சனி, 19 பிப்ரவரி, 2022

பெண்ணினத்தை இழிவுபடுத்தும் 'யோனி பூஜை'!

ஒரு வலைத்தளத்தின்[quora.com] கேள்வி-பதில் பகுதியில், 'யோனியே பிரபஞ்சத்தின் ஆதாரச் சக்தி(சாக்த மரபில்)' என்பதான கருத்துப் பதிவைப் படிக்க நேர்ந்தது.

"உயிர்களின் இனவிருத்திக்கான ஆதாரச் சக்தி யோனியாக இருக்கலாம். பிரபஞ்சத்துக்கே இதுதான் ஆதாரமா?" என்று கேட்கத் தோன்றுகிறதா? வேண்டாம். மேலே படியுங்கள். 

'கேரள தேசத்துப் பகவதி கோவிலில் ஒரு மண்டலம் விரதமிருந்து கெட்டவார்த்தைகளால் தேவியை வாழ்த்தியபடி பல கிலோமீட்டர்கள் பயணித்துப் பிச்சை எடுத்துக் கோவிலுக்குச் செல்வது[யோனி பூஜை செய்ய] வழக்கமானது. இவையெல்லாம் தாந்திரீக முறை. ஒரு சாதாரண ஆச்சார இந்துவுக்கு இவையெல்லாம் ஆச்சரியமளிக்கும் விசயம். 

'கன்னி பூஜை', 'யோனி சேவை' ஆகியவை இந்து மதத் தரிசனத்தின் ஒரு பகுதியே' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுள்களைக் கற்பித்ததோடு அல்லாமல், ஆணாகவும் பெண்ணாகவும் வகைப்படுத்தி, உயிர்களின் இனப்பெருக்கத்துக்கான ஆண்-பெண் உறுப்புகளை அவர்களுக்கும் பொருத்தி, அவற்றை வழிபடுவது இந்துமதத் தரிசனத்தின் ஒரு பகுதியே என்று மக்களை நம்பச் செய்தார்கள் இந்துமதவாதிகள்; இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிபாடு இந்தப் புண்ணியப் பூமியில் இன்றளவும் தொடர்வது பகுத்தறிவுக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

பெண்ணினத்தைக் கேலி செய்யும் விதமாகச் செய்யப்படும் இந்த வழிபாட்டில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள் என்பதை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

                                             *   *   *   *

தொடர்புடைய செய்தி:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காமாக்யா கோவிலில் சில குறிப்பிட்ட நாட்களுக்கு ஆண்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் நீல் பர்வதம் என்னும் மலை மீது அமைந்துள்ளது காமாக்யா ஆலயம். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதி வணங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் இருக்கும் அம்பிகைக்கு உருவம் கிடையாது. அதற்கு பதிலாக அங்குள்ள ஒரு பாறையில் பெண்ணுறுப்பான யோனியை உருவமாகச் செய்து அதனை வழிபட்டு வருகின்றனர்[இது தொடர்பான கதை வெகு சுவையானது].

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

ஆண்களின் அலட்சியமும் குடும்பப் பெண்களின் மனக்குமுறலும்!!!

மணமான பெண்களைப் பொருத்தரை, குடும்ப வாழ்க்கையில் எத்தனை மனக்குறைகள் இருப்பினும்,  ஒளிவு மறைவு இல்லாமல் அவற்றை அயலாரிடம் பகிர்வதென்பது நேற்றுவரை இங்கு நிகழாத ஒன்று.  'தனியார் நிறுவனம் குடும்பப் பெண்களிடம் நடத்திய பேட்டி' என்று குறிப்பிட்டு, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ள 'மாலை மலர்'[14.02.2022] நாளிதழ், 'இப்போதெல்லாம் இது  நிகழ்கிற ஒன்றுதான்' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

பெண்களிடம் பேட்டி கண்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெறாதது[அயல்நாட்டு நிறுவனங்களின் இம்மாதிரிப் பேட்டி நிகழ்வுகளில் நிறுவனங்களின் பெயர் தவறாமல் இடம்பெறும்] குறிப்பிடத்தக்கக் குறை எனினும் பேட்டி சுவை நிறைந்ததாகவே உள்ளது.

குடும்பப் பெண்களிடம் நிறுவனம் முன்வைத்த கேள்வி: "நீங்கள் உங்கள் துணை மூலம் எந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தியடைகிறீர்கள்?" 

குடும்பத் தலைவிகளின் பதில்கள்:

*"திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." -இப்படிப் பதிலளித்தவர்கள் 22%. 

*"திருமணத்தைப் பற்றி நான் கண்ட கனவுகள் ஈடேறவில்லை."  

*"திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம்." 

*"திருமணத்திற்கு முன்பு எனக்கு இருந்த சுதந்திரத்தை இழந்துவிட்டேன்." -இப்படிச் சொன்னவர்கள் 90%

*"திருமணத்திற்கு முன்புவரை குடும்பத்தாருடன் நிறையப் பயணம் மேற்கொண்டேன். பெற்றோருக்கு முடிந்த உதவிகளைச் செய்தேன். இப்போது என் கணவரும், அவரது குடும்பத்தினருமே என்னுடைய உலகமாக மாறிவிட்டனர். அதனால், எனக்காக நான் வாழ முடியவில்லை." 

*"என் கணவர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை; எதிலும் அலட்சியமாக நடந்துகொள்கிறார்; மது அருந்துகிறார்; பொறுப்பாக நடந்துகொள்வதில்லை; பொய் சொல்கிறார்." 

*"திருமணமான புதிதில் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பார்; பேசும் நேரத்தை இப்போது படிப்படியாகக் குறைத்துவிட்டார்." -இது,  40%  பெண்களின் ஆதங்கம்.

*"ஒரு வருடம் மட்டுமே இவருடனான வாழ்க்கை இனிப்பாக இருந்தது; பின்னர் கசக்க ஆரம்பித்துவிட்டது."

*"ஒரு முறையாவது விவாகரத்துப் பெற்று மணவாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுவிடலாமா என்று யோசித்திருக்கிறேன்." -20% பெண்களின் மனநிலை இது.

*"திருமணத்திற்குப் பின்பு என் பழைய நட்புகளை எல்லாம் இழந்துவிட்டேன். அதனால், அவ்வப்போது அவர் மீது கோபப்படுகிறேன்."

***பெண்களின் இந்த விரும்பத்தகாத குடும்பச் சூழ்நிலைக்கு உளவியல் நிபுணர் சொல்லும் காரணம்.....

"மணவாழ்க்கையில் இணையும் ஆண்-பெண் இருவருமே இருவேறு குடும்பம், சூழல், கலாச்சாரம் போன்றவைகளின் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர்கள். அதனால் அவர்கள் இருவரும் அனைத்து விசயங்களிலும் ஒத்துப்போவது அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைச் சரியான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும். தேவைப்பட்டால், அவர்கள் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுதல் வேண்டும்.” 

==========================================================================

நன்றி:

https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2022/02/14132024/3481359/bed-life-problems.vpf  -14.02.2022