ஞாயிறு, 4 ஜூலை, 2021

கூமுட்டை 'பசி'பரமசிவத்தின் கூரு கெட்ட எட்டுக் கேள்விகள்!!![மீள்பதிவு]

***'அனைத்திற்கும் ‘மூலம்’ ஆக இருப்பவர் ஒரு கடவுள்' -ஆன்மிகர்.

கேள்வி:1 
பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியாலும் யுகயுகங்களாக நடந்த பெரும் போராலும் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?!


***‘வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் விசித்திர உருவ அமைப்பும்,  ஒழுங்குக்கு உட்பட்ட இயற்கைப் பொருள்களின் இயக்கமும் அதிசயிக்கத்தக்கது. இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்.’ -இது, கடவுளை நம்புவோர் முன்வைக்கும் மிக முக்கிய வாதம்.

கேள்வி:2 
‘கடவுள் தோன்றியதோ, அல்லது எப்போதும் இருந்துகொண்டோ இருப்பதோகூட ஒர் அதிசயம்தான். இந்த அதிசயத்திற்குப் பின்னாலும் ஏதோ ஒன்று இருந்துதானே தீரும். அது எது?” என்று கேட்கப்படும் கேள்வியை அவர்கள் எப்போதுமே கண்டுகொள்வதில்லையே, அது ஏன்?


***‘கடவுள் இருக்கிறார்.’

கேள்வி:3 
இதற்கு மாறாக,‘படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளுக்குக் காரணமான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக் கூட்டங்கள் வான்வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம். அவை மிகவும் மேம்பட்ட அறிவு படைத்தவை[அறிவியல் பூர்வமாக ஒரு நாள் நிரூபிக்கப்படலாம்]; எப்போதும் இருப்பவை; இவை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத் தத்தம் கடமையைச் செய்கின்றன. இது இயற்கை’ என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம்.

இப்படி அனுமானிப்பது எவ்வகையிலும் தவறல்லதானே?


***'படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள்.' 

கேள்வி:4 
படைப்புத் தொழிலை அவர் எப்போது எப்படித் தொடங்கினார் என்பதற்கான விடை யாருக்கேனும் தெரிந்திருந்ததா? தெரிந்திருக்கிறதா?


***'தனிப் பெரும் சக்தியாக விளங்குபவர் கடவுள். இவர் படைத்தவற்றை வேறு எதுவும் எவரும் அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது.' 

கேள்வி:5 
அப்புறம் எதற்குக் காத்தல் தொழில்?


***‘அதர்மம் தலைவிரித்தாடும்போது அதை அழிக்கவும் செய்வார் கடவுள்.’  

கேள்வி:6 
அன்பே உருவான, அறிவுக் கடலான சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எவ்வாறு? அது உருவானது எப்படி? அது உருவாகும் போது கடவுள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாரா?


கேள்வி:7 விழிப்புப் பெற்ற கடவுள், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே! ஒட்டு மொத்த உலகையும் ஏன் அழிக்க வேண்டும்?


கேள்வி:8 ஒரு முறை அழிக்கப்பட்ட அதர்மம் மீண்டும் தோன்றித் தலைவிரித்தாடுவது எப்படி? கடவுளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அதர்மம் பதுங்கியிருந்ததா? அந்த இடம் கடவுளின் காலடியா?

இன்னும் கேட்பதற்குரிய கேள்விகள் ஏராளமாய் உள்ளன. என்னுடைய ‘கூமுட்டை’[இது எனக்குப் பதிவுலக நண்பர் ஒருவர் வழங்கிய 'விருது']த் தனத்தை வெளிப்படுத்த இவை போதும் என்பதால் இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

குறிப்பு: இதைப் போன்று, நான் எழுதும் எந்தவொரு பதிவும் எவருடைய மனதையும் நோகடிப்பதற்காக அல்ல; வெறும் அனுமானத்தால் மட்டுமே நம்ப வைக்கப்பட்ட கடவுள் குறித்துக் கொஞ்சமேனும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே.
====================================================================================

சனி, 3 ஜூலை, 2021

சென்னை 'ஐஐடி'இல் உயர் ஜாதி ஆதிக்கம்! அந்த ஜாதி எது? எவையெல்லாம்?

