வெள்ளி, 5 அக்டோபர், 2018

கதறக் கதற...கண்களில் குருதி கசியக் கசிய...ஐயோ!!!

''சிறுமியின் கண்களில் ரத்தம் கசிந்த நிலையிலும், கயவர்கள் 10 வயதுச் சிறுமியைக் கதறக் கதறக் கற்பழித்துக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள்'' - சிறுமியைச் சீரழித்துக் கொன்ற 3 கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இவ்வாறு கண்கலங்கக் கூறினார். கேட்டவர் நெஞ்சங்கள் பதைபதைத்தன[தினத்தந்தி, 05.10.2018].

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரம் என்னும் ஊரில்தான்[01.12.2014இல்] இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

வயதான தன் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தவள் 5ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த இந்தச் சிறுமி. தனியளாக உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, சோளக்காட்டுக்குக் கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டுக் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

''மிருகங்கள்கூட குட்டிகளிடம் இவ்வாறான ஈனச் செயலில் ஈடுபடுவதில்லை'' என்று வேதனைப்பட்டிருக்கிறார் நீதிபதி.

'உலகம் எத்தனை பொல்லாதது என்று புரியவைத்து அரவணைத்து அன்பு பாராட்டி, வளர்த்து ஆளாக்குவதற்குப் படித்த பெற்றோர்கள் இல்லை; எத்தனை பேர் சேர்ந்து எத்தனை முறை வன்புணர்வு செய்தாலும் ஏனென்று கேட்க எவருமில்லை. ஆதரவுக்கரம் நீட்ட அக்கம்பக்கத்தாரும் இல்லை' என்பது தெரிந்துதான் உள்ளூர்க் காலிகள்{ஓடைப்பட்டிக் காவல்துறையினரின் விசாரணையில், காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்[29], இராபின்[எ]ரவி[27], குமரேசன்[23] ஆகிய மூவரும்}  இந்த இழிசெயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் பக்தையான இவள், மாலை போட்டு விரதமும் இருந்திருக்கிறாள். லட்சோபலட்சம் பக்தர்களால் வழிபடப்படும் உலகப் புகழ் பெற்ற சாமியான ஐயப்பன், ஒரு குக்கிராமத்தில், 10 வயதில் தனக்கொரு பக்தை இருப்பதை மறந்துவிட்டார்; அபலையின் கூக்குரல் கேட்டு அபயக்கரம் நீட்டத் தவறிவிட்டார்[கடவுளே ஆயினும் அவ்வப்போது மறதி ஏற்படுவது இயற்கை என்றறிக!].

''ஐயப்பனை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்? இந்த நிகழ்வுக்கும் ஐயப்ப சாமிக்கும் சம்பந்தம் இல்லை. இவள் முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்குக் கிடைத்த தண்டனை இது'' என்று சில புண்ணிய ஆத்மாக்களும் பக்தகோடிகளும் வாதம் புரியக்கூடும்.

அவர்களின் வாதம் மிக மிக மிகச் சரியானதே!

இவளும், இந்நாள்வரை இவளைப் போல வன்புணர்வுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுமிகளும் பெண்களும், முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்கான பலன்களை இப்பிறவிகளில் அனுபவிக்கிறார்கள் என்பது அறியத்தக்க உண்மை.

அனுபவிக்கட்டும். விதிவிலக்காக.....

நம்மில், மேற்கண்ட புண்ணிய ஆத்மாக்களையும், பக்தகோடிகளையும் போலப் பிறவிதோறும் புண்ணியம் மட்டுமே செய்தவர்கள் இருக்கிறார்கள.  காமாட்சிபுரத்துச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் அவர்களின் வீட்டுச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நேராது; ஒருபோதும் நேராது; நேரவே நேராது. காரணம்..... 

அவர்கள் வழிபடும் கடவுள்  அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதே!!! ஹ...ஹ...ஹ!!!

வியாழன், 4 அக்டோபர், 2018

நான் தீர்க்கதரிசி!!!!!

