செவ்வாய், 2 நவம்பர், 2021

இருக்கும்வரை 'இப்படியெல்லாம்' சிந்திக்கலாமே![சிறப்பு அறுவை]

பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலம் ஆயிற்று என்பது பற்றியோ, அது எப்போதும் இருந்துகொண்டே இருந்திருக்கிறது என்றால் அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று என்பது குறித்தோ  எவருக்கும் தெரியாது.

மனிதர்கள் வாழும் இந்த மண்ணுலகம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பன பற்றியெல்லாம் அறிவியலாளர்கள் ஆராய்ந்து கணித்திருக்கிறார்கள். 

பிரபஞ்சத்தின் ஆயுளோடு[அது எக்காலத்தும் இருந்துகொண்டிருப்பது என்றால் அதற்கு 'ஆயுள்' என்று சொல்வதற்கு ஏதுமில்லை] ஒப்பிட்டால் பூமியின் ஆயுள் என்பது மிகவும் அற்பம். 

மனித இனத்தின் ஆயுளோ மிக மிக மிக..... அற்பம்.

கடவுள் இருப்பதாக இவன் நம்ப ஆரம்பித்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான்.

இம்மண்ணில் வாழும் ஏராள உயிரினங்களுக்கிடையே இவன் மட்டுமே கடவுளைத் துதிபாடி ஆனந்தக் கூத்தாடுகிறான்.

ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் மனித இனம் பூண்டோடு அழிந்துவிடுவது நிச்சயம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அறிவியலின் துணையுடன் இவன் தன் ஆயுளை நீட்டித்துக்கொண்டே போவது சாத்தியம் என்றாலும், இம்மண்ணுலகம்[இவன் பின்னொரு காலத்தில் குடியேற வாய்ப்புள்ள கோள், அல்லது கோள்கள் உட்பட] ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் அழியும். அதனோடு இவனும் அழிந்தொழிவது 100% உறுதி.

இந்த இனம் அழிந்தொழிந்த பின்னர்.....

"அப்பனே... ஐயனே... ஒப்பிலானே... எல்லாம் வல்லவனே... எங்கும் நிறைந்த பரம்பொருளே... கருணைக் கடலே" என்றெல்லாம் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாட எந்தவொரு நாதியும் இல்லை. ஆக.....

மனிதன் இருக்கும்வரைதான் கடவுளும் இருக்கக்கூடும். அப்புறம்....

'பிரபஞ்சம் மட்டுமே இருந்துகொண்டிருக்குமா? அது மட்டும் சாத்தியம் ஆவது எப்படி?' என்பன போன்ற இப்போது கேட்கும் கேள்விகளைக்கூட மனித இனம் உள்ளவரைதான் கேட்க முடியும். அப்புறம்?

அப்புறம்... அப்புறம்... அப்புறம்... !!!... !!!... !!!...

திங்கள், 1 நவம்பர், 2021

"தமிழ் நாட்டில் மிகவும் ஆபத்தான மாவட்டம் எது? ஏன்?"

தலைப்பில் இடம்பெற்ற கேள்விக்கு,

"மிகவும் ஆபத்தான மாவட்டம் என்றால் வழிப்பறி கொள்ளை, வனவிலங்குகள் நடமாட்டம், ரவுடிகள் அட்டகாசம் என்று இவற்றில் எதை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று தெரியாது. இருப்பினும் என் அனுபவத்தின் மூலம் பதில் சொல்கிறேன்" என்று கூறிப் பதில்['quora.com'] தருபவர், ஜெயராமன் சின்னசாமி[தனியார் நிறுவன ஊழியர்; வயது 69,] மதுரை.

//நான் ஒரு மாவட்டத்தில் நீண்டகாலம்(50 ஆண்டுகள்) இருந்தேன். 1957ல் அங்கு மிகப் பெரிய சாதிக் கலவரம் நடந்தது. பலர் உயிரிழந்தார்கள். கலவரத்தை அடக்க வழிதெரியாமல் ஒரு சாதியைச் சேரந்த ஐந்து பேரைப் போலீசார் பிடித்துச் சென்று அவர்கள் கண்ணைக் கட்டி மண்டியிட வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.

இதெல்லாம் முடிந்து 60 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இப்போதும் அந்த மாவட்டம் சாதி வெறியில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது. 

நீங்கள் அந்த மாவட்டத்தில் பணியாற்ற வேண்டியிருந்தால் கேட்டவருக்கெல்லாம் உங்கள் சாதியைச் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் உங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கும். 

ஒரு சாதித் தலைவருக்கு ஆண்டுதோறும் விழா எடுப்பார்கள். அப்போது ஒரு வாரம் வீட்டைவிட்டு வெளியேறாமல் நீங்கள் இருக்க வேண்டும். அந்த ஊர்வலத்துக்குப் பாதுகாப்புக்காக வருகிற போலீசார் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பணியாற்றுவார்கள். அந்த நேரங்களில் அந்த இரண்டு சாதியைச் சேர்ந்தவர்களில் யாரிடமும் நீங்கள் வெளியில் சிரித்துப் பேசுவதும் அல்லது சந்திப்பதும் அவ்வளவு உகந்தது அல்ல.

நான் பெயரைச் சொல்லாவிட்டாலும் அது எந்த மாவட்டம் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள். பள்ளிக்கூடத்திலும் நான் பணிபுரிந்த அலுவலத்திலும் அந்த இருதரப்பினரோடும் பழகியிருக்கிறேன். தாமரை இலைத் தண்ணீர் என்பார்களே அப்படித்தான் இருந்தேன். என்னுடைய அனுபவத்தில் ஆபத்தான மாவட்டம் என்பது அதுதான்.//