வியாழன், 2 செப்டம்பர், 2021

63 கல்லறைகளும் அழிவில்லாத ஜோதிடமும்!!!

மராட்டிய வீரர் சத்ரபதி சிவாஜியின் ஆட்சியின்போது[17 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்] நிகழ்ந்தது இந்தக் கொடூர வரலாற்றுச் சோகம்.

சிவாஜி, இரண்டாம் 'ஆதில் ஷா'வுக்கு எதிராகப் போர் தொடுத்தபோது, அவரை எதிர்க்கும் பொறுப்பு ஆதில் ஷாவின் இராணுவத் தலைவர் அப்சல் கானிடம் வந்தது. 

புதிய புதிய போர் உத்திகளை வகுத்து, எதிரிகளைத் திணறடிப்பதில் வல்லவர் அப்சல் கான்.

போருக்கு முன்பு ஜோதிடர்களுடன் கலந்தாலோசித்தார் அப்சல் கான். 

இம்முறை, அவர் போர் புரியும் சூழல் அவருக்குச் சாதகமற்றது என்றும், அடுத்தடுத்த போரில் அவர் இறக்க நேரிடும் என்றும் ஜோதிடர்கள் கணித்துச் சொன்னார்கள்.

துயரத்தில் மூழ்கிய அப்சல் கான், தனது உயிர் பிரிவதைவிட ஹரேமில் உள்ள தனது 63 மனைவிகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார். 

தனக்கு மட்டுமே உரியவர்களான 63 மனைவியரும் எதிரிகளிடம் அகப்பட்டு, அவர்களால் கையாளப்படுவதை விரும்பாத அவர்,  அனைவரையும் கொன்றுவிட முடிவு செய்தார். 

அப்சல் கானின் மனைவிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கிணற்றில் தள்ளப்பட்டதாக வரலாறு சொல்கிறது. தப்பிக்க முயன்றவர்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்களாம். 

அப்சல் கான் போருக்குச் செல்வதற்கு முன்பே, கொல்லப்பட்ட 63 பேரும் ஒரே குழியில் புதைக்கப்பட்டனர். கருங்கற்களால் கல்லறை எழுப்பப்பட்டது. இது, திறந்தவெளிக் கல்லறை.

தான் இறந்த பிறகு இதன் அருகிலேயே தனக்கான கல்லறையையும் எழுப்ப விரும்பினார் அப்சல் கான். ஆனால், நடைபெற்ற போரில் சிவாஜியின் லெப்டினன்ட் சாம்பாஜி காவ்ஜியால் கொல்லப்பட்டார்.

அடுத்து இடம்பெறும் நிகழ்வுக்கும் ஜோதிடர் ஒருவரின் கைங்கரியமே காரணமாக அமைந்துள்ளது. பதற்றமின்றி வாசியுங்கள்.

கிளாடியேட்டர்[gladiator], என்பவர், ஏனைய கிளாடியேட்டர், காட்டு விலங்குகள், குற்றஞ்சாட்டப் பெற்ற குற்றவாளிகளுடன் கொடூரமாக மோதிச் சண்டையிட்டு 'ரோம்' பேரரசுப் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துபவர் ஆவார்; உயிரிழப்பதும் உண்டு[விக்கிப்பீடியா]. 

கிளாடியேட்டர்கள், உடலுறவுக்காக எல்லாத் தரப்புப் பெண்களாலும் பயன்படுத்தப்பட்டார்கள். மோசமான பாலியல் நடவடிக்கைகளிலும் இவர்கள் பங்கேற்றனர். 

பேரரசர் மார்கஸ் ஆரேலியஸின் மனைவி ஃபாஸ்டினா, ஒருமுறை ஒரு கிளாடியேட்டர் மீது ஆசை கொண்டார். அவர் தனது ஆசையைத் தன் கணவரிடம் கூறினார். 

அவர் ஜோதிடர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அவர்களின் கருத்துப்படி, கிளாடியேட்டருடன் ஃபாஸ்டினா உடலுறவுகொள்ள உத்தரவிடப்பட்டது[இப்படியான பொன்மனப் புருசன் வேறு யாருக்கு வாய்க்கும்!!!].

