சனி, 31 ஜூலை, 2021

கவரும் காணொலியும் கலங்கவைக்கும் குறுங்கதையும்!

வெகு அரிதாகத்தான் 'யூடியூப்' செல்வது என் வழக்கம். அதுவும், [அரைகுறை ஆடையுடன் கூத்தடிக்கும் 'குட்டி'கள் இல்லாமல்]நம்மைக் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு இட்டுச் சென்றோ, மலைக்க வைக்கும் மலைத் தொடர்களைக் காட்சிப்படுத்தியோ இயற்கை அழகைப்  பூமாரியெனப் பொழியும் 'காணொலி'களைக் கண்டு கேட்டு இன்புறுவதற்காக மட்டுமே.

அண்மையில் கண்டு களித்துப் புளகாங்கிதப்பட்ட, World's highest Waterfall - the most beautiful Angel Waterfalls of Venez...' கீழே.

[youtube  ஐச் சொடுக்கினால் முழுத்திரையில் ரசிக்கலாம்] 
                         
                                        *  *  *
மனதைக் களிப்பில் ஆழ்த்துவது மேலே இடம்பெற்ற காணொலி. கீழே உள்ள உண்மைக் கதை நேர் எதிர்விளைவைத் தரவல்லது. வாசியுங்கள்.

வந்துநின்ற ஆட்டோவிலிருந்து அப்பா இறங்குவதைப் பார்த்துச் சந்தோசப்பட்ட மல்லிகா, அவர் கைத்தாங்கலாகத் தன் புருசனை நகர்த்திவருவது கண்டு வருந்தினாள்.

மிதமிஞ்சிய போதையில் தெருவோரங்களில் விழுந்து கிடக்கும் குடிகாரக் கணவனைத் தெரிந்தவர்கள் வீடு சேர்ப்பார்கள். இன்று அப்பா.

"பார்த்த வேலையும் பறிபோயிடிச்சி. குடிக்க இவருக்குக் காசு ஏது?" என்றார் மல்லிகாவின் அப்பா மாதவன்.

"நான் சம்பாதிக்கிறேன்ல."

"இனிமே கொடுக்காதே."

"ஏற்கனவே அதைச் செய்து பார்த்துட்டேன்பா. கடன் வாங்க ஆரம்பிச்சுட்டார்."

"இது எவ்வளவு நாளைக்கு? கொடுத்த பணம் வரலேன்னா யாரும் கடன் தர மாட்டாங்க. திருந்திடுவாரு."

"அப்படித்தான் நானும் நினைச்சேன். திருந்துவார்னு எதிர்பார்த்த உங்க மருமகன் டாஸ்மாக் கடை முன்னாலயே பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டார். வேறு வழியில்லாம நான் வாங்குற சம்பளத்தில் ஒரு தொகையை 'டாஸ்மாக்'குக்குன்னு ஒதுக்கிடுறேன்." -விரக்தியுடன் சிரிக்கவும் செய்தாள் மல்லிகா.

தலையில் கை வைத்துக்கொண்டு அருகிலிருந்த சோபாவில் சரிந்தார் மாதவன்.
                                             *  *  *
குறிப்பு:
நீங்கள் வாசித்தது கதையல்ல; கதையாயின், 'பிரச்சினை'க்கு ஒரு தீர்வு தந்து முடித்திருக்கலாம். இது உண்மை நிகழ்வு என்பதால் அது சாத்தியம் இல்லாமல்போனது.

வெள்ளி, 30 ஜூலை, 2021

'பன்னீர்-எடப்பாடியார்' பார்வைக்கு ஒரு 'பகீர்' துயர வரலாறு!!!

 பாண்டியனின் ஆட்சி.

அவனுக்குச் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்று இரண்டு மகன்கள். தந்தைக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவதில் இருவருக்குமிடையே மிகக் கடுமையான போட்டி.

ஒரு கட்டத்தில், தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஓர் இழிசெயலைக் கையாண்டான் சுந்தர பாண்டியன். 

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தாள் பணிந்து, தன் தம்பி மீது தான் தொடுக்கவுள்ள போரில் உதவிடப் படை அனுப்புமாறு கெஞ்சினான் என்பதே அது.

தென்னக அரசுகளைச் சூறையாடிக்கொண்டிருந்த, [கில்ஜியின் படைத் தலைவன்]மாலிக்காபூர் ஒரு படையுடன் தமிழகம் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான்; வீரபாண்டியன் தோற்றோடினான்.

மாலிக்காபூர் சுந்தரபாண்டியனுக்கு முடி சூட்டாமல், ஒரு பிரதிநிதியை நியமித்தான். பின்னர்,  தமிழின உடன்பிறப்புகளின் ஒற்றுமையின்மை காரணமாகப் பிற இனத்தவரின் ஆதிக்கம் இங்கு அதிகமானது; தமிழகமும் தமிழினமும் சீரழிந்தன.

இது, அந்த வரலாற்று அவல நிகழ்வின் மிகச் சுருங்கிய வடிவம் மட்டுமே

விரிவான செய்திகளுக்கு...  

http://www.kotravainews.com/history/history-of-tamil-nadu-tamilnadu-varalaru-tamilsamuthayam/chera-chola-pandya-pandyar-history-pallavargal/pandiyar-varalaru/

இந்த வரலாற்றுச் சோக நிகழ்வு, இன்றையத் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில் அடிக்கடி என் நினைவுக்கு வந்து அடிமனதை உறுத்திப் புண்படுத்துகிறது. அனைத்துத் தமிழர்களிடமும் இதைப் பகிர்ந்திடல் வேண்டும் என்ற உந்துதல் காரணமாகப் பதிவு செய்கிறேன்.

நடுவணரசுடன் 'அனுசரித்து'ப் போய், 'பயன்' பெறும் வகையில் தமிழ்நாட்டை ஆண்ட, இனியும் ஆள்வதற்கு ஆசைப்படும் 'எடப்பாடி'யார்[அவர்கள்], பன்னீர்ச்செல்வம்[அவர்கள்] ஆகிய இருவரும் தமிழர்களே என்பதால், அவர்களுடனும் இதைப் பகிர்வதோடு, இந்தத் துயர்மிகு வரலாற்று நிகழ்வு குறித்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.

நன்றி.

====================================================================================