சனி, 12 மார்ச், 2022

'கொரோனா மரணங்கள்'... ரஷ்யா 10 லட்சம்! அமெரிக்கா 13 லட்சம்!! இந்தியா 40 லட்சம்!!!

2021ஆம் ஆண்டு இறுதியில் உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியதாக 'லான்செட்'[Lancit Digital Media] ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.https://www.thanthitv.com/News/India/2022/03/12034803/3184781/Corona-Deaths.vpf.vpf

2021ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் வெறும் 4 லட்சத்து 89 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட 8 மடங்கு அதிகம்  என்றும், 2021ஆம் ஆண்டு  இறுதிவரை இந்தியாவில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள்  40 லட்சத்துக்கு அதிகம் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 13 லட்சம் பேரும், ரஷ்யாவில் 10 லட்சம் பேரும் கொரோனாவால் உயிரிழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.  

கொரோனா மற்றும் கொரோனா தொடர்புடைய மரணங்கள், இறப்பு விகிதங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட் மாநிலங்களில் பதிவான இறப்பு எண்ணிக்கை, ஒமிக்ரான் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் பதிவான உயிரிழப்புகளைவிட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவின் உண்மையான பாதிப்பு மூடி மறைக்கப்படுகின்றதா என்ற அச்சத்தை இது  ஏற்படுத்தியுள்ளது.
                                                *   *   *   *   *

இதற்கு முன்பும், இந்த 'மூடி மறைத்தல்' வித்தையை இந்திய அரசு செய்திருக்கும்தானே?

*அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவற்றோடு ஏற்பட்ட மோதல்களில் நம் தரப்பிலான சேதங்கள்.
*காஷ்மீர் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் நம் பக்கம் ஏற்பட்ட உயிரிழப்புகள்.
*சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கும், இந்தியைப் பரப்புவதற்கும் இவர்கள் செலவிட்ட தொகை.
*இந்தி பேசுபவர்களிண் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகள்.

'இவற்றிலும், இவை போன்றவற்றிலும் இந்த நடுவணரசு தந்த... தரும் புள்ளிவிவரங்கள் முற்றிலும் பொய்யானவையோ?' என்பதாக மக்கள் மனங்களில் சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாதது. 
['லான்செட்' ஆய்வு: இந்தியாவில் 40 லட்சம்]

வெள்ளி, 11 மார்ச், 2022

"ஒரே நாடு ஒரே தேர்தல்'... உறுத்துதே!!!


"அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல்களில், உத்திரப்பிரதேசம் முதலான 4 மாநிலங்களில் 'பாஜக' பெற்ற வெற்றியை அடுத்து, ஊடக நிருபர்களுக்கு, தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்,  2024இல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்குத் தயாராகிவிட்டதாகத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளதால் 2024 அல்லது 2026இல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம்" என்றார்.[https://www.dailythanthi.com/News/TopNews/2022/03/10143258/BJP-rule-in-Tamil-Nadu-in-2024-or-2026--Annamalai.vpf]

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று பேசுவதை, இவர் உட்பட 'பாஜக' கட்சிக்காரர்கள் அண்மைக்கால வழக்கமாக்கியிருக்கிறார்கள்.

'நாடாளுமன்றத்திற்கோ, மாநிலச் சட்டமன்றங்களுக்கோ இடைத் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓரே ஒரு காலக்கட்டத்தில் நடத்தி முடித்தல்' என்பதைத்தான் இவர்கள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் சொல்வது நமக்கு ஒரு பொருட்டல்ல; ''ஒரே நாடு[இந்தியா]' என்று சொல்வதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.

'ஐந்தாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்படும்' என்று சொன்னாலே, அந்தத் தேர்தல் இடம்பெறுவது  இந்த நாட்டில்தான் என்பது சொல்லாமலே புரிகிற ஒன்று. 

எனவே, 'ஒரே நாடு' என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒரு நாட்டுக்குள்[இந்தியா] இருபது முப்பது என்று பல இந்திய நாடுகளா உள்ளன? 

இருக்கிற ஒரு இந்திய நாட்டுக்குத் தேர்தல் நடத்தாமல், வேறு சில/பல நாடுகளுக்கும் சேர்த்தா இங்கு தேர்தல் நடத்துகிறோம்?

இல்லையே!

'உங்க குடும்பத்தைப் பத்தி ஏதும் சொல்லுங்க"ன்னு ஒருத்தர் கேட்டா, "எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்"னு ஆரம்பிச்சு, சொல்ல நினைப்பதைச் சொல்லாமல், "என்னுடையது ஒரே குடும்பம்"னு சொல்லித் தொடங்குவது எப்படியோ அப்படித்தான், "ஒரே நாடு[இந்தியா]..." என்பதும். 

இனியும், இவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி, 'இந்த நாடு[இந்தியா] எதிர்காலத்தில் ஒரே நாடாக இருக்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமோ' என்னும் அவநம்பிக்கையை நம் மக்கள் மனங்களில் விதைக்க வேண்டாம் என்பது நம் வேண்டுகோள்.

"இந்தியாவில் இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்படும்" என்று சொல்வதே போதுமானது. தேவையற்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை!