ஞாயிறு, 22 மார்ச், 2020

எழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்!

தினமலரில்,  நீங்கள்[எழுத்தாளர் இந்துமதி] அண்மையில் எழுதிய ஆன்மிகக் கட்டுரையின்[தொடர்] இறுதிப் பகுதி இது.

பக்தர் குலசேகரர், செத்தப்புறம் கிருஷ்ணனின் திருநாமத்தை உச்சரிக்க முடியாது என்பதால் உயிரோடு இருக்கும்போதே அதை உச்சரிச்சி அவரோட திருவடியை அடையணும்னு ஆசைப்படுறார்.

“என்னை நினப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள்”னு அந்தக் கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனிடம் சொல்றாரு.

சரி.....

அவர்[கிருஷ்ண பரமாத்மா] எங்கே இருக்கிறார்? எவ்வளவு காலமா அங்கே இருக்கிறார்?  இங்கிருந்து அவர்கிட்டே போனவங்க எவ்வளவு பேர்? அவ்வளவு பேரும் வெறும் ஆவியா அவரைச் சுத்திச் சுத்தி வருவாங்களா? எந்தெந்த உருவில்  வேறே என்னவெல்லாம்  செய்யுறாங்க? எவ்வளவு காலத்துக்கு அங்கே இருப்பாங்க? அப்புறம் அவங்க கதி என்ன?

இப்படி விடை தெரியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுகளைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காம பலரும் எழுதினாங்க. இப்பவும் இம்மாதிரி ஆன்மிகக் குப்பைகளைக் கிளறுறதுக்கின்னே ஆட்கள் இருக்காங்க. ஆகையால்.....

நல்ல நாவல் ஆசிரியை என்று புகழ் பெற்ற நீங்கள் இனியும் அவை போன்ற நாவல்களை எழுதலாம். அன்புகொண்டு  குப்பை கிளறும் வேலையைத் தொடராதீர்கள். 



சனி, 21 மார்ச், 2020

கரோனாவை ஒழிக்க, ‘சாயி’ பக்தர்கள் காட்டும் வழி!!!

#மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் வாழ்ந்த சாய்பாபா, அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, நன்மைகளைச் செய்தார்.

1910ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் ‘காலரா’ நோய்த் தொற்று வேகமாகப் பரவியதில் பலர் உயிரிழந்தனர்.

இதனை அறிந்த[காலரா பரவுவதற்கு முன்னரே பகவான் இதை ஞானக்கண்ணால் அறிந்து தடுக்கத் தவறியது ஏன் என்று புரியவில்லை] பகவான் சாயிபாபா, மக்களிடம்.....

‘திருகு கல்லில் கோதுமையை அரைத்து, அந்த மாவை ஊரின் நான்கு திசைகளிலும் கொட்டுமாறு கூறினார். மக்களும் செய்தார்கள். காலரா முற்றிலும் காணாமல் போனது#
இப்படிச் சொல்பவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, பகவான் சத்திய சாய்பாபா பக்தர்கள்.

இதை இப்போது நினைவுகூர்ந்த அவர்கள்,  உலகில் வெகு வேகமாகப் பரவிவரும் ‘கரோனா’ வைரஸைக் கட்டுப்படுத்தவும், பாபா காட்டிய இந்த வழிமுறையைப் பின்பற்ற எண்ணினார்கள்.

பாபா கோயிலில், திருகு கல் வைத்துக் கோதுமையை அரைத்து மாவாக்கி, அதனை நான்கு சாலைச் சந்திப்புகளில் தூவியிருக்கிறார்கள். இதன்  மூலம திருச்செங்கோடு வட்டாரத்தில் கரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது!!!

இச்செய்தியை, இன்றைய ‘தமிழ் இந்து’[21.03.2020] நாளிதழ் வெளியிட்டுள்ளது.  இதனை ஆட்சியாளரும் முக்கிய அதிகாரிகளும் வாசித்து அறிந்திருப்பார்கள். உடனடியாக, சாயி பக்தர்கள் காட்டிய இந்த வழிமுறையை உலகெங்கிலும் உள்ள நாட்டு அரசுகளுக்கெல்லாம்  அவர்கள் அறிவிப்பார்களேயானால்.....

அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, கோதுமை மாவு அரைத்து, விமானங்கள் மூலம் உரிய முறையில் உலகம் முழுதும் தெளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். அதன் விளைவாக, ஒட்டுமொத்த உலகையும் நடுநடுங்கச் செய்துகொண்டிருக்கும் கரோனா என்னும் அரக்கன் அழித்தொழிக்கப்படுவான் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!

அறிவிப்புச் செய்வார்களா?