வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

நான்கு காணொலிகளும் ஒரு 'சுருக்... நறுக்' கேள்வியும்!!

 

நான்கு காணொலிகளிலும் இடம்பெற்றுள்ள விலங்குகளுக்கிடையிலான கொடூரத் தாக்குதல் காட்சிகள் கடின நெஞ்சங்களையும் கலங்க வைப்பவை.

இணையத் தளங்களிலும், காணொலிகளிலும் இவை போன்றவையும், இவற்றைவிடவும் பயங்கரமானவையுமான, குலை நடுங்க வைக்கும் வாழ்க்கைப் போராட்ட நிகழ்ச்சிகள் நிறையவே காணக்கிடக்கின்றன.

மனிதக் கண்களுக்குத் தென்படாத வனவிலங்கு மோதல்களோ  கணக்கில் அடங்காதவை.

ஒட்டுமொத்த உலகமும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளில் விலங்குகளுக்கிடையே நடந்த மோதல் நிகழ்வுகள் அளவிறந்தவை.

அந்த விலங்குகள் அனுபவித்த சித்திரவதைகளும் துன்பங்களும் அனுமானங்களுக்குக்குள் அடங்காதவை.

அனைத்தையும், சில கணங்கள் ஒருங்கிணைத்து மனதில் பதிய வையுங்கள். இனி, நான் கேட்க விரும்பிய அந்த  ஒரு 'சுருக்... நறுக்" கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

கேள்வி:

கோடானுகோடி உயிரினங்களில், விலங்குகளுக்கிடையே மட்டுமான இத்தனைக் கொடூர மோதல்களையும், சித்திரவதைகளையும், அழிவுகளையும் நம் பக்தகோடிகள் பார்க்க நேர்ந்தாலோ, பார்த்திருந்தாலோ, மனம் வெறுத்து, கடவுளைக் கருணை வடிவானவர் என்று நம்பியது தவறு என்று உணர்ந்து, இனியேனும் அவரைத் துதிபாடிக் கொண்டாடுவதை நிறுத்துவார்களா?

நிறுத்தமாட்டார்கள். 

"எல்லாம் 'அவன்' நடத்தும் நாடகம்" என்று படைத்தவனை வியந்து பாராட்டவே செய்வார்கள்.

பக்தியுணர்வு அவர்களின் உடம்பிலுள்ள அனைத்து உயிரணுக்களிலும் ஊறிக்கிடக்கிறது. அத்தனை எளிதில் அவர்கள் திருந்தமாட்டார்கள்!

==========================================================================


வியாழன், 10 பிப்ரவரி, 2022

வாரத்தில் ஒரு நாள் காவி உடை 'கட்டாயம்' ஆகுமா? எப்போது?!

//'இந்துக் கோயில்களுக்குள் வேட்டி தவிர்த்த உடையுடன் நுழைவதைத் தடுக்கவும், 'பிற மதத்தவர் உள்ளே நுழையக் கூடாது' என்று கோயில்களின் முன்னால் பெயர்ப் பலகை வைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுக்கிறார்கள்.

'ஹிஜாப்'புக்காகவும் 'வேட்டி'க்காகவும் போராட்டம் நடத்துகிறார்கள்.

இவையெல்லாம் இந்த நாட்டில்தான் நடக்கின்றன.

இதென்ன மதச் சார்பற்ற நாடா, மதங்களால் பிளவுபட்ட நாடா? கோயில்களுக்குள் வேட்டியுடன்தான் செல்ல வேண்டும் என்று ஆகமம் சொல்கிறதா?//

மேற்கண்ட கேள்விகளை எழுப்பி, பெரிதும் மன வேதனைக்குள்ளாகியிருப்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்கள்[இது, பிற்பகல் 03.00 மணியளவில் 'பாலிமர்' தொலைக்காட்சியில் வெளியான செய்தி].

இதற்கு முன்னரும் இவை போன்ற மூடத்தனமான செயல்களை நீதியரசர்கள் கண்டித்திருக்கிறார்கள். 

'ஆடையால் போர்த்தப்படும் உடல் அழியக்கூடியது. ஆன்மா மட்டுமே நிலைபேறுடையது. பல பிறவிகள் எடுத்து, செய்த புண்ணியங்களால் இறைவனின் திருவடி சேர்தல்தான் அது பிறவி எடுத்ததன் பயன்'  என்றிவ்வாறெல்லாம் அறநெறி புகட்டுகிற மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு, நீதியரசர்கள் கொடுக்கும் சூடு இதுவரை உறைத்ததில்லை; இனி உறக்கப் போவதும் இல்லை; 

ஆபாசங்களை மறைக்க உதவும் ஆடைக்காக, புண்ணிய பூமி எனப்படும் இந்த நாட்டைக் கலவரப் பூமியாக்கி,  மயான பூமியாகவும் ஆக்கிய பிறகுதான் இவர்கள் ஓய்வார்கள் போலிருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், வாரத்தில் ஒரு நாள், அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் ஒருநாளேனும் காவி ஆடை உடுப்பதைக் காட்டாயம் ஆக்குவார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.