திங்கள், 7 செப்டம்பர், 2020

தற்கொலை முயற்சியும் தப்பிப் பிழைப்பவர்கள் படும்பாடும்!!!

#"உடலில் தீ வைத்துக் கொள்பவர்களுக்கு அதனால் ஏற்படும் காயங்களைப் பொருத்துச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீக்காயங்கள் முதல், இரண்டாம், மூன்றாம் டிகிரி என்று வகை பிரிக்கப்படுகிறது. இதில் மூன்றாம் டிகிரித் தீப்புண் ஏற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவம் தீக்காயத்தால் சேதமடைந்த ரத்தக்குழாய்கள் வழியே வெளியேறிவிடும். ரத்த அழுத்தம் குறைந்து, சிறுநீரகம், இதயம், இரைப்பை போன்றவை பாதிக்கப்படும்.

தசையோடு ஒட்டிய தசைநார்கள், நரம்புகள் போன்றவையும் பாதிக்கப்படுவதால் கைகால் தசைகள் இறுக்கமாகிவிடும். விரல்கள் மற்றும் கைகளை அசைக்க முடியாது. குடலில் ஏற்படும் புண்ணால் உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் நீண்ட நாட்கள் வேதனைப்பட வேண்டியிருக்கும்.

தீக்காயத் தழும்புகள் ஆற வெகுநாட்கள் பிடிக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தாலும் வாழ்நாள் முழுவதும் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

தங்கள் உருவத்தைப் பார்த்து இவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். சிலர் அமிலத்தை(Acid)க் குடித்துவிடுவார்கள். தொண்டையில் புண், வீக்கம் ஏற்படுவதால் மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, அடிவயிறு வலி, ரத்த வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படும். உணவுக்குழாய், இரைப்பைகளில் புண் ஏற்பட்டுச் சாப்பிடவே முடியாத நிலை ஏற்படும். மேற்புறத்தோல், கண்களில் ஏற்பட்டுவிட்ட புண், கொப்புளங்கள் ஆகியவை பயங்கரமான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, சிலருக்குக் கண் பார்வையே பறிபோகும் அபாயம் உண்டு.

தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயற்சிசெய்தால் கயிறு இறுக்கி கழுத்து எலும்பு உடைந்துவிடும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுவதால் மயக்கமடைந்துவிடுவார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்கள் அடைபட்டு ரத்த ஓட்டம் நின்றுவிடும். அவர்களை உடனே காப்பாற்றி உயிர்பிழைக்க வைத்தாலும், நினைவுத்திறன், மூளைச் செயல்பாட்டுத்திறன் குறைய வாய்ப்புண்டு. முன்புபோல் அவர்களால் பணியில் திறம்படச் செயல்பட முடியாது.

உயரமான கட்டிடங்களிலிருந்து விழுபவர்களின் உடலில் கை, கால் எலும்புகள் முறிந்துவிடும். சிலருக்கு முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு. வாழ்க்கையே முடங்கிப்போவதுண்டு. 

சிலர் மணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயைத் துண்டித்துக்கொள்வார்கள். அதிக அளவில் ரத்தம் வெளியேறி, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இவர்களுக்கு நரம்புப் பாதிப்புகள் ஏற்படலாம்.

விவசாயத்துக்கு உபயோகிக்கும் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் குடித்தவர்களைக் காப்பாற்றுவதில் 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உண்டு. உயிர் பிழைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் நோய்ப் பாதிப்பால் அவதிப்படுவார்கள். 

இப்படி எந்த முறையில் தற்கொலைக்கு முயற்சித்தாலும், உயிர் பிழைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்படைவதை எண்ணியாவது தங்களை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிடவேண்டும்.

ஏதேனும் பிரச்னை என்றால் தங்களுக்கு நம்பகமானவர்களிடம் அதுபற்றி சொல்ல வேண்டும். தேவைப்படுகிறவர்களிடம் தயங்காமல் உதவிகள் கேட்க வேண்டும். உளவியல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சாவதற்கு நூறு வழிகள் இருக்கும்போது, வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்காதா என்ன?’’ என்கிறார் ஸ்னேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனரும், அறங்காவலருமான லஷ்மி விஜயகுமார். 

