செவ்வாய், 25 மே, 2021

'அது'க்கு 'இது' தடையாக இருந்தால்.....!?!

#முட்டைகள் இட்ட பிறகு, அனைத்து முட்டைகளும் உடைந்து மீன் குஞ்சுகள் வெளியே வரும்வரை மீண்டும் இனப்பெருக்கம் செய்வதில்லை சில வகை மீன் இனங்கள். சில நேரங்களில், அனைத்து முட்டைகளும் உடையும் முன்பே தாய்க்கு இனப்பெருக்கம் செய்யும் ஆசை வருவதுண்டு. அம்மாதிரி நேரங்களில் உடையாத முட்டைகளை அதுவே விழுங்கி விடும். முட்டைகள் இல்லாததைக் கண்டு, ஆண் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முன்வரும்.

ஒரு சில பறவை இனம், 'கலவி' செய்வதற்கான வாய்ப்பு வரும்போது, தாமே முட்டையிட்டுப் பொறித்த குஞ்சு அதற்குத் தடையாக இருந்தால், அதைக் கொன்றுவிடுவது உண்டு#

[மேற்கண்ட தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு படித்தவை[ஆதாரங்களைக் குறித்து வைக்கவில்லை. வருந்துகிறேன்].

முன்பு படித்த இவை, அவ்வப்போது என் நினைவுக்கு வந்துபோவது ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்குத் தூண்டுதலாக அமைபவை ஊடகங்களில் வெளிவரும் கணிசமான செய்திகள். அவற்றில் சில.....

*'அவரின் மனைவிக்கு, குன்.....[ஊர்ப் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது] உள்ள பிரியாணிக் கடையில் பணியாற்றி வந்த ஒருவருடன் கள்ளக்காதல். இதனால், கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, 'அபி.....' தப்பிச் சென்றது தெரிய வந்தது' -இது, தினமலரில்[02.09.2018] வெளியான செய்தி.

*'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 மாதப் பச்சிளம் குழந்தையைக் கழுத்தை அறுத்துக் குப்பை மேட்டில் வீசிய தாயைப் போலீசார் கைது செய்தனர். குழந்தையைக் கொன்றுவிட்டு, யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடினார் அந்தத் தாய்' -இது, கோவை மாவட்ட நிகழ்வு. -தினத்தந்தி[14.08.2018].

*'கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், ஒருவருடன் கள்ள உறவில் அந்தப் பெண் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்காதலன் பணிக்குச் சென்ற நிலையில், மற்றொரு கள்ளக்காதலனுடன், இணைந்து அந்தப் பெண் மது அருந்தியுள்ளார். அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில், யாரும் செய்யத் துணியாத செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஏதும் அறியாத அவரின் 4 வயதுப் பெண் குழந்தைக்கு மதுவைக் கட்டாயப்படுத்தி ஊட்டி, கண்ட மேனிக்கு அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.'  -https://www.sathiyam.tv/

இப்படியான அதிர்ச்சி தரும் செயல்களில் சில பெண்கள்[ஆண்களும்தான்] ஈடுபடுவது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகள் அல்ல. காரணம், ஒரு காலக்கட்டத்தில் நம் மூதாதையர்கள் 100% விலங்குகளாக வாழ்ந்தவர்கள்.

அதன் விளைவாகத்தான், மீன் இனத்திலும் சில பறவையினத்திலும் இன்றளவும் காணப்படுகிற இந்தப் பலவீனம் சில மனிதர்களிடத்திலும் எஞ்சியிருக்கிறது.

இப்பலவீனம், கொடுந்தொற்றாகப் பரவுமா, முற்றிலும் அழிந்தொழியுமா?' என்னும் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 

திங்கள், 24 மே, 2021

எனக்கு இது புதுசு! உங்களுக்கு?

சற்று முன்னர் https://tamil.webdunia.com தளத்தின் மூலம் நான் அறிந்த இந்தச் செய்தி என்னளவில் புதியது. உங்களுக்கு?

"வாசித்தால்தானே தெரியும்" என்கிறீர்களா? ஹி...ஹி...ஹி! 
[செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்]

=================================
செய்தி:
பூமியில் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாவதற்கு முன்னரே செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

இச்செய்தி, இத்தாலியில் நடைபெற்ற 'கோல்ட்ஸ்மிடட்' கலந்தாய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகவலைப் பேராசிரியர் 'ஸ்டீவன் பென்னர்' என்பவர் அளித்துள்ளார்.

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்திருத்தல்கூடும். பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்புக் கிரகமான செவ்வாய்[இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது]க் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்திருத்தல் வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., புரோட்டீன்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகள் ஆகும். இதில் உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கியக் காரணமான ஆர்.என்.ஏ. வை உருவாக்குவதற்குத் தேவையான தாதுப்பொருட்கள் பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்திருந்தாலும், பூமியைவிடவும் செவ்வாய்க் கிரகத்தில்தான் அதிக அளவில் நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனிலிருந்து 230 மில்லியன் கிலோ மீற்றர்கள்[மீட்டர்] தொலைவில் (143,000,000 mi) செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இப்படத்தில் நீல நிறம் பூமியையும், சிவப்பு நிறம் செவ்வாயையும் குறிக்கிறது[விக்கிப்பீடியா].

செவ்வாய்க் கோள்...காணொலி[நன்றி: தினத்தந்தி]:
======================================================================