வியாழன், 7 பிப்ரவரி, 2019

அடுத்து நிகழும் 'ஊழி'ப் பேரழிவில் மனிதகுலம் தப்பிப் பிழைக்குமா?!?!

'சுமார் 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமி ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அதாவது, கண்டங்களாகப் பிரிந்திருக்கவில்லை. பூமியின் வட பகுதி கடலாகவும் தென் பகுதி நிலமாகவும் இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்களே இருந்தன. அவையும் கடலுக்குள் வாழ்ந்துகொண்டிருந்தன.

பருவநிலை மாற்றங்களால், கடலின் பெரும்பகுதி பனியாக மாறியது. விளைவு.....

85% உயிரினங்கள் அழிந்துபோயின. இவ்வாறு, பெரும்பாலான உயிரினங்கள் அழிவதற்குக் காரணமான அந்த நிகழ்வை, 'முதல் பேரழிவு' என்று குறிப்பிடுகிறார்கள்' விஞ்ஞானிகள்.
உயிரினப் பேரழிவுகள் க்கான பட முடிவு
சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலவுலகில் இரண்டாவது பேரழிவு இடம்பெற்றது. அப்போது, ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒரு கண்டமாகவும், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவை ஒரு கண்டமாகவும் இருந்தன. வடக்கே சைபீரியா தனியாக இருந்தது.

அக்காலக் கட்டத்தில் இம்மண்ணில் பலவித செடிகொடிகளும் பூச்சிகளும் உருவாயின.

காலப்போக்கில், கடல் மட்டம் வெகுவாகக் குறைந்ததாலும், அஸ்டிராய்ட்[Asteroid -என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் -விக்கிப்பீடியா] ஒன்று பூமியைத் தாக்கியதாலும் உயிரினங்களில் பெரும்பகுதி அழிந்துபோனது.

மூன்றாவது பேரழிவு 29 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அப்போது கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன.  இந்தப் பேரழிவின்போது, கடல்வாழ் உயிரினங்களில் 96 விழுக்காடும், நிலப்பகுதியில் 70 விழுக்காடும் அழிந்தன.

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது 4ஆவது பேரழிவு. அப்போது மீண்டும் கண்டங்கள் தனித்தனியே பிரிந்திருந்தன. உயிரினங்களில் பாதி அழிந்தன. இக்காலக் கட்டத்தில்தான் 'டைனோசர்கள்' என்னும் உயிரினங்கள் தோன்றின.

அடுத்து நிகழ்ந்தது ஐந்தாவது உயிரினப் பேரழிவு. இது நிகழ்ந்தது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு. டைனோசர் இனம் முற்றிலுமாய் அழிந்தது. அழிவுக்குக் காரணம் பூமியை ஒரு விண்கல் தாக்கியதே. அந்தக் கல் மெக்சிகோ நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

விண்கல் மோதினால் இந்த அளவுக்குப் பேரழிவு நேருமா என்ற ஐயம் நமக்குத் தோன்றும். 'பூமி மீது அதி பயங்கர வேகத்தில் விண் கல் மோதினால், பெரும் தூசுப் படலம் உருவாகும். அது பூமியை முற்றிலுமாய்ச் சூழ்ந்துகொள்ளும். பூமியில் வெப்பம் குறையும். பருவநிலை மாறும். தாவரங்கள் அழியும். உணவின்றிப் பெரும்பாலான உயிரினங்கள் பட்டினியால் அழியும்' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆக,

பேரழிவுகள் நிகழ்வதும், பூமியில் வாழும் உயிரினங்களில் பெரும்பகுதி அழிந்தொழிவதும், தப்பிய உயிரினங்களும், புதிதாகத் தோன்றுவனவும் தத்தம் இனத்தை விருத்தி செய்து வாழ்ந்து மீண்டும் அழிவதும் வாழ்வதுமான நிகழ்வுகள் தொடர்கின்றன. 

ஐந்து பேரழிவுகளைத் தொடர்ந்து 6ஆவது பேரழிவு நிச்சயம் நிகழும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அதற்குக் காரணமாக அமையவிருப்பது அஸ்ட்ராய்டுகளோ, விண்கற்களோ அல்ல; மனிதனின் இழிசெயல்களே என்கிறார்கள் அவர்கள்.

ஆறாவது பேரழிவில், கரப்பான், குதிரைலாட நண்டு, ஜெல்லி மீன்கள் போன்ற உயிரினங்கள் தப்பிக்க வாய்ப்பு அமையலாம். மனித இனம் மட்டும் பூண்டோடு அழியும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மனித குலம் அழிவதா? அழிய அனுமதிக்கலாமா? கூடாது...கூடவே கூடாது.

நம்மிடம்தான் எத்தனை கடவுள்கள்! எத்தனை எத்தனை மகா மகா மகா பெரிய அவதாரக் கடவுள்கள்!

