வெள்ளி, 27 மே, 2022

'முழக்கம்' எழுப்பு..... 'கோஷம்' போடாதே!

#சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்த பல்வேறு நலத்திட்டத்  தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் பேசியபோது பாஜகவினர் எதிர்ப்புக்கோஷம் எழுப்பினர். திமுகவினர் எதிர்க்கோஷம் எழுப்பியதால் அரங்கமே அதிர்ந்தது# -இது இன்றையச் செய்தி[https://www.puthiyathalaimurai.com].

தமிழ்நாடு முதல்வர் பேசியபோது அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரங்கத்திலிருந்த பாஜகவினர் எழுப்பிய முழக்கம் 'பாரத் மாதா கி ஜே’ 

முதல்வரை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டதை, தமிழை ஒரு பொருட்டாக மதிக்காத 'இந்தி'யர்களான 'பாஜக' பிரமுகர்கள் கண்டித்ததாகத் தெரியவில்லை. கண்டித்து முழக்கமிட்டவர்களை உடனுக்குடன் அடக்கி வைத்திருந்தால் திமுக தொண்டர்கள் எதிர் முழக்கம் செய்திருக்கமாட்டார்கள். 

தலைவர்களை அவமதிக்கும் அநாகரிகம் அரங்கேறியிருக்காது.

இந்நிலையில், 'ஜே' போட்ட 'பாஜக' தொண்டர்களுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு.

உங்களின் தலைவர்கள் எப்படியோ, தொண்டர்களான உங்களுக்குத் தாய்மொழி[தமிழ்]ப் பற்று உண்டு என்று நம்புகிறோம். ஆகவே.....

இனி, எந்தவொரு சூழலிலும், இங்கே பாரத மாதாவை வாழ்த்த விரும்புவீர்களேயானால், "பாரத அன்னை வாழ்க" என்று முழக்கமிடுங்கள்; "பாரத் மாதாகி ஜே" இனி வேண்டாம்.

இந்தியர்களாக வாழ்ந்திட விரும்பும் நீங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், உங்களின் தாய்மொழி தமிழ் என்பதையும் மறவாதீர்! மறந்தால்.....

இந்த மண் உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

==================================================================

***பதிவை எழுதிமுடித்து, இணைப்பதற்குப் பொருத்தமான படமொன்றை இணையத்தில் தேடியபோதுதான் அண்ணாமலை அவர்களின் தமிழில் முழங்கச் சொல்லும் படம் தட்டுப்பட்டது. அதை மிக்க மகிழ்ச்சியுடன் தளத்தின் தலைப்பில் சேர்த்துள்ளேன். 

                                  *   *   *   *   *

***விழாவில், தமிழ்நாடு முதல்வர் ஆற்றிய உரையை உள்ளடக்கியது கீழே இடம்பெற்றுள்ள காணொலி:

வியாழன், 26 மே, 2022

எழுத்தாளர் 'கல்கி' ஆத்திகரா, நாத்திகரா?!

கம்பராமாயணச் சொற்பொழிவு நிகழ்ச்சி.

மறைந்த பிரபல எழுத்தாளர் 'கல்கி'தான் நிகழ்ச்சிக்குத் தலைவர்.

அரங்கம் நிரம்பி வழிந்தது.

கல்கி உரிய நேரத்துக்கு வந்து, தலைவருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் மட்டும் வந்துசேரவில்லை. பார்வையாளர்களிடேயே  ஒருவித அமைதியின்மை தெரிந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டார்கள்.

பதினைந்து நிமிடம் போல் தாமதமாக வந்துசேர்ந்தார் பேச்சாளர்.

மேடை ஏறி, ஒலிபெருக்கியைக் கையில் பிடித்ததும், 'இங்கே பேசுவதற்குத் தயார் செய்த குறிப்பை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். பாதி தூரம் வந்த பிறகுதான் அது நினைவுக்கு வந்தது. திரும்பிப் போய்க் குறிப்புரையை எடுத்துவந்தேன்" என்று சொல்லி, தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துத் தம் சொற்பொழிவைத் தொடங்கினார்.

பொழிவின் இறுதியில், "ராமாயணக் கதை கேட்ட உங்கள் அனைவருக்கும் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்" என்று சொல்லி விடைபெற்றார்.

முடிவுரை வழங்குவதற்கு எழுந்த கல்கி, "ராமாயணக் கதை கேட்டவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்றால், அந்தக் கதையைச் சொன்ன உங்களுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி. ஆனால், நீங்கள் குறிப்புரையை எடுத்து வர மறந்தது போல், சொர்க்கத்துக்குப் போகும்போது, உங்களின் பாவபுண்ணியக் கணக்கேட்டை எடுத்துப்போக மறந்துவிட வேண்டாம். ஏனென்றால், சொர்க்கத்துக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டுப் பாதி வழியில் திரும்பி வருவது அத்தனைச் சுலபமல்ல" என்று சொல்லி முடித்தார்.

ஆரவார ஒலி அரங்கம் முழுக்கப் பரவியது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலகலவென்று சிரித்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்!

கல்கி ஆத்திகரோ நாத்திகரோ, எழுத்தாயினும் பேச்சாயினும் கேட்போர் மனம் கவரும் வகையில் நகைச்சுவை கலந்து தருவதில் மிக வல்லவர். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!

=================================================================

குறிப்புரை:

மிகப் பழைய வார இதழ் ஒன்றில் வாசித்ததை நினைவுபடுத்திப் பதிவு செய்திருக்கிறேன். இதழின் பெயர், வெளியான ஆண்டு, நிகழ்ச்சி இடம்பெற்ற ஊர் என்று அனைத்தும் மறந்துவிட்டன. வயசாயிடிச்சி இல்லையா? ஹி... ஹி...ஹி!!!

=================================================================

*****ஜக்கி வாசுதேவ் கடவுள்களுக்கெல்லாம் குரு[சத்குரு]வோ அல்லவோ, கடவுள்களைக் காட்டிலும் புத்திசாலி என்பதில் சந்தேகம் இல்லை. கீழே உள்ள காணொலியே சாட்சி!