உடலுறவுக்குப் பிறகு அந்தக் கிளாடியேட்டர் கொல்லப்பட்டு[இதுவும் கடவுளின் திருவிளையாடல்தான்!], வெளியேறும் குருதியில் அம்மையார் குளித்து முடித்து, மீண்டும் தன் கணவனுடன் அவர்  உடலுறவு கொள்ள வேண்டும் என்பதும் ஜோதிடர்களின் கணிப்பாம்!

                                  *  *  *

அன்று முதல் இன்றுவரை ஜோதிடர்கள் அடிக்கும் கொட்டம் ஓய்ந்தபாடில்லை. மூடர்கள் எண்ணிக்கை குறையாதவரை இவர்களின் காட்டில் மழைதான்!

https://tamil.boldsky.com/insync/pulse/weird-intimacy-habits-from-the-ancient-world/articlecontent-pf240299-032196.html

புதன், 1 செப்டம்பர், 2021

நாத்திக ஜென் குரு!!!

வயதான ஜென் குரு அவர்.

தனக்குப் பிறகு தன்னுடைய ஆசிரமத்தைப் பொறுப்பேற்று நடத்தத் தன் சீடர்களில் ஒருவனைத் தேர்வு செய்ய விரும்பினார்.

சிறந்த மூன்று சீடர்களை அழைத்து, "குருவிடம் பாடம் கற்பது வேறு; உண்மை ஞானம் பெறுவது வேறு. நீங்கள் மூன்று பேரும் இங்கிருந்து வெளியேறி விருப்பப்பட்ட இடங்களுக்கெல்லாம் பயணித்து, ஓர் ஆண்டுக்குப் பிறகு திரும்பி வாருங்கள். எனக்குப் பிறகான இந்த ஆசிரமப் பொறுப்பாளர் யார் என்பதைக் கூறுகிறேன்" என்று மூவரையும் வழியனுப்பி வைத்தார்.

மூன்று சீடர்களும் வேறு வேறு திசைகளில் தங்களின் பயணத்தை மேற்கொண்டார்கள்.

ஓராண்டு கழிந்த நிலையில்.....

மூவரும் திரும்பி வந்தார்கள்.

மூவரில் ஒருவனை அழைத்து, "கடவுள் குறித்த உன் அனுபவத்தைச் சொல்" என்றார் குரு.

"குருவே நான் கடவுளைக் கண்டேன். அவருக்கு உருவம் இல்லை. அண்டமெங்கும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார்" என்றான்.

புன்னகைத்த குரு, இரண்டாமனிடமும் அதே கேள்வியைக் கேட்டார்.

அவன் சொன்னான்: "கடவுளுக்கு உருவம் உள்ளது. அவரை ஒளி வடிவத்தில் நான் கண்டேன். மனம் ஒன்றி வழிபட்டதால் எனக்கு அது சாத்தியமானது."

மீண்டும் ஒரு மென்னகையைத் தவழவிட்ட ஜென் குரு மூன்றாவது சீடனைப் பார்த்து, "நீ சொல்" என்பது போல் சைகை செய்தார்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, "குருவே, கடவுள் விசயம் எனக்குக் குழப்பமாக உள்ளது. நாட்கணக்கில் சிந்தித்தும் அவரை என் ஐம்புலன்களாலோ, ஆறறிவாலோ அறிந்திடவோ உணர்ந்திடவோ இயலவில்லை" என்றான் சற்றே வருத்தத்துடன்.

முகமெங்கும் மகிழ்ச்சி பரவிட, "நீ மட்டுமே உண்மை பேசியிருக்கிறாய். உண்மையில் எத்தனை தீவிரமாகச் சிந்தித்தாலும் கடவுளை அறியவோ உணரவோ முடியாது என்பதே எதார்த்தம். நீயே இந்த ஆசிரமத்தின் எனக்கான வாரிசு" என்று சொல்லி, அவனின் முன்தலை வருடி ஆசீர்வதித்தார் ஜென் குரு.

உதவி: 'ஞானம் தரும் ஜென் கதைகள்'[அம்பிகா சிவம்].