வெள்ளி, 17 மே, 2019

பிரெஞ்சுக்காரன் சொன்ன நரிக்கதை!!

#காட்டு ராஜாவான சிங்கம் காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தன் குகை வாசலுக்கு வருமாறு கட்டளையிட்டது. அனைத்து விலங்குகளும் வந்து குழுமின.

சிங்கம் தின்றது போக மிஞ்சிய விலங்குகளின் தசைகளும் எலும்புகளும் வாசலில் சிதறிக் கிடந்தன. கெட்ட வாசனை எங்கும் பரவியிருந்தது.

குகையிலிருந்து வெளிப்பட்ட சிங்கம், ''என் குகை வாசல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று விலங்குக் கூட்டத்திடம் கேட்டது.

பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அத்தனை விலங்குகளும் மௌனம் காக்கவே, யானையின் பக்கம் திரும்பி, ''பதில் சொல்'' என்று ஆணை பிறப்பித்தது சிங்கம்.

சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு, ''கெட்ட நாற்றம் வீசுது. வாசலில் நிற்கவே முடியவில்லை'' என்றது யானை.

''என் குகை வாசலையா நீ பழிக்கிறாய்?'' என்று சினந்து சீறிய சிங்கம் யானையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டது. யானை அலறியது. அதன் கன்னத்திலிருந்து பெருக்கெடுத்து வழிந்தது குருதி.

குரங்கு இருந்த திசையில் பார்வையை ஓட்டிய சிங்கம், ''நீ சொல். என் குகை வாசல் பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றது.

வெலவெலத்து நடுங்கிக்கொண்டிருந்த குரங்கு, ''வாசலெங்கும் நறுமணம் கமழ்கிறது. காட்டிலுள்ள அவ்வளவு மலர்களையும் கொண்டுவந்து இங்கே கொட்டியது போல வாசம் கமகமக்கிறது'' என்றது.

''அநியாயத்துக்குப் புளுகுகிறாய். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்'' என்ற சிங்கம் மிகப் பலமாகக் குரங்கை எட்டி உதைத்தது.

அரண்டுபோன குரங்கு உருண்டு புரண்டு ஒரு புதரின் மீது விழுந்தது.

சுற்றுமுற்றும் பார்வையை நகரவிட்ட சிங்க ராஜா மற்ற விலங்குகளுக்கிடையே பதுங்கியிருந்த நரியிடம், ''நீ சொல்'' என்றது.

கொஞ்சமும் தயங்காமல், சமயோசிதமாக, ''கடந்த நான்கு நாட்களாக எனக்கு ஜலதோசம் பிடித்திருக்கிறது'' என்றது.

நரியின் புத்திசாலித்தனத்தை மெச்சிய சிங்கம் அந்தக் கணம் முதல் நரியைத் தன் அந்தரங்க ஆலோசகராக நியமனம் செய்தது#

-இது பிரெஞ்சு மொழியில் வெளியான கதை. சூழ்நிலைக்கேற்பப் பொய் பேசிக் காரியம் சாதிக்கும் பிரெஞ்சு நாட்டு அரசியல்வாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக எழுதப்பட்டது இது[நன்றி: அறிஞர் க.ப.அறவாணன். நூல்: 'தமிழர்...சமுதாயம், கல்வி, அரசியல்'

இந்தப் பிரெஞ்சு நாட்டுக் கதை நம் நாட்டுக்கும் பொருந்துகிறதா?

புதன், 15 மே, 2019

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை!?!?!?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. 14 வயதில்[2009ஆம் ஆண்டு] அவளுக்குத் திருமணம் செய்வித்தார் அவளின் தந்தை.

கணவன் ஒரு நாள் காணாமல் போனான்; திரும்பி வரவேயில்லை.

தந்தையிடமே அடைக்கலம் தேடி வந்த அச்சிறுமியை ஒரு நபரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றார் விற்றான் அந்த ஆள். வாங்கியவன் அவளை வீட்டு வேலைகளுக்கு அனுப்பினான்.

வீட்டு உரிமையாளர்களும் அவர்களின் நண்பர்களும் அந்தப் பாவப்பட்ட பெண்ணைத் தொடர்ந்து வன்புணர்வு செய்தார்கள்.

நிராதரவான நிலையில் இப்படிப் பல ஆண்டுகள்[24 வயதுவரை] சீரழிக்கப்பட்டு, உடம்பும் மனமும் சிதைந்து உருக்குலைந்துபோன நிலையில், தெரிந்த ஒருவரின் வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள் அவள். ஆனால், உயிர் பிரியவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்த அனாதையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை தொடர்கிறது[ஊடகச் செய்தி 15.05.2019].

முகம் தவிர உடலின் தோல் முழுதும் உரிந்து தாங்கொணாத மரண வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாவப்பட்ட பெண் சொல்கிறாள்.....

''நான் இறக்கவே விரும்புகிறேன். வேறு எந்தவொரு பெண்ணும் என்னைப்போல் வாழ்நாளெல்லாம் வதைபடக் கூடாது.'' 

அவள் கடந்த காலத்தில் ஆடவர்களால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விவரித்தாள். இறுதியில், அவள் சொன்ன சில வார்த்தைகள் காலமெல்லாம் நம் நெஞ்சை வதைத்துச் சிதைக்க வல்லவை. அவள் சொன்னாள்.....

''நான் முற்றிலுமாய்க் கருகிவிட்டேன். இனி யாரும் என்னைப் பலாத்காரம் செய்ய முடியாது.''

'திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை' என்பது நம் முன்னோர் வாக்கு. நம் மக்கள், காலங்காலமாய்க் கணக்கு வழக்கில்லாமல் பல தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். அவற்றில் எந்தத் தெய்வம் இம்மாதிரி திக்கற்ற பெண்களுக்குத் துணை புரிந்தது? புரிகிறது?

யாருக்குக்கேனும் தெரியுமா?

வாரம் தவறாமல் பக்கம் ஒதுக்கி ஆன்மிக நெறி பரப்பும் இதழாளர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா??

சாதாரண ஒரு மனிதர் சாட்சாத் முழுமுதல் கடவுளாகவே இந்த மண்ணில் நடமாடினார் என்று  ஓயாமல் கதை திரிக்கும் அந்த நம்பர் 1 பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா?

மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே மனிதகுலம் வாழும் என்பதை மறந்து, நாளும் சாமி தரிசனம், அபிஷேகம், ஆராதனை என்று அலையும் கோடானுகோடி பக்தர்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமே, சொல்வார்களா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------