வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாழ்க நீதிபதிகள்! வெல்க நீதி!! வளர்க பகுத்தறிவு!!!

'ஏன் பிறந்தோம், அல்லது, பிறப்பிக்கப்பட்டோம்? மரணம் ஏன்? மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறோம்?'

இவற்றிற்கும், இவை போன்ற கேள்விகளுக்கும் விடை தெரியாத நிலையில், மனத் தூய்மையுடன் அமைதியாகவும் மகிழ்வுடனும் வாழ்ந்து, பிறரும் பிற உயிர்களும் அவ்வாறே வாழ்ந்திட உதவி புரிந்து வாழ்க்கையை நிறைவு செய்வதே நம் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். 

இக்குறிக்கோள் நிறைவேற, கடவுள்[இருந்தால்], கோயில், கொண்டாட்டம், மதம்,  காமம், காதல், கத்திரிக்காய் என்றிவையும், இவை போல்வனவும் நமக்கு உறுதுணையாவது மிக அவசியம்.

இவையெல்லாம் நமக்காகத்தானே தவிர, இவற்றுக்காக நாம் அல்ல.

இதை உணரும் அறிவு நம்மில் பலருக்கு இல்லை. 

சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் கடந்த 30ஆம் தேதி, தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் 5 பேரையாவது ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

விசாரணையை நடத்திமுடித்த நீதிபதி அமர்வு, மத உரிமைகளைவிடவும் வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும், கொரோனா காலத்தில் பொதுநலனைக் கருத்தில்கொண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைக் கருதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.  https://www.dailythanthi.com/News/Topசெப்டம்பர்     - 08,  2021 13:18pm

                              *  *  *

பகுத்தறிவுச் சிந்தனையுடன் சீரிய தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களைப்  போற்றுவோம்; என்றென்றும் நீதி வென்றிட ஒருங்கிணைந்து பாடுபடுவோம்!

புதன், 8 செப்டம்பர், 2021

வேண்டாம் 'முதலிரவு'!!!

அற்பமான விசயங்களுக்கெல்லாம் ஜோதிடர்களைத் தேடிப்போய் ‘நல்ல நேரம்’ பார்க்கும் மூடத்தனம் நம்மிடையே அதிகரித்துவிட்டது. மணமான இளசுகள் முதல் முறை உடலுறவு[முதலிரவு] கொள்வதற்கான நாளையும் நேரத்தையும் கணிப்பதற்கும்கூட ஜோதிடர்களை அணுகுகிறார்கள்.

இதற்கான நல்ல நேரத்தைக் காட்டிலும், இதைச் செய்யக்கூடாத கெட்ட நேரங்கள் அதிகமாக இருப்பதை ஒரு ஜோதிட இதழில் வாசிக்க நேர்ந்தது[பெயர் நினைவில் இல்லை]. அடுத்து இடம்பெறுவது அதற்கான பட்டியல்.

1.அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்ததி போன்ற நாட்களில் உடலுறவு கூடாது.

2.ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்தரம், சதயம் நட்சத்திரங்கள் உடலுறவுக்கு ஆகாது.

3.மாதப்பிறப்பு, வருசப் பிறப்பு, விரததினம், விரதத்துக்கு முந்தையதும் பிந்தையதும் ஆன தினங்கள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, கிரகணம் போன்ற நாட்களிலும் உடலுறவு கொள்ளுதல் தவறாகும்.

4.இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை), அதிகாலை நான்காம் ஜாமத்திலும் (அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை) உடலுறவு கொள்வது தீமை பயப்பதாகும்.

5.ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது[பெண்ணுக்கு விதிவிலக்கா?!].

6.நண்பகல் 12 மணி, இரவு 12 மணி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது. 

7.ஆடி மாதம் உறவு வைத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். இப்படிச் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது.

கெட்ட நேரம் என்றும், நல்ல நேரம் என்றும் நேரத்தைப் பாகுபடுத்துகிற ஜோதிடர்கள், அவற்றிற்கான காரணங்களை ஒருபோதும் விவரித்துச் சொல்வதில்லை. அவர்களை அணுகுகிறவர்களும் கேள்வி எழுப்புவதில்லை.

ஓயாமல் உழைப்பவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. நமக்கு வாய்த்திருக்கிற அற்ப வாழ்நாட்களில் கணிசமானவற்றைக் கெட்ட நேரம் என்று வீணடிப்பது அறியாமையின் உச்சமாகும்.

ஜோதிடத்தை நம்பும் அளவுக்கு, அறிவியல் ரீதியான காரணங்களைத் தெரிந்துகொள்வதில் நம் மக்கள் ஆர்வம் காட்டுவதே இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.

அறிவியல் அணுகுமுறை சிறிதும் இல்லாத ஜோதிடத்தை நம்பி, மணமான ஆணையும் பெண்ணையும் முதலிரவு என்னும் பெயரில் உடலுறவுக்குத் தூண்டுவது அறிவுடைமை அல்ல.

காரணம், ஓர் ஆணும் பெண்ணும் முதன் முறையாக உடலுறவு[முதலிரவு] கொள்வது, இருவரிடையேயான புரிதலையும், உடலுறவு கொள்ளத் தூண்டும் ரம்மியமான சூழலையும், நல்ல மனநிலையையும் பொருத்தது. 

புதுமணத் தம்பதிகள், முதலிரவுக்குப் பதிலாக முதல் பகல்கூடக் கொண்டாடலாம். முதல் உறவில் அவர்கள் ‘முழுத் திருப்தி’[கொஞ்சம் கூடக் குறைய இருப்பினும் பாதகமில்லை] பெறுவதே விரும்பத்தக்கது.

முதலிரவுத் திணிப்பை இனியேனும் நம் பெரியவர்கள் தவிர்த்திட வேண்டும் என்பது நம் வேண்டுகொள்!