வெள்ளி, 30 ஜூலை, 2021

'பன்னீர்-எடப்பாடியார்' பார்வைக்கு ஒரு 'பகீர்' துயர வரலாறு!!!

 பாண்டியனின் ஆட்சி.

அவனுக்குச் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்று இரண்டு மகன்கள். தந்தைக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவதில் இருவருக்குமிடையே மிகக் கடுமையான போட்டி.

ஒரு கட்டத்தில், தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஓர் இழிசெயலைக் கையாண்டான் சுந்தர பாண்டியன். 

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தாள் பணிந்து, தன் தம்பி மீது தான் தொடுக்கவுள்ள போரில் உதவிடப் படை அனுப்புமாறு கெஞ்சினான் என்பதே அது.

தென்னக அரசுகளைச் சூறையாடிக்கொண்டிருந்த, [கில்ஜியின் படைத் தலைவன்]மாலிக்காபூர் ஒரு படையுடன் தமிழகம் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான்; வீரபாண்டியன் தோற்றோடினான்.

மாலிக்காபூர் சுந்தரபாண்டியனுக்கு முடி சூட்டாமல், ஒரு பிரதிநிதியை நியமித்தான். பின்னர்,  தமிழின உடன்பிறப்புகளின் ஒற்றுமையின்மை காரணமாகப் பிற இனத்தவரின் ஆதிக்கம் இங்கு அதிகமானது; தமிழகமும் தமிழினமும் சீரழிந்தன.

இது, அந்த வரலாற்று அவல நிகழ்வின் மிகச் சுருங்கிய வடிவம் மட்டுமே

விரிவான செய்திகளுக்கு...  

http://www.kotravainews.com/history/history-of-tamil-nadu-tamilnadu-varalaru-tamilsamuthayam/chera-chola-pandya-pandyar-history-pallavargal/pandiyar-varalaru/

இந்த வரலாற்றுச் சோக நிகழ்வு, இன்றையத் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில் அடிக்கடி என் நினைவுக்கு வந்து அடிமனதை உறுத்திப் புண்படுத்துகிறது. அனைத்துத் தமிழர்களிடமும் இதைப் பகிர்ந்திடல் வேண்டும் என்ற உந்துதல் காரணமாகப் பதிவு செய்கிறேன்.

நடுவணரசுடன் 'அனுசரித்து'ப் போய், 'பயன்' பெறும் வகையில் தமிழ்நாட்டை ஆண்ட, இனியும் ஆள்வதற்கு ஆசைப்படும் 'எடப்பாடி'யார்[அவர்கள்], பன்னீர்ச்செல்வம்[அவர்கள்] ஆகிய இருவரும் தமிழர்களே என்பதால், அவர்களுடனும் இதைப் பகிர்வதோடு, இந்தத் துயர்மிகு வரலாற்று நிகழ்வு குறித்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.

நன்றி.

====================================================================================

வியாழன், 29 ஜூலை, 2021

ஓட்டு வீட்டுக்குள் ஒரு 'சொர்க்கம்'!!!


செல்வராசு புது மாப்பிள்ளை.

அன்று மாலை,  வழக்கமான நடைப்பயிற்சியின்போது, உடனிருந்த நண்பன் நல்லதம்பி, "கல்யாணம் ஆகியும் தினம் தினம் நடைப்பயிற்சி வந்துட்டிருக்கே. ஊட்டி, கொடைக்கானல்னு புதுப் பெண்டாட்டியோடு தேனிலவு போக வேண்டியதுதானே?" என்றான்.

"எல்லாருமா போறாங்க?"

"வசதி உள்ளவன் போறான். உனக்கு வசதி இல்லையா என்ன?"

"கல்யாணம் ஆனா தேனிலவு போறது கட்டாயமா?"

"கட்டாயம் இல்ல. கட்டிக்கிட்டவளோடு இயற்கையழகு நிறைஞ்ச இடங்களைச் சுத்திப் பார்க்குறதில் கூடுதல் சந்தோசம்."

"அது மட்டும்தானா?"

"என்னடா தெரியாத மாதிரி கேட்குறே? புதுப் பொண்ணு தர்ற சுகமும்தான். எப்போ கிளம்பப் போறே?"

"போன வாரமே கொடைக்கானல் போக இருந்தோம். மனசாட்சி சம்மதிக்கல."

"என்னடா உளறுறே?" -குரலில் சினம் துளிர்க்கக் கேட்டான் நல்லதம்பி.

"உளறுல. என் அப்பா அம்மா ரெண்டு பேருமே  படிக்காதவங்க. கூலிநாழி செஞ்சி வயிறு வளர்த்தாங்க. வேளா வேளைக்குச் சாப்பிடாம மிச்சம் பிடிச்ச காசுல என் அக்காவைக் கொஞ்சம் வசதியான இடத்தில் கட்டிக் கொடுத்ததோடு என்னையும் படிக்க வைச்சாங்க. அவங்க செய்த தியாகத்தில்தான், நான் படிச்சி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்குறேன்....."

கொஞ்சம் அவகாசத்திற்குப் பிறகு தொடர்ந்து பேசினான் செல்வராசு. "இதுவரைக்கும் என்னைப் பெத்தவங்க வேலை தேடி அண்டை அயல் ஊர்களுக்குப் போயிருக்காங்களே தவிர, குற்றாலம், கொடைக்கானல், ஊட்டின்னு எந்தவொரு சுற்றுலாத் தலத்துக்கும் போனதில்ல. அதுல கிடைக்கிற சுகம் பத்தி அவங்களுக்கு எதுவுமே தெரியாது. அதுக்காக அவங்க கவலைப்பட்டதும் இல்ல. புதுப் பெண்டாட்டியோடு தேனிலவு கொண்டாடச் சுற்றுலாப் போகத் திட்டமிட்டபோது, 'பெத்தவங்களுக்குக் கொடுத்து வைக்காத அந்தச் சுற்றுலா தரும் சுகத்தை நாம் அனுபவிக்கப் போறோம்'னு நினைச்சபோது மனசாட்சி உறுத்திச்சி....." 

இடைமறித்தான் நல்லதம்பி. "தேனிலவு போறதில்லேன்னு முடிவு பண்ணிட்டியா?" 

"ஆமா. அடுத்த வாரமே என் பெண்டாட்டியையும் என்னைப் பெத்தவங்களையும் அழைச்சிட்டுக் கொடைக்கானலுக்குச் சுற்றுலா போறேன். இது முடிஞ்சதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு முதலிரவும் தேனிலவும். அதைக் கொண்டாடுறதுக்கு ஊட்டி கொடைக்கானல் எல்லாம் அவசியமில்ல. கிராமத்தில் இருக்குற ஓட்டு வீடே சொர்க்கம்தான்" என்றான் செல்வராசு.

விழிகளில் வியப்பு நிறைந்திட நண்பனை ஆரத் தழுவி, ஆறுதலாய் அவன் முதுகு தடவி மகிழ்ந்தான் நல்லதம்பி. 

====================================================================================