வெள்ளி, 2 ஜூலை, 2021

'ஆசனவாய்'... சுருக்குதல் பயிற்சியும் பலன்களும்![கல் ஒன்று; மாங்காய் பல!]

இப்பதிவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் 'இணையத் தேடல்' மூலம் சேகரிக்கப்பட்டவை; என் 'சொந்தச் சரக்கு' என்று எதுவும் இல்லை.

                                                   *  *  *  *  *

இந்த ஆசனவாய்ப் பயிற்சியை, கால்களை மடித்து, சப்பணமிட்டு அமர்ந்து செய்யலாம். மல்லாந்து படுத்துச் செய்வதில் உள்ள சில அசௌகரியங்கள் இதில் இல்லை.

யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது எவ்வாறு அமர்கிறோமோ அதே முறையில் அமர்ந்தவாறு ஆசனவாயைச் சுருக்கும் பயிற்சியைத் தொடங்கலாம். ஆண், பெண் என இருபாலரும் செய்யலாம். ஆண்கள் கூடுதல் நன்மைகளைப் பெறுகிறார்கள்.

இந்தப் பயிற்சி மூன்று நிலைகளை உள்ளடக்கியது.

ஒன்று: ஒரு முறை ஆசனவாயை[மலத் துவாரத் தசை] இறுக்கமாகச் சுருக்கி நிறுத்திய[வெளியேறும் சிறுநீரை வெளியேறாமல் கட்டுப்படுத்துவது போல] பிறகு, வாய்ப்பகுதி தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். மீண்டும் சுருக்குதல், நிறுத்துதல் என்று பயிற்சியைத் தொடர்தல் வேண்டும். இதைப் பதினைந்து நிமிடங்களுக்குக் குறையாமல் செய்தல் வேண்டும். பின்னர் இதற்கான நேரத்தைத் தினசரி அரை மணி நேரமாக அதிகரிக்கலாம்.

*இப்பயிற்சி மூலம் ஆசனவாய்த் தசைகள் வலுவடைவதால், 'மூல நோய்' வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது.

இரண்டு: ஆசனவாயைச் சுருக்குகிற அதே வேளையில், அடிவயிற்றை உள்ளுக்கிழுக்கும்[எக்குதல்... முரட்டுத்தனம் கூடாது] பயிற்சியையும் சேர்த்துச் செய்தால் கூடுதல் நன்மைகளைப் பெறலாம். 

*ஆண்களுக்கு மட்டுமே உள்ள 'பிராஸ்டேட்'[Prostate Gland]  எனப்படும் 'காமநீர்ச் சுரப்பி' வீக்கம் அடைவது தவிர்க்கப்படுகிறது என்பதே அந்த நன்மையாகும்.

*'குடலிறக்க நோய்'[Hernia] நெருங்காது என்றும் உறுதிபடச் சொல்லலாம்.

மூன்று: மேற்கண்ட பயிற்சிகளை ஒருசேரச் செய்யும் அதே வேளையில், மூச்சுக் காற்றை நன்கு இழுத்து, சிறிது நேரம் நிறுத்திப் பின்னர் மெதுவாக வெளியேற்றுதலைச் செய்யலாம்.

இந்தச் சுவாசப் பயிற்சியால், *ஆக்சிஜன் என்னும் உயிர்க்காற்று, குருதியில் கலந்து உடம்பு முழுக்கப் பரவுகிறது; நுரையீரலில் தேங்கியுள்ள 'சளி' வெளியேற்றப்படுகிறது.

கூடுதல் பலன்: ஆசனவாய் சுருங்கி விரியும் அதே வேளையில், 'ஆண் குறி'யில் உள்ள நரம்புகளும் தசைகளும் பல முறை விரிந்து சுருங்குவதால் அவை வலுவடைகின்றன. இதனால் *'சேர்க்கை'யின்போது, எளிதில் விந்து வெளியேறாமலிருக்கவும் இப்பயிற்சி உதவுதாகச் சொல்கிறார்கள்[இப்பயிற்சி குறித்துப் பெண்களே[!!!] யூடியூபில்  விரிவாகப் பேசுகிறார்கள் என்பது அவசியம் அறியத்தக்கது].

மேற்கண்ட இந்தக் கூட்டுப் பயிற்சிகளை, இதமான 'சுருக்' வெய்யிலில் அமர்ந்து செய்தால், *ரத்தக் குழாய்களில் மிகையாகப் படிந்துள்ள கொழுப்பு கரைவதும், உடம்புக்குத் தேவையான வைட்டமின் 'D' கிடைப்பதும் சாத்தியமாகிறது.

எச்சரிக்கை!

ஒரு சில நாட்கள் மட்டுமே பயிற்சி செய்துவிட்டு, 'கிஞ்சித்தும் பலன் இல்லையே' என்று 'பசி'பரமசிவத்தைச் சபிக்க வேண்டாம். சில மாதங்களேனும் செய்த பின்னர்தான் பலன்கள் தெரியவரும் என்கிறார்கள் இத்துறையில் தேர்ச்சி பெற்ற அனுபவசாலிகள்.

இன்றே பயிற்சியைத் தொடங்குங்கள்! என்றென்றும் செய்துகொண்டே இருங்கள்!! பலன் பெற்று இன்புறுங்கள்!!!

வியாழன், 1 ஜூலை, 2021

அவர்கள் ஆசைப்படுவது 'அது'க்கு மட்டுமே!

ஒரு புற்றுநோய் மருத்துவமனையின் நான்கு நாள் நிகழ்வைக் காட்சிப்படுத்துகிறது கீழ்வரும் கட்டுரை.


"புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அத்தையைச் சிறப்புச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த வார்டு முழுவதும் இருந்தனர். ஒன்பது வயதுக் குழந்தை முதல் 70 வயது மூதாட்டிவரை பலர் அங்கு இருந்தனர். கீமோதெரபியால் உடல் உருக்குலைந்து மிகவும் பலவீனமாக இருந்தாலும், வாழ வேண்டும் என்னும் உறுதி அவர்களுடைய கண்களில் தென்பட்டது.

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பதுபோல் எங்கள் அத்தனைபேரையும் இன்முகத்துடன் அவர்கள் அனைவரும் வரவேற்றனர்.

பலர் தங்கள் பலவீனத்தையும் மீறி, தள்ளாடி நடந்துவந்து என் அத்தையின் கை பற்றித் தைரியமாய் இருக்கும்படி ஊக்கமளித்தனர். “நாலு நாள் கீமோதெரபி இருக்கும். அதை மட்டும் எப்படியாவது சமாளித்துவிடு” என்றனர்.

“முடி கொட்டிடும். கொட்டுனா என்ன மசுரு போனாப்போகுது” என்று ஒரு மூதாட்டி என் அத்தையிடம் சொல்லியதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

என் அத்தையின் பக்கத்துப் படுக்கையில் தேவதை போன்ற சுமார் இருபது வயதுப் பெண் படுத்திருந்தாள். ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப்படும் மருந்து உள்ளே செல்லாததால் அவளின் கால்கள் வீங்கியிருந்தன. அவளின் அம்மா அவளின் வீங்கிய கால்களைத் தடவியபடியே, கையில் புத்தகத்துடன் கண்களில் கண்ணீர் வழிய, தேவதையின் நோயைக் குணப்படுத்தும்படி கடவுளை வேண்டிக்கொண்டிருந்தார்.

“அம்மா, நான் விழிச்சிருக்கும்போது என்னோட பேசிட்டிரு. தூங்குனப்புறம் கடவுளை நினைச்சிக்கோ” என்றாள் அந்தப் பெண்.

கடவுளை நினைத்து முணுமுணுத்துக்கொண்டிருந்த அம்மா இப்போது அழ ஆரம்பித்தாள்.

“ஏன்மா அழறே? அழுவதால் ஏதும் மாறப்போகுதா” என்றாள் மகள், சலனமற்ற குரலில்.

மறுநாள் காலை அத்தையைப் பார்க்கச் சென்றோம். அவருக்கு அருகிலிருந்த தேவதைப் பெண்ணின் படுக்கை காலியாக இருந்தது. அம்மா வைத்திருந்த புத்தகம் மட்டும் படுக்கையில் சீந்துவாரற்றுக் கிடந்தது.

அந்த அறையில் சுமார் 50 படுக்கைகள் இருந்தன. சில நோயாளிகள் துணையுடனும் பலர் துணையற்றும் இருந்தனர்.

வலிகளும் இழப்புகளும் அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. பிறருடைய ஆதரவோ அனுதாபமோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அதை அவர்கள் எதிர்பார்த்ததாகவும் தெரியவில்லை.

மற்ற நோயாளிகள் சொன்னபடி, முதல் ஊசியை ஏற்றுக்கொள்ள அத்தையின் உடம்பு சிரமப்பட்டது. பின்னர், போடப்பட்ட இரண்டு ஊசிகளைச் சற்றே சிரமத்துடன் ஏற்றுக்கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து நாங்கள் சென்றபோது பல படுக்கைகளில் புதியவர்கள் நிறைந்திருந்தார்கள். ஏற்கனவே இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று?

மூன்றாம் நாள் சாயங்காலம் அந்த மூதாட்டியின் படுக்கை காலியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. “வெளியே இருக்கிறவங்க எல்லாம் ஆயிரம் வருசமா வாழ்ந்துடப்போறாங்க. இங்க வர்றவங்கள்ல பல பேர் கொடுத்து வச்சவங்க. சீக்கிரமே போய்ச் சேர்ந்துடுறாங்க” என்று யாரிடமோ ஒரு  நர்ஸ் உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது.

அத்தை உற்சாகமாகவே இருந்தார். அவ்வப்போது அழுத மாமாவைத் தேற்றும்படி சொன்னார். வாசிக்கப் புத்தகம் கேட்டார். கொண்டுவந்து கொடுத்தேன். வாசித்தார்.

கைபேசியிலிருந்த அவரின் சிறுவயதுப் படங்களை என்னிடம் காட்டி அந்த வயதில் நடந்த சுவையான சம்பவங்களைக் கதை போலச் சொன்னார். சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென, “இன்னும் ஒரு ஊசிதான் மிச்சம் இருக்கு. நீ கிளம்பு. நாளை காலையில் பார்ப்போம்” என்றார்.

அடுத்த நாள் காலையில் அவரை உயிரோடு பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.

வாழ்க்கை விசித்திரமானது; மர்மங்கள் நிறைந்தது. மனிதர்களின் ஆசைகள் கணக்கில் அடங்காதவை. இந்தப் புற்று நோயாளிகளின் ஒரே ஒரு ஆசை உயிர்வாழ வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், பாவம், இவர்களில் பெரும்பாலோர் கொடுத்துவைக்காதவர்கள்."
====================================================================================
நன்றி: சாந்தி[திருச்சி] எழுதிய கட்டுரை[‘பெண் இன்று’, ‘தி இந்து’[03.09.2017] நாளிதழ்.

கட்டுரைக்குச் சாந்தி கொடுத்த தலைப்பு: ‘அந்தக் கடைசி நான்கு நாட்கள்’. 

இந்தப் பதிவின் தலைப்பு அடியேனின் கைங்கரியம்! கட்டுரையின் அளவையும் சற்றே குறைத்திருக்கிறேன். சாந்தி மன்னிப்பாராக.