புதன், 12 மே, 2021

மனித இனத்தின் அழிவு மிக அருகில்!!!

இந்தப் பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் ஏற்கனவே பல 'பேரழிவு'களில் அழிந்துவிட்டன. பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை.

எல்லாப் பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனித இனத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் அதன் அழிவு தவிர்க்க முடியாதது.

மனித இனம் அழியும் என்பதில் அறிவியல் அறிஞர்களுக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்.

அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். 

அழிவுக்கான காரணங்கள்:

மக்கள் தொகைப் பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கும் என்பது அவர் வாதம்.

பூமி? 

அழியாது. மனித இனம் அழிந்த பிறகும் இந்தப் பூமி இருந்துகொண்டே இருக்கும்.

மனித இனம் அழியும்போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினங்களும், செடி கொடிகளும்கூட அழிந்துவிடக்கூடும்.

அழிவில்லாதவை:

மனிதனின் அழிவுக்குப் பிறகு, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்படுவதால், பூச்சிகள் பல்கிப் பெருகும்.

பூச்சிகள் பெருகப் பெருக அவற்றை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள், ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவுச் சங்கிலியில் உள்ள அனைத்துக் கண்ணிகளும் பெருகிட வாய்ப்புள்ளது.

மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர் பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார் வைஸ்மேன் என்னும் அறிஞர். ஆடுகளும் மாடுகளும் மெல்ல மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை மட்டும் தப்பி வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

ஆறாம் அறிவு[சிந்திக்கும் திறன்]?

பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான் இது. புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது. அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு.

மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஜீன்கள் ஆரோக்கியமானவைதானா  என்பதை அளவிடுவதற்கும் புத்திசாலித்தனம் பயன்பட்டது.

இவ்வாறு பலவகையிலும் பயன்பட்ட மனிதனின் புத்திசாலித்தனம்[ஆறாம் அறிவு]கூட முற்றிலுமாய் அழிந்துவிடும்.

மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை. காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததைப் பாபூன் செய்யக்கூடும்[அதாவது, சிந்திக்கும் திறனை அவை பெறக்கூடும்]. ஆயினும், அவை நம்மைப் போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்திடக்கூடும்” என்று குறிப்பிடுகிறார் வைஸ்மேன்.

இந்தப் புவியின் எதிர்காலம்?

மனிதன் அழிந்த பிறகும் அவனால் உண்டாக்கப்பட்ட பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம்.

நாம் விட்டுச் செல்லவிருக்கும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள்கூட ஆகலாம். நாம் விட்டுச் செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.

நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம்.

பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் அந்த மின்காந்த அலைகளின் தாக்கமும் ஒரு காலக்கட்டத்தில் அழியும்.

                                   *                *                 *

2007ஆம் ஆண்டு வெளியான 'மனிதர்கள் அற்ற உலகம்'[அலன் வைஸ்மேன்] என்னும் புத்தகத்தில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக bbc கட்டுரையில்{https://www.bbc.com/tamil/science-53326369 [பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின்]-8 ஜூலை 2020} குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 மே, 2021

தாம்பூலம் தரித்தலும் தாம்பத்திய சுகமும்!!!

திருமணம், வழிபாடு என்றில்லாமல் மிகப் பெரும்பாலான குடும்ப நிகழ்வுகளில் வெற்றிலை மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

உண்ணும் உணவு எளிதில் செரிப்பதற்கு மட்டுமே பயன்படுகிற ஒன்று இது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு. பாக்கும் சுண்ணாம்பும் பிறவும் இணைந்த வெற்றிலையின் பயன்கள் ஏராளம் என்பதை அறியத்தருதலே இப்பதிவின் நோக்கமாகும்.


*வெற்றிலைக்குப் பல்வேறு மருத்துவக் குணங்களும், சக்திகளும் உள்ளன. வெற்றிலை ஒரு சிறந்த மூலிகையும் கூட. 


*வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும். வெட்டுகள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையைப் பயன்படுத்தலாம். 


*வெற்றிலையை அரைத்துப் பசையாக்கிக் காயங்களின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம். இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்


*இரைப்பையைச் சுத்தம் செய்வதற்கும் இது உதவுகிறது. இரைப்பையில் வலி ஏற்பட்டால் உடனடியாக வெற்றிலையை மென்று தின்றால் வலி குறையும்.


*வெற்றிலை அதிகப் பசியை ஏற்படுத்தும்; நிறையச் சாப்பிடத் தூண்டும் என்பதால் உணவு உண்பதில் எச்சரிக்கை தேவை. தவறினால் உடம்பில் சதை போடும் ஆபத்து உண்டு. எனவே, குண்டாக இருப்பவர்களுக்கு வெற்றிலை வேண்டாம். 


*இந்த இலை, வாயில் ஏற்படும் கிருமிகள், பாக்டீரியா போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. 


*இது, உணவிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும்; உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி, குடலைச் சுத்தமாக்கும்; உடலுக்கு உறுதி தரும்; சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.


* ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் மூளை நரம்புச் சிதைவு வேதிம நச்சுக் காரணிகளைச் சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கிறது வெற்றிலை. பாக்கின் மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. 


*வெற்றிலைச்சாறு குடற்பகுதியில் பயனுள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கிறது. பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கம் உணவு ஒவ்வாமையைப் போக்க உதவுகிறது. நோய் எதிப்பாற்றலை அதிகரிக்கிறது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும், கல்லீரலில் புரத உணவால் மிகுதியாகத் தேங்கும் அமோனியாவை வெளியேற்றிப் பாதுகாப்பு அளிக்கிறது.


*சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் இரத்தத்தில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மிகக்குறைவாக இருக்கும். இந்நிலையில் எலும்புப் பகுதியிலிருந்து கால்சியம் சத்து வெளியேறி இரத்தத்தில் சீரான அளவு இருக்க இது உதவுகிறது.


*வெற்றிலையை மெல்வது வாயைச் சுத்தப்படுத்தும். பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து இலையைக் கொதிக்கவைத்து அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவினால் அங்கு ஏற்பட்டுள்ள அலர்ஜி விரைவில் குணமடையும். மேலும் இது பெண்களின் பாலியல் ஆசையையும் தூண்டும். 


*சிறுநீரகக் கோளாறுகள் இருந்தால் அதனையும் சரிசெய்யும். வெற்றிலைச் சாற்றைத் தேனில் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மூளையைச் சுறுசுறுப்படையச் செய்யும். 


*'வெற்றிலையானது, ஆண்மையை வெகுவாக அதிகரித்து, படுக்கையறையில் சிறப்பாகச் செயல்படத் தூண்டுகிறது' என்கிறார்கள் அனுபவசாலிகள். 'இதில் உள்ள அமிலங்கள் காம உணர்ச்சியைப் பெருகச் செய்வதோடு விரைவில் விந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. தம்பதியர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது' என்கிறது ஓர் ஆய்வு.


ஆக, வெற்றிலை நமது பண்பாட்டின் அடையாளம் மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தின் அடிப்படையும் ஆகும் என்பதை ஒருபோதும் மறவாதீர். 


இனியேனும்,  வெற்றிலை குதப்புவது கிழடுகளுக்கானது என்று நினைக்காமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி மென்று சுவைத்து இன்புறுங்கள்! 

[கருத்துகள், பல தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை]

======================================================================

என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் உள்ளூர் நண்பர்: "ஏம்ப்பா, பதிவுக்கு வேறு பொருத்தமான தலைப்பு கிடைக்கலையா?"


நான்: "அது வந்து...ஹி...ஹி...ஹி!"