திங்கள், 6 டிசம்பர், 2021

இவர்களும்[கள்ளக் காமுகர்] தண்டனைக்குரியவர்களே!!!

'பெற்றெடுத்த பிள்ளைகளைத் தவிக்கவிட்டுக் கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம்'; 'கள்ள உறவுக்குக்கு இடையூறாக இருந்த மனைவியைக் கொன்று சிறை சென்று, குழந்தைகளை அனாதை ஆக்கிய கணவன்' என்றிவை போன்ற குற்றச் செய்திகள் ஊடகங்களில் கால இடைவெளி இல்லாமல் வெளியாவதைக் காண முடிகிறது.

இந்தத் தகாத செயல்களால் இவர்களில் பலர் கொலை செய்யப்படுதலும், தற்கொலை புரிதலும் தவிர்க்க இயலாதவையாகும். எனினும், இவர்களைப் பற்றிக் கவலைப்படுவார் எவருமில்லை.

ஆனால்,

இவர்களால் கைவிடப்படும் இளம் சிறார்களின் எதிர்கால வாழ்க்கை முறைதான் நம்மைப் பெரிதும் கவலைகொள்ள வைக்கிறது.

ஆதரிப்பார் எவருமில்லாத நிலையிருப்பின், அனாதைகளாகும் குழந்தைகளில் பலர் தாதாக்கள், ரவுடிகள் போன்றோரால் அடிமைகள் ஆக்கப்பட்டு,  பிச்சையெடுத்தல், திருடுதல் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்; பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் நிலையில், போதைப் பொருள் கடத்தலிலும், கொலை கொள்ளை போன்ற கொடூரமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

அவர்களிடமிருந்து இவர்கள் மீட்டெடுக்கப்படுதல் என்பது சாத்தியப்படுவதே இல்லை. இப்படிச் சிறாராயிருந்து பெரும் குற்றச் செயல் புரிவோரின் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

இவர்களைக் குற்றச் செயல்களில் பழக்கப்படுத்திய தாதாக்களும் ரவுடிகளும் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள். எனினும், பெற்ற பிள்ளைகள் மீதான பாசத்தைத் துறந்து அவர்களை அனாதைகள் ஆக்கிய, அதீதப் பாலியல் வெறியர்களான பெற்றோர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். எனவே.....

'ஈன்றெடுத்தக் குழந்தைகளை அனாதைகள் ஆக்கிவிட்டுக் கள்ள உறவுக்காக ஓடிப்போவது தண்டனைக்குரிய குற்றச் செயல்' என்று உரிய முறையில் அரசு ஆணை பிறப்பிப்பது அவசியமானதும் அவசரமானதுமான தேவையாகும்.

பிள்ளைப் பாசத்தைத் துடைத்தெறிந்துவிட்டு காம சுகம் துய்க்க 'ஓடிப்போதல்' செய்வோரைத் தேடிக் கைது செய்து, வழக்குத் தொடுத்து அதிகபட்சத் தண்டனை பெற்றுத்தருவது மட்டுமே, சிறார்ப் பருவக் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுப்பதற்குரிய அரிய வழியாகும்.

==========================================================================

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இது தொட்டால் கொல்லும்! அது பார்த்தாலே உயிர் பறிக்கும்!!

கொப்புளங்களோடு பெண்ணின் கைகளும் பூச்செடி[கள்]யும் தெரிகின்றன அல்லவா, செடியின் பெயர்  'Hogweed' என்பது. இது, பிரிட்டனில் உள்ள 'லாஞ்சாசீர்' ஆற்றுப்பகுதியில் வளர்கிறது. இந்தச் செடி சுமார் 14 அடி உயரம்வரை மரமாக வளருமாம். வெகு அழகான இந்த மரத்தையோ செடியையோ பூக்களையோ தொட்டால்,.....

இதில் உள்ள sensing Furanocoumarins என்னும் அமிலம்  தோலில் பட்டவுடன்  முதலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, பின்னர் இது உடல் முழுவதும் பரவி எரிச்சலை உண்டுபண்ணுமாம்.

இதன் விளைவாகப் பார்வையில் குறைபாடு ஏற்படும். ஒரு கட்டத்தில் தொட்டவரின் உயிரே பறிபோகும். 

இதற்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்தச் செடி மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் இதன் தாக்கம் குறித்து உலக அளவில் அறியப்படவில்லை என்கிறார்கள்[https://tamil.samayam.com/viral-corner/trending/careful-with-this-plant-just-by-touching-it-you-will-get-blisters-in-the-hands-and-lose-you-life/articleshow/88054569.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3     -2 Dec 2021, 7:00 pm]  
                                     *  *  *
இது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்தி.

'இந்தச் செடியையோ பூக்களையோ தொட்டால் மட்டும்தான் கொல்லும் என்பது நமக்குப் புதிய செய்தி. நம் பெண்களின் கண்களோ பார்க்கும் ஆடவரின் உயிரையே பறித்துவிடும் என்பது நம்மிடையே உலவும் பழைய செய்தியாகும்[பரப்பியவர்கள் அந்நாள் புலவர்களும் இந்நாள் கவிஞர்களும்] .

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
[பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு, அவற்றைப் பார்ப்பவர்களின் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டுப் போர் செய்கின்றன] என்னும் திருவள்ளுவரின் குறளையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

ஓர் உண்மை தெரியுமா?

அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் திருவள்ளுவர் எழுதியிருப்பாரேயானால் இவற்றை எவரும் விரும்பிப் படிக்கமாட்டார்கள். விரும்பாதவர்களையும் கவர்ந்து இழுக்கத்தான் காமத்துப்பாலை அவர் எழுதியிருக்கக்கூடும் என்பது அடியேனின் கருத்து.
                                  *  *  *
இது தொடர்பாக இன்னொரு செய்தி:

'இளைஞர்களைப் பார்வையால் கொல்லாமல் கொல்லும் ரித்திகா சிங்.. அய்யோப்பா! செம லுக்கு' என்றிப்படித் தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளது TAMIL CINEMA NEWS ; அந்த அம்மணியின் படத்தையும் அது பிரசுரித்திருக்கிறது. 

இவரின் இந்தக் கண்களை வெகு நேரம் பார்த்தேன்; நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். விளைவு.....

இந்த வினாடிவரை நான் உயிரோடுதான் இருக்கிறேன்! ஹி... ஹி... ஹி!!!