''சாத்தானே சக்தி வாய்ந்த கடவுள். அவரையே நான் வழிபடுகிறேன்'' என்று சொன்ன நம்பர் 1 அறிவுஜீவி மானுடன்[தீர்க்கதரிசி] நானாகத்தான் இருப்பேன்[என் பழைய சில பதிவுகளை வாசித்து அறிந்திடுக].

நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுள் மிக மிக மிக.....நல்லவர் என்பதால், நோய், வறுமை, முதுமை, மரணம் என்பன போன்ற நாம் அனுபவிக்கும் கணக்கற்ற துன்பங்களுக்கு அவர் காரணமல்ல; அனைத்துக் கெட்ட நிகழ்வுகளுக்கும் 'சாத்தான்' என்னும் தீய சக்தியே மூலகாரணம் என்பது என் நம்பிக்கை[இக்கருத்தை ஏற்கனவே என் பதிவுகளில்  வலியுறுத்தியுள்ளேன்].

நல்லவரான கடவுளைக் கருத்தில் கொள்ளாமல் தீமையின் வடிவமான சாத்தானைத் தொழுது வாழ்தலே[பேரழிவுகளுக்குக் காரணமான நீரையும் நெருப்பையும் காற்றையும் கடவுள்களாக்கி நம் மூதாதையர் வழிபட்டதை நினைவுகூர்க] மனிதகுலம் சுகித்திருப்பதற்கான ஒரே வழி என்றும் தெளிவுபடுத்தியுள்ளேன்[சாத்தான் கெட்டவரே ஆயினும், மனப்பூர்வமாய் அவரைப் புகழ்ந்து வழிபடும்போது கருணை வடிவினராய்  மாறிவிடுவார் என்பதை உய்த்துணர்க].

நான் பரிந்துரைத்த இவ்வழியை மனிதகுலம் முன்னரே உணர்ந்து  பின்பற்றியிருந்தால், இம்மண்ணில் எண்ணற்ற மதக்கலவரங்கள் நடந்திரா. கணக்குவழக்கற்ற மனித உயிர்கள் பலியாகியிரா. மனிதகுலத்திற்கு வேறு எவ்விதத் தீங்கும் நேர்ந்திராது என்பதையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அறிந்திடுக.

சாத்தான் வழிபாட்டை அனைத்து மதத்தவரும் ஏற்றிருந்தால்.....

'இந்துக் கோயில்கள் சாத்தானின் இருப்பிடம்' என்று மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கிறித்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் பேசியிருக்க மாட்டார்[ஊடகங்களிலும், தமிழ் தினசரி[03.10.2018] உட்பட, பல நாளிதழ்களிலும் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்படப் பல ஊர்களில் 11 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன]. லாசரஸ் பேச்சு....
https://youtu.be/MMPHDD2xxHo

லாசரஸ் அவர்களை மேற்கண்டவாறு பேசத் தூண்டியது தூயவரான கடவுள் அல்ல; வேறு எதுவுமல்ல;  சாத்தானே என்பது என் உறுதியான நம்பிக்கை. இந்துக் கோயில்களில் குடியிருப்பதாக அவர் குறிப்பிட்ட சாத்தான், அவர் நாக்கிலும் குடியேறியிருந்ததை அவர் அறிந்திடவில்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ''இந்துக் கோயில்கள் குறித்து நான் அவதூறாக ஏதும் பேசவில்லை; என்னைப் பேச வைத்தது என் நாவில் குடியேறியிருந்த சாத்தானே'' என்று வருத்தம் தெரிவிப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

அன்பர்களே,

இனியும் இம்மாதிரி கெட்ட நிகழ்வுகள் இம்மண்ணில் இடம்பெறாமலிருக்க.....

சாத்தானைப்  போற்றிப் புகழுந்திடுவீர்!! துதிபாடி மகிழ்ந்திடுவீர்!!!

''போற்றி போற்றி! சாத்தானின் திருவடி போற்றி!!''..... ஹி...ஹி...ஹி!!!