இனி, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தத்தம் கடவுள்களிடமும், கடவுள்களோடு கடவுள்களாய் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைக் கண்காணித்துவரும் மகா.....ப் பெரிய மகான்களிடமும் நம் இனத்தைக் காக்குமாறு வேண்டுகோள் வைப்போம். 

இப்போது உள்ள கோயில்கள் போதாது. கோடிகோடியாய்ச் செலவு செய்து புதிய புதிய கோயில்கள் கட்டுவோம். மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்து  நாளும் விழாக்கள் எடுப்போம். 

நம் கோரிக்கை நிறைவேறும். மானுட இனம் அழியாது.....அழியவே அழியாது.

இது உறுதி; 100% உறுதி.

இந்த நம்பிக்கையில்தான்.....

வாரத்தில் ஒரு நாள் விரதம்[முழுப்பட்டினி]  இருக்கிறேன். காலை, மாலை, நண்பகல், பின்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று கண்ட கண்ட நேரங்களிலெல்லாம் ஒரு நூறு கடவுள்களையாவது வழிபடுகிறேன்[ஹி...ஹி...ஹி!!!].

நீங்களும் வழிபடுங்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------
உதவிய நூல்: என் ராமதுரை அவர்களின், 'எங்கே இன்னொரு பூமி?'; கிழக்குப் பதிப்பகம்.
--------------------------------------------------------------------------------------------------------------------






செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

முதல் இரவும் முதல் உடலுறவும்!!

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய்ப் படுத்தும். யார் யார் மூலமாகவோ கிடைக்கிற பூடகமான அறிவுரைகளும், தகவல்களும் மனத்தில் குழப்பங்களை உண்டுபண்ணியிருக்கும். இதனாலயே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய சில ஆலோசனைகள்.... 

*முதலிரவு என்றாலே, அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆகி விட்டாலும்கூடத் தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. 

*முதல் இரவில் உறவைத் தவிர்த்திட,  சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்களும் உள்ளன. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் காரணமாக உடலுறுப்புகள் மிகவும் சோர்வுற்றிருக்கும். தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என்று பல காரணங்களால் இருவர் உடம்பும் முழுத் தூய்மை பெற்றிரா.

*வீட்டில், திருமண மண்டபத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க நேர்வதால் பிறரிடமிருந்து நோய்கள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த சூட்டோடு உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. 

*முதல் நாளே உடலுறவைத் துவக்கும் தம்பதியருக்குப் பிறப்புறுப்புகளையோ மூத்திரக்காயையோ பாதிக்கும்  நோய்கள் தாக்குவதற்கான  வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவசரக் கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளுதல் தவறாகும்.

*நிறைவான உடலுறவு சுகம் அளிப்பதற்கான முழுத் தகுதியும் தனக்கு உள்ளது  என்பதை நிரூபித்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிகமான பதற்றம் இருக்கும். பதற்றத்துடன் உறவு கொள்ளும் போது ஆணுக்கு மிக விரைவில் விந்து வெளியேறிவிடுதல் பெரும்பாலும் நிகழும். அதன் விளைவாக, முதல் இரவிலேயே இருவருக்குள்ளும் அவநம்பிக்கை உருவாவதற்கான சாத்தியமும் அதிகம். அது, ஆபத்தான பின்விளைவுகளுக்குக் காரணமாக அமையலாம்.

*முதலிரவுச் சந்திப்பில் இருவரும் தத்தம் விருப்பு வெறுப்புகளைப் பகிரலாம்; குடும்பச் சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். இல்லற வாழ்வில் இடம்பெறும் பொதுவான பிரச்சினைகள் குறித்துப் பேசலாம்.

*பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வதே நல்லது. 

*தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவதே உகந்தது. ஊட்டிவிடுவதும் எச்சில் பண்டங்களைப் பகிர்வதும் இச்சையை தூண்டிவிடும் என்பது அறியத்தக்கது.

*வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும்[அதுவும் கட்டாயமில்லை]. அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; உறவைப் பலப்படுத்தும். ஒரே படுக்கையில் படுத்தாலும், முத்தமிட்டுக் கொள்ளாமலும் உடலுடன் உடல் உரசாமலும் இருப்பது மிகவும் அவசியம்.  

*கணிசமான நாட்கள் மனம் திறந்து பேசிப் பழகி, இருவருக்குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட்ட நிலையில், பதற்றத்திற்குச் சிறிதும் இடம்தராமல், உடலுறவு இச்சை  கிளர்ந்தெழும்  நிலையில் புணர்தலைத் தொடங்கலாம்.

*உடலுறவுக்கான நேரம் மனதுக்கு இதமளிப்பதாக இருந்தால் போதும். அது இரவா, பகலா என்பதெல்லாம் முக்கியம் அல்ல.
------------------------------------------------------------------------------------------------------------------
உதவிக்கு நன்றி: http://viyapu.com/news_detail.php?cid=5710#sthash.oHZHI9Zg.dp
இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.