சனி, 27 பிப்ரவரி, 2021

'மனிதன்-விலங்கு'...கலப்பின உயிர் ஆய்வில் ஜப்பான் விஞ்ஞானிகள்!!!


//ஆய்விற்காக, 'மனித- விலங்கு' கலப்பினக் கருவை உருவாக்கும் ஜப்பான் ஆய்வாளர்களின் முயற்சிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விண்வெளி ஆய்வு உள்ளிட்டவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில், இதுபோன்ற கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் முன்பு சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது[என்ன ஆயிற்று?].

இது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால். பல நாடுகளில் இதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த ஆய்வின் மூலம் மனிதர்களுக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யும்போது, தேவையான உறுப்புகளை விலங்குகளின் கருக்கள் மூலமாக வளர்த்தெடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த 'மனிதன் – விலங்கு' கலப்பினக் கருவை உருவாக்க வேண்டும் என்ற ஜப்பான் ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன//[https://www.sathiyam.tv/jeppan-government-approved-human-and-animal-reasearch/ -01/08/2019 9:42]

எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தால் எதிர்க்கிறார்கள் என்பது பற்றியோ, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரிக்கிறார்கள் என்பது பற்றியோ இக்கட்டுரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

கூரு கெட்ட கடவுள், வதவதன்னு தேவையே இல்லாமல் கோடானு கோடி உயிர்களைப் படைத்து இந்த உலகைப் பெரிய போராட்டக் களமாக ஆக்கி வைத்திருக்கிறார். கோடிகளில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதுதான் நம் எண்ணம்.

ஜப்பான் ஆய்வாளர்களின் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்!

புதன், 24 பிப்ரவரி, 2021

சில நேரங்களில் சில பெண்டாட்டிகள்![சிரிக்கவும் சிந்திக்கவும்]

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

”போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.

======================================================================================
பழைய ராணி வார இதழில் வெளியான என் கதை