதற்குப் பதிலாக, மேஜையாகவே வளரக்கூடிய விதைகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போல.....

கண்ணுக்குள் சிலிக்கன் சிப் ஒன்றை வைத்து, நேரடியாக மூளைக்குக் காட்சிகளை அனுப்பும் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

இன்னும் ஐம்பது வருடங்களில் மனிதனும் இயந்திரமும் இரண்டறக் கலந்துவிடுவார்கள். 

தலைப்புக் கேள்விக்கான பதிலைத் தந்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

 ------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் இடம்பெற்ற நூல்: 'சுஜாதாவைக் கேளுங்கள்', குமுதம் பு[து]த்தகம் வெளியீடு; முதல் பதிப்பு: ஜனவரி 2009.

நன்றி: குமுதம்
                                                  ----------------------------------------

சுஜாதாவின் தமிழ் மொழி மீதான பற்றினை வெளிப்படுத்தும் இன்னொரு பதில்.....

கேள்வி:
தமிழைவிட சஸ்கிருதம் உயர்வானது என்று சொல்லும் ஜெயகாந்தனின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?

சுஜாதா பதில்:
ஜெயகாந்தன் மிகச் சரியாக என்ன சொன்னார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். இதுதான் சமயம் என்று ஆளாளுக்கு அவரவர் கருத்தை ஜே.கே.யின் மீது திணிக்கிறார்கள். 

எந்த எழுத்தாளனும் தான் எழுதும் மொழியைவிட மற்ற மொழி உயர்ந்தது என்று சொல்லமாட்டான். மேலும், சமஸ்கிருதத்தில் 'சில நேரங்கள்...' எழுத முடியாது.