திங்கள், 7 பிப்ரவரி, 2022

'முதலிரவுப் பாடம்'... கற்றுத்தருகிறார் ஆசிரியை [எபனேசர்] எலிசபெத்!

"பெற்றோர் இதைப் பற்றி பேசுவதே இல்லை; கல்வி முறையும் உடல் பாகங்கள் மற்றும் அதன் தேவைகளைக் கற்றுத்தர வெட்கப்பட்டதன் விளைவு, இந்தப் பாடத்தைக் கற்க எம் தலைமுறையினர் சன்னி லியோன் மற்றும் சகிலா அக்காவின் வகுப்பறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று" 

என்று அங்கலாய்ப்பவர், மேலே காட்சிதரும்[புகைப்படம்] 'எலிசபெத்' அவர்கள்.

"அந்தரங்க உறவு குறித்த பாடத்தை இளைய தலைமுறையினருக்கு முறையாகக் கற்றுத்தராததன் பின்விளைவுதான் உலகில் அதிகம் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் நாடுகளில் என் நாடும் என் நாட்டு மக்களும் முதலிடம் பிடித்திருப்பது" என்று வேதனைப்படவும் செய்கிறார் இவர்.

'முதலிரவில் முதல் உடலுறவு பற்றி ஆண்களே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிற காலச் சூழலில், ஓர் இளம் வயதுப் பெண்ணான இவர்[எலிசபெத்] பேச முனைந்தது வரவேற்கத்தக்கதும், பெரிதும் போற்றத்தக்கதுமான செயலாகும்.

வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியையான இவர் கற்பிக்கும் 'முதலிரவுப் பாடம்' முதல்தரமானது என்றும் சொல்லலாம்.

இவர், 'கோரா'[quora.com] தளத்தில், இது தொடர்பான ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலை இங்கே பதிவு செய்கிறேன்.

#"முதலிரவின் முதல் உடலுறவுத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?"

முதலிரவை எதிர்கொள்ளவிருக்கும் பெண்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கும். அவற்றில் சில.....

'என் மார்பு அவ்வளவு அழகாக இல்லையே, இது என் கணவருக்குப் பிடிக்குமா?

'என் உடல் பாகங்களில் தழும்புகள் இருக்கின்றனவே, இவை அவருக்கு என் மீதான ஆசையைக் குறைக்குமா?'

இவ்வாறு, திருமணமான பெண்கள் எளிதில் விடை காண முடியாத கேள்விகளைச் சுமந்துதான் முதலிரவை எதிர்கொள்கிறார்கள்.

பெண்களின் நிலை இதுவென்றால், ஆண்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுவேதான்.

'இதைச் சரிவரச் செய்யவில்லை என்றால் என்னவள் என்னை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்று நினைத்துவிடுவாளோ?'

'எல்லாம் சரியாகச் செய்வேனா?... இல்லை, சொதப்பிடுவேனா?'

'தோற்றுவிட்டால், இவனால் முடிந்தது இவ்வளவுதானா என்று இளக்காரமாகப் பார்ப்பாளா?'

இவை போன்றவை ஆணுக்குள்ள கவலைகள்.

ஆக, முதலிரவு என்பது இருவருக்குமே பயமுறுத்தும் இரவுதான்.

அந்தப் பயத்தை எதிர்கொள்ளுவது எப்படி என்பதைப் பற்றிய ஒரு பாடத்தைக் கையில் எடுத்துப் பதில் எழுவதில் எனக்கு மகிழ்ச்சியே .

பாடத்தைத் தொடர்கிறேன்.

*கணவன் மனைவி என்றான பிறகு, இனி எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் உணருங்கள். 

*மனம் விட்டு பேசுங்கள். உங்கள் ஆசைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் ஒருவர் மற்றவரிடம் தயங்காமல் சொல்ல வேண்டும்.

*நீங்கள் படத்தில் பார்த்த கதாநாயகிகள், கதாநாயகன்கள் போன்று உங்கள் துணை இருக்கமாட்டார் என்பதை மனதில் ஆழமாகப் பதித்திடுங்கள்.

*அழகோ கவர்ச்சியோ, கூடக்குறைய இருந்தாலும்  ஒருவரையொருவர் மனப்பூர்வமாக ஏற்கும் மனப்பக்குவமும், அன்புள்ளமும் இருவருக்கும் தேவை.

*"நான் உன்கூடவேதான் இருக்கிறேன்; எப்போதும் இருப்பேன். பயப்படாதே. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு ஜெயிக்கலாம். நீ வெற்றிபெறும்வரை நான் உனக்கு உதவுவேன்" என்னும் ஆறுதல் மொழியை இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் போதும்.

அப்புறம், அதீத எதிர்பார்ப்புகளை  ஓரம் கட்டுங்கள்.

