திங்கள், 21 டிசம்பர், 2020

"போய்யா...நீயும் உன் கடவுளும்"!

அமேசான் கிண்டிலில் இடம்பெற்றுள்ள என் நூல்களில் 'பத்து ரூபாயில் கடவுள்' என்னும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அதிலுள்ள முதல்[முதல் தரமானதும்கூட] கதைக்கான தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. தலைப்பை மட்டும் மாற்றியமைத்து["போய்யா நீயும் உன் கடவுளும்"] ஏற்கனவே வாசிக்காதவர்களின் வாசிப்புக்காகப் பதிவு செய்துள்ளேன்.

சிக்குப் பிடித்த தலைக்குச் சீகக்காய் தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களில் கணிசமானவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப்போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, இவர்களில் பலரும் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறியவர்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்.

கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய்[அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு அவர்கள்  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான். 

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்கமாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காக முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. 

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனைவானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய் கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?

அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.

பார்வையை அலையவிட்டதில்,  நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நான் நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.

''இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

''கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”

“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.”[கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].

“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?

ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”

“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” 

“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே... போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

குற்றங்களும் கடந்த காலக் கொடூரத் தண்டனைகளும்!!!

சிலுவையில் அறைதல்:
சிலுவையில் அறையப்படுவது பண்டைய மரணதண்டனை முறைகளில் மிகவும் கொடூரமானது என்று அறியப்பட்டுள்ளது. இது கிமு 6ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்தது. முக்கியமாக, செலூசிட்ஸ், கார்தீஜினியர்கள், பெர்சியர்கள் மற்றும் ரோமானியர்கள் இந்தத்  தண்டனை முறையைப் பின்பற்றி வந்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெரிய மரச் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கவிடப்படுவார். இறக்கும்வரை ஊணுறக்கமின்றிச் சித்ரவதைப்படுவார். ஏசுவுக்கு இததண்டனை அளிக்கப்பட்டதென்பது யாவரும் அறிந்ததே.

தோலை உரிப்பது: 

இது இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த தண்டனையாகும். தோல் உரிக்கப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவர் உயிருடன் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல் அகற்றப்பட்ட பிறகு, தண்டனைக்கு உட்படுத்தபட்டவர் தூக்கி எறியப்படுவார்கள். வலியை அதிகரிக்க உப்பு போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இத்தண்டனை வழக்கத்தில் இருந்தது.

நொறுக்கும் சக்கரம்:

இத்தண்டனை மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது. கிரேக்கத்தில் உருவாக்கப்பட்ட இது, அங்கிருந்து பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சுவீடன் போன்ற பிற நாடுகளிலும் பரவியதாகச் சொல்லப்படுகிறது. 

நீண்டதொரு மரச் சக்கரத்தில் தண்டிக்கப்படுபவரின் உறுப்புகள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கும். அவருடைய எலும்புகள் அனைத்தையும் உடைக்க, சக்கரத்தின் இடையிடையே சுத்திகளும் இரும்புக் கம்பிகளும் பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட நேரம் சித்திரவதைப்பட்டுத்தான் அவர் சாக வேண்டும்.

குடலை உருவுதல்:

திருடர்கள் மற்றும் விபச்சாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது. குடலும் மற்ற முக்கிய உறுப்புகளும் ஒவ்வொன்றாக உடலில் இருந்து அகற்றப்படும். இது இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜப்பானில் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

கழுமரம்:

இது 15ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. கூர்மையான கம்பத்தில் உட்காரும்படி தண்டனைக்குரியவர் கட்டாயப்படுத்தப்படுவார். அது, மலக்குடல் வழியாகவும், யோனி வழியாகவும்,  வாய் வழியாகவும் துளையிட்டு வெளியேறும். இரத்தப்போக்கும் காயங்களும் ஏற்பட்டுத் தண்டனைக்குரியவர்  உயிர் துறப்பார். 

இது ரோமானியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் மற்றும் துருக்கியர்களுக்கு மிகவும் பிடித்தமான தண்டனை முறையாகும். இது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. தமிழகத்தில் சமணர்களையும் பௌத்தர்களையும் சித்ரவதை செய்து கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

யானை மிதித்தல்:

குற்றம் சாட்டப்பட்டவர் கனமான கல்லோடு பிணைக்கப்பட்ட நிலையில், யானையால் மிதிபட்டு உடல் நசுங்கிச் சாவார். இத்தண்டனை முறை 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியராலும் வியட்நாமியராலும் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது.

தொங்கவிட்டுத் துண்டித்தல்:

ஸ்பெயினில் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் தலைகீழாக தொங்கவிடப்படுவார். ஒரு பெரிய கத்தி கொண்டு அவர் இரண்டாக அறுக்கப்படுவார். இறுதியில் தலையும் பிளக்கப்படும். தலை துண்டிக்கப்படும் வரை அவர் உயிருடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். 

ஆயிரம் வெட்டுகள்:

"நீடித்த மரணம்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" என்றும் சீனாவில் லிஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது கி.பி 900இல் குற்றவாளிகளைத் தண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான தண்டனையாகும். இந்த முறையில் ஒருவரின் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு சாகும்வரை வெட்டப்படும்.  வெகுஜனக் கொலை, எஜமானரைக் கொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அரசர்கள் மக்களை அச்சுறுத்துவதற்காக இதைப் பயன்படுத்தினர். சில சமயங்களில் சிறு குற்றங்களுக்காகவும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சில பேரரசர்கள் இந்தத் தண்டனையைத் தங்கள் எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

நம் கேள்வி:

விதம் விதமானதும் படுபயங்கரமானதும் கொடூரமானதுமான தண்டனை முறைகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிபுத்திசாலித்தனத்தை மனிதனுக்குக் கற்பித்தவர் யார்?

வேறு யார்? அவரேதான்! அவரின்றி அணுவும் அசையாதே!!

ஹி>>>ஹி>>>ஹி!!!

===============================================================

உதவி: https://tamil.boldsky.com/