ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பெரியார் சொன்னதும் சிறியேன் சொல்வதும்!{குறும்[புப்]பதிவு}

பெரியாரை ஒருவர் சந்தித்தார்.

"கடவுள் இல்லை... இல்லை... இல்லவே இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க. உண்மையில் கடவுள் இருக்கிறார்னு தெரிஞ்சா என்ன சொல்வீங்க?" என்று அதிரடியாக ஒரு கேள்வியையும் கேட்டுவைத்தார்.

'கடவுள் இல்லேன்னு எவ்வளவோ எழுதியும் பேசியும் இருக்கேன். திருந்தாத ஜென்மங்கள் இன்னமும் இருக்கே'ன்னு பெரியார் மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கக்கூடும். ஆனாலும், 'கடவுள் இருக்கார்னு சொல்லிட்டுப்போறேன்' என்று அவரிடம் சொன்னதாக ஏடுகளில் அன்று செய்தி வெளியானது.

இப்படியானதொரு கேள்வியைச் சிறியேன்['பசி'பரமசிவம்] ஆகிய என்னிடம் ஒருவர் கேட்டிருந்தால்.....

"நானொருவன்[கடவுள்] இருப்பது உண்மைதான் என்று கடவுளே மனிதர்களைச் சந்தித்துச் சொன்னாலொழிய, அவர் இருப்பதை யாராலும் நிரூபிக்க முடியாது. இப்போ 'கடவுள் இருக்கார்'னு சொல்லுறீங்க என்றால், நீங்க மனிதரல்ல; நிச்சயம் கடவுளாகத்தான் இருக்கணும்" என்று சொல்லி, நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்திருப்பேன்.

கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர்.....

'ஓ... ஒரு முழு மெண்டல்கிட்டே வசமா மாட்டிகிட்டமே'ன்னு பயந்து நடுங்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்திருப்பார் என்பது என் அனுமானம்! 

என் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறீர்கள்தானே?

ஹி... ஹி... ஹி!!!

சனி, 15 ஜனவரி, 2022

அணுக்களால் ஆன மனிதன் ஆறறிவு பெற்றது எப்படி?!?!

'மனித உடம்பு 30,000,000,000,000 அணுக்களால்[30 trillion] ஆனது' என்கிறது அறிவியல். ஒவ்வொரு வினாடியிலும் கோடிக்கணக்கான உயிரணுக்கள் பிறக்கின்றன; அதே எண்ணிக்கையில் மடியவும் செய்கின்றன.

மரபணு, எலும்பணு, ரத்த அணு, தசை அணு, நரம்பணு, கொழுப்பணு என்று ஏறத்தாழ 200 வகையான அணுக்கள் மனித உடம்பில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

  • ஒவ்வொரு வகை அணுக்களும் ஒன்றாக இணைந்து[குழு சேர்தல்], மேற்கண்டவற்றையும், பிற உறுப்புகளையும் உருவாக்கும் பணிகளைச் செய்கின்றன[..... Different tissues then combine and form specific organs].

நாம் எந்நேரமும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களைச் சிந்திக்கிறோமாம்.  சிந்திக்க வைப்பது மூளையாகும்.

மூளை என்று பொதுவாகச் சொல்வதைக் காட்டிலும், மூளையிலுள்ள அணுக்கள் இணைந்து சிந்திக்க வைக்கின்றன என்பதே சரியாக இருக்கும்.

இங்கே ஒரு கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகும். அது.....

குழு சேராத நிலையில், தனித்தனியாக இயங்கும் அணுக்களுக்குச் சிந்திக்கும் திறன் உள்ளதா?

"இல்லை" என்பதே சரியான பதிலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை[தவறு எனின் இந்தப் பதிவு முற்றிலுமாய்ப் புறக்கணிக்கத்தக்கது]. ஆனால், அவை குழுவாக இணையும்போது சிந்திக்கும் திறன் உருவாகிறது.

இது வியக்கத்தக்க நிகழ்வாகும். 

இது எப்படிச் சாத்தியமாகிறது?

இந்நாள்வரை அறிவியலாளரால் இதற்கு விடை காண இயலவில்லை.

'விடை கிடைக்கும்போது கிடைக்கட்டும்' என்று தொடர்ந்து அவர்கள்[அயல்நாட்டு விஞ்ஞானிகள்] ஆய்வு நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

என்றேனும் ஒரு நாள் கிடைக்கக்கூடும். அதுவரை நாம்.....

வழக்கம்போல,  சாமி சிலைகளுக்குத் தங்கக் கிரீடம் சூட்டிச் சரம் சரமாய் நகைகள் பூட்டித் தெருத்தெருவாய்ப் பவனி வருவதிலும், ஆறுகளுக்குக் கொண்டுசென்று குளிப்பாட்டுவதிலும், ஆண்டு தவறாமல் கல்யாணம் ஆன சாமிகளுக்கு மீண்டும் கல்யாணம் கட்டிக் குதூகளிப்பதிலும், பால் வடியும் வேப்ப மரங்களுக்குப் பாவாடை கட்டிக் குங்குமம் பூசிக் கும்பிடுவதிலும், புற்றுகளுக்குப் பால் வார்த்துப் பாம்புகளைக் கடவுளாக்கி வழிபடுவதிலும் இப்படியாக இன்னும் பல ஆன்மிகரீதியான கடமைகளை ஆற்றுவதில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்போம்.

நாமல்லவோ புத்திசாலிகள்!!!
============================================================================
குறிப்பு: 'பரிணாம வளர்ச்சி'யால் மனிதன் ஆறறிவு பெற்றான் என்பது என் மரமண்டைக்குப் புரியாதது, இப்பதிவு உருவானதற்கான முக்கியக் காரணம் ஆகும்!