முதல் இரவிலேயே எல்லாம் என்பது சரியில்லை.

'அந்தரங்க உறவு' என்பது ஒரு 'ஓட்டப் பந்தயம்' அல்ல; ஒரு நெடிய வாழ்க்கைப் பயணம். அடுத்தடுத்து வரும் இரவுகளில் படிப்படியாக முன்னேறலாம்.

மனைவியிடம் முதல் இரவில் தோற்றுவிடக் கூடாதென்பதற்காக விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணிடம் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு முதலிரவைச் சந்திக்க நினைப்பது முட்டாள்தனம். இன்றைய தலைமுறையினர் செய்யும் தவறே இதுதான்.

முதல் இரவின் வெற்றி என்பது முதலில் நடக்கும் ஒரே ஒரு இரவில் பெற்றுவிடுவது அல்ல; பல இரவுகளின் கூட்டு முயற்சியில் மட்டுமே கிட்டக்கூடியது அது.

அந்த வெற்றியின் பயனை உங்கள் குழந்தையை இரு கைகளில் ஏந்துவீர்களே அப்போது முழுமையாக அனுபவிப்பீர்கள்.

வாழ்த்துகள்.

==========================================================================

*****'எபனேசர் எலிசபெத்' அவர்களைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அமையாததால், அவரின் அனுமதியின்றிக் கட்டுரையைச் சுருக்கி, வடிவத்தைச் செம்மைப்படுத்தியிருக்கிறேன்.

அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி; 'கோரா'வுக்கும்தான்.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

கேட்காத கேள்வியும் சொல்லாத பதிலும்!!![100% கற்பனை&நகைச்சுவை]

கைவசம் உருப்படியான 'சரக்கு' எதுவும் இல்லாத நிலையில், "எதையாவது எழுது... எழுது... எழுது" என்னும் உள்மன உந்துதலின் விளைவு, கீழ்க்காணும் 'கேள்வி-பதில்' பதிவு. 

கேள்வி: உலகம் எப்படித் தோன்றியது?
பதில்: தெரியாது.

கே: கடவுள் படைச்சார்னு சொல்றாங்களே?
ப: சொல்லுறவங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, எனக்குத் தெரியவே தெரியாது.

கே: அவங்களைச் சொல்ல வைத்தது யார்?
ப: தெரியாது.

கே: நீங்க எப்படித் தோன்றினீங்க?
ப: எனக்குத் தெரியாது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான் தெரியும். ஹி... ஹி...ஹி!!!

கே: அவங்க எப்படித் தோன்றினாங்க?
ப: அது அவங்களுக்கும் தெரியாது. அசிங்கமா எல்லாம் கேட்க வேண்டாம். வேறே கேள்வி கேளுங்க.

கே: நான் கேட்க, நீங்க தெரியாதுன்னு சொல்ல... இப்படி நம்மை உரையாடத் தூண்டியது யாரு?
ப: எனக்குத் தெரியாது

கே: நீங்க எப்போ மரணம் எய்துவீங்க?
ப: தெரியாது.

கே:செத்ததுக்கு அப்புறம் என்ன ஆவீங்க?
ப: தெரியாது.

கே: உலகம் அழியுமா? அழியும்னா எப்போது? எப்படி அழியும்?
ப: தெரியாது... தெரியாது... தெரியாது.

கே: எப்பவும் அழியாம இருந்துட்டே இருக்குமா?
தெரியாது.

கே: பாவம் புண்ணியம்னு சொல்றாங்களே, அதுகள்ல உண்மை இருக்கா?
ப: தெரியாதய்யா தெரியாது.

கே: எந்தவொரு கேள்விக்கும் பதில் தெரியலையே உங்களுக்கு. பாவம் நீங்க. உங்களை இப்படியொரு அறிவுச் சூன்யமா கடவுள் ஏன் படைச்சாரு?
ப: எனக்கெப்படித் தெரியும்? நீங்க படைப்பாளின்னு சொல்லுற அவரைத்தான் கேட்கணும்.

கே: கேட்ட அத்தனைக் கேள்விக்கும் தெரியாது... தெரியாதுன்னு மட்டும் சொல்லத் தெரியுதே, அது எப்படி?
ப: இப்படி, எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே பதில் தெரியாத கேள்விகளை நீங்க கேட்டுகிட்டே இருந்தா நானும் தெரியாது தெரியாதுன்னுதான் சொல்லிட்டிருப்பேன். எனக்கு நிறையவே வேலை இருக்கு. உங்களுக்கு எந்த வேலையும் இல்லேன்னா, உலகத்துல பல்லாயிரக் கணக்கில் சாமிகள் இருக்கு. அதுல ஒன்னை நினைச்சித் தியானம் பண்ணுங்க; ஜெபம் கிபம்னு பண்ணினாலும் சரியே.