புதன், 6 மே, 2020

இசைஞானி, ஒரு ‘தத்துப்பித்து’த் தத்துவ ஞானி!!!

 'தி இந்து' பப்ளிஷிங் குரூப்’புக்காக,  சுப்ரமணியன் என்பவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு நேர்காணல் மேற்கொண்டார். நேர்காணல் ரமணாசிரமத்தின் வளாகத்தில் நடைபெற்றது[இந்து தமிழ் நாளிதழ்[06.05.2020]. 
https://www.hindutamil.in/news/blogs/553093-ilaiyaraja-interview-about-ramana-maharishi.html
நேர்காணலில் இந்த இசைமேதை, திருவண்ணாமலை ரமணர் குறித்து உதிர்த்த கருத்துகளின்[தத்துவங்கள்] சாராம்சத்தைச் சில வரிகளில்[ஒன்றன் பின் ஒன்றாக] உங்கள் முன் வைக்கிறேன். கூடவே அவற்றிற்கான என் விமர்சனமும்.
ஞானி: “பகவான் ரமணர் என்பவருக்குத் தேகம் என்பது கிடையாது. பிற யோகிகள், சித்தபுருஷர்களுடன் பகவானை ஒப்பிட முடியாது. அவர் எப்போது ஞானத்தை அடைந்தாரோ, அந்தத் தருணத்திலிருந்தே அவர் தன் தேகத்தில் வாழவில்லை. பகவான் அவரது உடலாக இல்லை”
நான்: தேகத்துடன் வாழாமல் சூக்கும சரீரத்துடன் வாழ்ந்தாரா? உண்டது, தின்றது, பேண்டது எல்லாமே சூக்கும சரீரத்துடன்தானா? அந்தச் சரீரத்தைத்தான் நீர் அவ்வப்போது தரிசனம் பண்ணினீரா? உளறுவதற்கு ஒரு வரம்பே இல்லையா ராசா?
ஞானி: “பகவான் 16 வயதில், தன்னறிவை எட்டிய பின்னர், ஒரு நொடிகூட அவர் அடைந்த ஞானத்திலிருந்து வழுவவேயில்லை”
நான்: அதென்ன ஞானம்? மனதைத் தொட்டுச் சொல்லும், அதைப்பற்றி ஒரு நூறு சொற்களில் உம்மால் விளக்கம் தர முடியுமா? அவரை ஞானி என்கிறீர். ஒருவர் ஞானி[?] ஆயிட்டா அவர் அப்புறம் எப்பவும் ஞானிதான். வழுவுறது ஏது?
இசை ஞானின்னு பேர் வாங்கினதிலிருந்து[நீர் இந்தப் பட்டத்துக்குத் தகுதி உடையவர்தான்] உம்மை நீரே தத்துவ ஞானின்னு கற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டீர். மனம் போன போக்கில் நீர் பிதற்றுவதற்குக் காரணம் இதுதான். 
ஞானி: “நான் யார்?” என்ற கேள்வி மற்ற துறவிகளின் வாழ்க்கையில் எழவே இல்லை.
நான்: ஒருவரைத் துறவி ஆக்குகிற முதல் கேள்வியே இந்த “நான் யார்?”தான். இந்த மண்ணில் வாழ்ந்த துறவிகளைப் பத்தி உமக்கு எதுவுமே தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிச் சித்தம் கலங்கிப் பேசியிருக்க மாட்டீர்.
ஞானி: பகவான், பகவான் தான். அவர் பரம்பொருள். அவர் சர்வேஸ்வரன்.
நான்: அடப்பாவி மனுசா, மதவாதிகளால் உருவாக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களால் வழிபடப்படுகிற அத்தனை கடவுள்களுக்கும் ‘வேட்டு’ வைத்துவிட்டீரே! 

செவ்வாய், 5 மே, 2020

கிழ வயதில் உடலுறவு!

//சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உடலுறவுக்கும் உடல் நலத்துக்கும் தொடர்பு உண்டா என்பதை அறிய, ரஷ்ய விஞ்ஞானிகள் எலிகளை வைத்து[பாவப்பட்ட ஜென்மம்] ஒரு பரிசோதனை நடத்தினார்கள்.

40 எலிகளை, குழுவுக்கு 20 என்ற வகையில் இரண்டாகப் பிரித்தார்கள். ஒரு குழுவை ‘அ’ என்றும் இன்னொன்றை ‘ஆ’ என்றும்  வகைப்படுத்தினார்கள்.

‘அ’வில் உள்ள ஆண், பெண் எலிகளை உடலுறவு கொள்ள இயலாத வகையில் தடுத்து வைத்தார்கள்.

இதற்கு மாறாக, ‘ஆ’வில் உள்ள எலிகளை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் முழுச் சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தார்கள்.

சிறிது காலம் கழித்து அனைத்து எலிகளையும் பரிசோதித்ததில்.....

‘அ’வைச் சார்ந்த எலிகளை விடவும் ‘ஆ’ எலிகள், உடலுறவு சுகம் அனுபவித்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததோடு நீண்ட ஆயுளையும் பெற்றிருந்தன.

எனவே,

1.உடலுறவு கொள்வது மனிதர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கிற செயலாகும்.

2.உடலுறவு அவர்களின் வாழ்நாளை அதிகரிக்கிறது.

3.உடலுறவை வயதுடன் இணைத்துப் பார்ப்பது தேவையற்றது. இதற்கு வயது ஒரு தடையே அல்ல//

இப்படிச் சொல்கிறவர், முதியோர் மருத்துவப் பணிக்காக டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவரும், 1978இல் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முதியோர் நலப் பிரிவைத் தொடங்கியவரும், முதியோர் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரும், முதியோர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியவரும் ஆன டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்கள்.

இவர்தம் பரிந்துரை, அனைத்து வயதுக் கிழவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால், “சீ...ச்சீ...சீய்... இந்த வயசில் இதெல்லாம் தேவையா?” என்பார்களே, அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவிகளாக வாய்த்த நம்ம ஊர்க் கிழவிகள்!? 

கிழவர்கள் வேறு வகையில் உடலுறவு சுகம் தேடுவதும் நம் பண்பாட்டுக்கு எதிரானதாயிற்றே!

பாவம் நம்ம ஊர்க் கிழவர்கள்!