வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பெரியார் பெயர் மாற்றம்... 'சீண்டல்' தொடரும்!!!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்பது பெரும்பான்மைக் கருத்துக்கணிப்புகளின் வாயிலாக அறியலாகும் செய்தி.

இச்செய்தி, பெரியார் நெடுஞ்சாலைப் பெயர் மாற்றத்திற்குக் 'காரணமானவர்களை'ப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் முயற்சி ஏறத்தாழத் தோற்றுவிட்ட நிலையில், வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு, அக்கட்சியை ஆள விடாமல் தடுப்பதற்கான அவர்களின் முதல் கட்ட நடவடிக்கையே இந்தப் பெயர் மாற்றம்[பெரியார் பெயர் அழிப்பு] ஆகும்.

தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் ஏமாளிகள். பெயர் மாற்றம் போன்ற 'சீண்டல்' வேலைகளைத் தொடர்ந்தால் அவர்கள் போராட்டக் களத்தில் இறங்குவார்கள்.

சீண்டிக்கொண்டே இருந்தால், மத்திய அரசை எதிர்த்து அடிக்கடி அவர்கள் போராட்டம் நடத்துவார்கள். அடிக்கடி நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, 'அமைதியை நிலைநாட்ட வேறு வழியில்லை' என்று சொல்லி, தி.மு.க. ஆட்சியைப் பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.

அந்த ஆறு மாத காலத்தில், தமிழருக்கான அடையாளங்களில் எதையெதையெல்லாம் அழிக்க முடியுமோ அதையதையெல்லாம் அழித்து முடித்து, அவர்களின் இன உணர்ச்சி, மொழிப்பற்று முதலானவற்றை முற்றிலுமாய் மழுங்கடிக்கும் வேலையைக் கச்சிதமாக 'அவர்கள்' செய்து முடிப்பார்கள் என்பதை நம்மவர்கள் மறந்துவிடவே கூடாது.

                                                *                        *                                *                      

#Oneindia Video Tamil Team Published : April 16, 2021, 10:00 Duration : 01:04 சென்னை: இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு! சென்னை: இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு!# -இது இன்று வெளியான செய்தி.

இச்செய்தி உண்மையாக இருப்பின், 'அவர்கள்' திருந்திவிட்டார்கள் என்னும் நம்பிக்கையில், தமிழர்கள் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிடக் கூடாது என்பதே நம் போன்றோர் செய்யும் எச்சரிக்கை!

https://tamil.oneindia.com/videos/sennai-iravil-meendu-m-vanthar-beriyar-marrappattathu-kirand-vesdan-dirang-rodu-dhnt-1495648.html

வியாழன், 15 ஏப்ரல், 2021

ஆசீர்வதிக்கும் நாயும் ஆறறிவு அறிவிலிகளும்!!!

#மகாராஷ்டிரா மாநிலத்தில்  'சித்தாதேக்' என்று ஓர் ஊர். அந்த ஊரில் சித்திவிநாயகர் கோயில் உள்ளது.

அந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் ஓர் உயரமான மேடை. அதில் ஒரு நாய்  அமர்ந்திருக்கிறது. 

கோயிலில் இருந்து வெளியே வரும் பக்தர் ஒருவர் நாய்க்கு முன்னால் வளைந்தும் தலை குனிந்தும் நிற்கிறார். பதிலுக்கு அந்த நாய் அவரின் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சைகை செய்கிறது. 

கோயிலில் இருந்து வெளியேறும் வேறு சில பக்தர்கள் அந்த நாயிடம் கைகளை நீட்டுகிறார்கள். பதிலுக்கு அந்த நாயும் அவர்களுக்குக் கை கொடுக்கிறது. 

இந்த நிகழ்வுகளை, 'அருண் லிமாடியா' என்னும் நபர், காணொலி[வீடியோ]யாகப் பதிவு செய்து  சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்#

-இவ்வாறானதொரு செய்தியை, ஆன்மிகம் வளர்ப்பதில் அரும்பணி ஆற்றுகிற இரு  நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன[ஜனவரி மாதச் செய்தி].

'கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்: வைரலாகப் பரவும் வீடியோ' -இது தினமலர் தந்துள்ள தலைப்பு.


'கோயிலுக்கு வெளியே.. தலைக்குமேல் கால் வைத்து.. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஆச்சர்ய நாய்' -இது 'one india' வின் தலைப்பு.

'வெறுமனே செய்திகளை வெளியிடுவதோடு ஊடகங்களின் கடமை முற்றுப்பெறுகிறதா?' என்னும் கேள்வியை இங்கே தவிர்க்க இயலவில்லை.

ஒரு செய்தியைப் பதிவு செய்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையைக் கண்டறிதல் செய்தியாளர்களுக்கான கடமை அல்லவா? இதை அந்தச் செய்தி நிறுவனங்கள் மறந்தது ஏன்?

உயிரினங்களில் மனித இனத்தையடுத்து,   குறிப்பிடத்தக்கப் புத்திசாலித்தனம் வாய்க்கப்பெற்றது நாயினம். முறையான பயிற்சி மூலம்  சில வகை நாய்கள் அரிய செயல்களைச் செய்து நம்மை வியக்க வைப்பது யாவரும் அறிந்ததே.[ஒரு காணொலி கீழே].

காலால் தலையைத் தொடுவதற்குப் பயிற்சி கொடுத்து, கோயிலின் நுழைவாயில் மேடைதனில் இருக்கவைத்து, அதைக் காணொலியாகவும் பதிவு செய்து, பக்தர்களை அது ஆசீர்வதிப்பதாக நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்  இந்த அருண் லிமாடியா.

இத்தனைக் காலமும், விதம் விதமான கடவுள்களும், அவர்களுக்கு இணையாக மதித்துப் போற்றித் துதிபாடப்பட்ட மகான்களும் வழங்கிய ஆசீர்வாதங்களால் முழுத் திருப்தி கிடைக்காமல், நாயிடம் ஆசீர்வாதம் பெறத் தலைப்பட்டுவிட்டார்களா பக்தகோடிகள்?!

குனிந்து கும்பிடுவோரின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிற இந்த நாய்.....

பகவானா, மகானா?!

                *                           *                                  *                                      *                              *

காணொலி:

https://www.youtube.com/watch?v=BWiloZnvXJI&authuser=0

======================================================================================

https://tamil.oneindia.com/news/mumbai/viral-video-of-dog-blessing-devotees-and-shakes-hands-outside-temple-in-maharastra/articlecontent-pf514719-408737.html  13 ஜன., 2021 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2688602   Updated : ஜன 12, 2021  20:23 |  Added : ஜன 12, 2021  20:22 |