ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை!!!


பதிவு செய்த நாள்

06ஏப்
2019 
22:40
சென்னை: தி.க., தலைவர், வீரமணியை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை நடத்தும் பொதுக்கூட்டம், மயிலாப்பூரில் இன்று நடைபெற உள்ளது.ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசி வரும், தி.க., தலைவர் வீரமணியை கைது செய்ய வலியுறுத்தியும், ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும், தி.மு.க., கூட்டணிக்கு, இனி எந்த தேர்தலிலும் ஓட்டு போட மாட்டோம் என, உறுதி ஏற்கும் வகையிலும், ஹிந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில், இன்று மாலை, 4:30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதில், சமூக ஆர்வலர்கள், ஆன்மிக அன்பர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேச உள்ளனர். அனந்த பத்மநாப சுவாமி, 'ஸ்ரீகிருஷ்ணர்' குறித்து சொற்பொழிவாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை செய்துள்ளது.
-இது, இன்றைய 'தினமலர்[07.04.2018]' நாளிதழில் வெளியான செய்தி.

இதன் மூலம், இந்துமதத்திற்கு விரோதமாகச் செயல்படும் தி.மு.க.வுக்கு[கைகோர்த்துள்ள அப்பாவிக் கட்சிகளுக்கும்தான்] இனி எந்தவொரு தேர்தலிலும் ஓட்டளிப்பதில்லை என்று மயிலாப்பூரில் வாழும் பொதுமக்கள் முடிவெடுக்க இருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

இங்கே, 'இனி' என்னும் சொல் ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இனி என்று சொன்னதன் மூலம் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் மயிலாப்பூர் வாசிகள் தி.மு.க.வுக்கே தங்களின் பொன்னான ஓட்டுகளைப் போட்டு அதை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது உய்த்துணரத்தக்கது.

எனவே, இக்கணமே, ஸ்டாலின் அவர்களுக்கு இந்தச் செய்தியைச் சமர்ப்பணம் செய்வதோடு, அவரை எச்சரிக்கை செய்திடவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவ்வெச்சரிக்கை.....

'நன்றி மறப்பது நன்றல்ல' என்பது சான்றோர் வாக்கு.

கடந்த தேர்தல்களில் நீங்கள் வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்குத் தோள் கொடுத்து உதவிய மயிலாப்பூர் நன் மக்களை நன்றியுடன் நினைவுகூருங்கள். 

'ஒரிஜினல்' இந்துக்களான அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் நீங்கள், உங்களின் தவற்றை உணர்ந்து உடனடியாக அவர்களிடம் மன்னிப்புக் கோருங்கள். கோரினால்.....

பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டு, நடைபெறவுள்ள தேர்தலில் மட்டுமல்லாமல், இனி வரவிருக்கும் தேர்தல்களிலும் உங்கள் கட்சிக்கே[கூட்டுச் சேரும் கட்சிகளுக்கும்தான்] ஓட்டளித்து வெற்றிமாலை சூட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 


வியாழன், 4 ஏப்ரல், 2019

பச்சோந்திகளா நம் மக்கள்?!

பொது இடங்களில் எச்சில் உமிழ்வதைத் தடுக்கச் சீனாவில் தண்டனை முறை வகுத்திருக்கிறார்கள் என்றதும், ''இந்தியாவிலும் அப்படிச் செய்தாலென்ன?'' என்று சிலர் கேட்கிறார்கள்.

சிங்கப்பூரில் தெருவில் காகிதம் எறிந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டால், ''இங்கும் அப்படிச் செய்தாலென்ன?'' என்கிறார்கள்.

அரேபியாவில் குற்றம் புரிந்தவர்களுக்குக் கை கால் வாங்கப்படுகிறது என்று கேள்விப்படும்போது, ''நம் நாட்டிலும் அப்படிச் செய்தால்தான் சரிப்பட்டுவரும்'' என்று நம்மவர்கள் சொல்கிறார்கள்.

அப்படியெல்லாம் செய்வது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால்.....

சட்டம் கொண்டுவர வேண்டுமென்று சொல்கிற, ஆரவாரம் செய்கிற அதே மக்கள்தான்.....

அவர்கள் சொல்கிறபடியெல்லாம் சட்டம் இயற்றிய பின்னர், 

''எச்சில் துப்பக்கூடாதாமே, இதென்ன அக்கிரமம்!''

''காகிதம் போட்டால் அதென்ன அவ்வளவு பெரிய குற்றமா?''

''இவ்வளவு சிறிய தப்புக்கு அவ்வளவு பெரிய தண்டனையா?''

''இது ஜனநாயகம் அல்ல. கொடுங்கோன்மை. எதேச்சிகாரம்!''

என்றெல்லாம் முழக்கமிட்டுத் தெருத் தெருவாய் ஊர்வலம் சென்று போராடுகிறார்கள்.

இவர்களை நம்பி யாரால் நல்லாட்சி தர இயலும்?!
==================================================================================
20.05.1982 'குமுதம்' வார இதழில் வெளியான தலையங்கம்.