தகவல்: என்.ஹரிஹரன்#

நன்றி: குங்குமம் ‘டாக்டர்’ http://www.kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2219&id1=140&issue=20180101

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

விலங்குகளைவிடவும் இழிந்தவர்களா கடவுள்கள்?!?!

ஆண் சிங்கம் தனக்குப் பிடித்தமான துணை கிடைக்கும்வரை தனித்தே வாழும். பிரியத்திற்குரிய துணை கிடைத்து, குட்டிகளை ஈன்றெடுத்த பின்னரும் வேறு பெண் சிங்கங்களைத் தேடி அலைவதில்லை. இணைந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரிக்கப்பட்டுத் தனித் தனியே வாழும் சூழலிலும்கூட, இவை இரண்டும் வேறு துணையை நாடுவதில்லை.

சிங்கம் என்றில்லை, நரிகூட, தன் துணையைத் தவிர உடலுறவுச் சுகத்துக்காக வேறொரு நரியைத் தேடி அலையாது.

கழுகு, இன்னொரு கழுகுடன் இணை சேர்ந்த பிறகு வாழ்நாளெல்லாம் பிறிதொரு கழுகைத் தன் துணையாக்கிக் கொள்வதில்லை.

பறவைகளில் புறாவும்கூட, தன் இணையுடன் மட்டுமே கலவி புரியும்.
சங்க கால இலக்கியங்களால் பேசப்படும் ‘அன்றில்’ பறவை, தன் துணை இறந்துவிட்டால் உயர உயரப் பறந்து, ஒரு நிலையில் இறக்கைகளை அசைக்காமல் தலைகுப்புற விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் என்பது செய்தி. 

சிட்டுக்குருவிகளும்கூட ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்பவைதான்.

இவை போல, இல்லற வாழ்வில் தடம் பிறழாத இன்னும் பல விலங்குகளும் பறவைகளும் இருத்தல்கூடும்.

மேற்குறிப்பிட்ட  உயிரினங்களிடம் உள்ள இந்த ‘ஒழுக்கம்’ நம்மவர்கள் கோயில் கோயிலாகச் சென்று வழிபடும் ‘கதைக்கப்பட்ட’ பல கடவுள்களிடம் இல்லை.

சிந்திக்கவே விரும்பாத நம் மக்களில் பலரும், ஆன்மிகர்கள்[‘கடவுள் ஒருவரே’ எனப்படும் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள்] சொல்லிச்சென்ற ஆபாசக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு கோயில்களில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலைகளையும், வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் கண்டு கண்டு ரசிக்கிறார்கள்; கழிபேருவகை எய்துகிறார்கள்.

கற்பைக் கடைச்சரக்காக்கிய சாமிகளையெல்லாம் தேடிப் போய்க் குறை நேர்வதும் ஒழுக்கம் கெட்டதுகளிடம் அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை எதிர்பார்ப்பதும் தவறு என்பது இன்றளவும் அவர்களுக்குப் புரியவில்லை; புரிந்துகொள்ள அவர்கள் தயாராகவும் இல்லை.

ஆனால்.....

மூடர்கள் கட்டிவிட்ட கதைகளையும், மூடநம்பிக்கைகளையும் கண்டிப்பவர்களை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அசிங்க அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்ட கடவுள்களைப் பட்டியலிடுவதற்கோ, அவர்களை வழிபடுபவர்களைச் சாடுவதற்கோ இப்பதிவை நான் எழுதவில்லை[இப்பணியை ஏற்கனவே பல சிந்தனையாளர்கள் செய்திருக்கிறார்கள்].

‘விலங்குகள், பறவைகள் போன்ற உயிர்களிடத்தில் உள்ள சில ஒழுக்க நெறிகள், பெரும்பான்மை மக்களால் வழிபடப்படுகிற, கற்பிக்கப்பட்ட பல கடவுள்களிடத்தில் இல்லை!!!’ என்பது மட்டுமே இதைப் பதிவிட்டதன் நோக்கம் ஆகும்.
===============================================================