சென்னை 'ஐஐடி'யில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாகப் புகார் தெரிவித்த உதவிப் பேராசிரியர் 'விபின்' தனது பணியைவிட்டு வெளியேறிய நிலையில், அங்குள்ள பணிகளில் முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் ஆர்.டி.ஐ., மூலம் அம்பலமாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. 

தாழ்த்தப்பட்டோருக்கான 47 பணியிடங்களில் 5 பேர், பழங்குடியினருக்கான 23 பணியிடங்களில் ஒருவரும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 84 பணியிடங்களில் 29 பேரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓ.சி. பிரிவினருக்கு 154 பணியிடங்கள் ஒதுக்கீடு என்ற நிலையில், அதற்கு அதிகமாக அந்தப் பிரிவினர் 273 பேர் பதவி வகிப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. 

இணைப் பேராசிரியர் நியமனத்திலும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 27 பணியிடங்களில் 4 பேர், பழங்குடியினருக்கான 13 பணியிடங்களில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 49 பணியிடங்களில் 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால், ஒ.சி. பிரிவினருக்கு 90 பணியிடங்கள் என ஒதுக்கீடு இருக்கும் நிலையில், 156 பேர் பணியில் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

உதவிப் பேராசிரியர் பணியிலும், ஏறக்குறைய 23 இடங்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் காலியாக உள்ளது. பழங்குடியினருக்கான15 பணியிடங்களில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 53 பணியிடங்களில் வெறும் 18 பேர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உதவிப் பேராசிரியர் பணியில் 98 பணியிடங்கள் மட்டுமே முன்னேறிய வகுப்பினருக்கு ஒதுக்கீடு என்ற நிலையில், 170 பேர் தற்போது பதவி வகிக்கின்றனர்.

சென்னை ஐ.ஐ.டி-யில் மொத்தம் உள்ள பதவிகளில், ஓ.சி. பிரிவினர் 599 பேர், அதாவது 87 விழுக்காடு பதவிகளை ஆக்கிரமித்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஓ.பி.சி. பிரிவினர் 10 விழுக்காடு, பழங்குடியினர் பிரிவினர் புள்ளி 4 விழுக்காடு, ஆதிதிராவிடர் பிரிவினர் 2 விழுக்காடு மட்டுமே நியமனம் பெற்றுள்ளனர். 

2020ஆம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, உதவிப் பேராசிரியர் நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவில் மூன்று பேர், பழங்குடியினர் பிரிவில் ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பதினோரு பேர், முன்னேறிய பிரிவினரில் 124 பேர் பணிபுரிந்து வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், இணைப் பேராசிரியராக, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 5 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 13 பேர், முன்னேறிய சமூகத்தில் 123 பேர் பதவியில் உள்ளனர். பேராசிரியர் நிலையில், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 7 பேர், பழங்குடியினர் பிரிவில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 37 பேர் மற்றும் முன்னேறிய வகுப்பினர் பிரிவில் 268 பேர் பணிபுரிந்து வருவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனப் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாததும், ஒரு பிரிவினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதும் சாதிப் பாகுபாடு பிரச்சினைக்குக் காரணம் என உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய 'விபின்' மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என விபின் கோரிக்கை விடுத்ததைச் செய்தால் மட்டுமே புகாரின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்கான தீர்வை எட்ட முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 

***'சென்னை ஐஐடி' நடுவணரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் ஆகும். முன்னேறிய ஜாதியினர் நிகழ்த்திய முறைகேடுகள் நடுவணரசுக்குத் தெரியாமல் போனது எப்படி? 

அது குறித்து விளக்கம் தருவதோடு, அந்த ஆதிக்க ஜாதி எது, அல்லது, எவை என்பதையும் அரசு அறிவித்திடல் வேண்டும்.

இது இந்த நாட்டு நலனில் அக்கறையுள்ளோரின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும்!

காணொலி: https://youtu.be/xJv8fGAW5Gk

https://www.thanthitv.com/News/JustIn/2021/07/03151943/2528025/Chennai-IIT-Issue.vpf    -ஜூலை 03, 2021, 03:19 PM