வியாழன், 1 செப்டம்பர், 2022

இஸ்லாம் நாடுகளும் பெண்கள் மீதான அடக்குமுறைகளும்!!!

 அது 2009 ஆம் ஆண்டு.

அந்த இஸ்லாமியப் பெண்ணின் பெயர் மரியம் கரிமி. 6 வயதான ஒரு குழந்தையின் தாய்.


கணவன் அவரை மூர்க்கத்தனமாகச் சிதிரவைதை செய்வது வழக்கம். பெண்ணின் தந்தை அவரைத் திருத்த முயன்றார்; முடியவில்லை.


மரியம் கரிமியை மணவிலக்குச் செய்யவும் மறுத்தான் அவரின் அந்தக் கொடூரப் புத்திக் கணவன்.


அவன் இழைத்த வன்கொடுமைகளிலிருந்து விடுபடவே இயலாத நிலையில், மரியம் கரிமியும் அவளின் தந்தையும் இணைந்து அந்தக் கெடுமதியாளனைக் கொன்றுவிட்டார்கள்.


இருவரும் கைது செய்யப்பட்டார்கள். குழந்தை தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்தது.


ஷரியா நீதிமன்றம், மன்னிக்கப்பட வேண்டிய மரியம் கரிமிக்கும் அவள் தந்தைக்கும் மரண தண்டனை விதித்தது. ஆனால், தண்டனை நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டது. தந்தை காலமானார்.

22 பிப்ரவரி 2021 அன்று, மரியம் தூக்கிலிடப்படும் சிறைக்கு மாற்றப்பட்டார். தண்டனையை நிறைவேற்றுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது.


பின்னர் அதற்கான நேரமும் வந்தது. மரியத்தைக் காவல்துறையினர் தூக்கில் போடவிருப்பதாக 'ஈரான் வயர்' செய்தி வெளியிட்டது.


மரியம் கரிமியின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்பட்டது. அவர் நாற்காலியில் நிற்க வைக்கப்பட்டார். மரியத்தின் மகள்[18 வயது] நாற்காலியை உதைத்து அதை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டாள். அவள் மறுக்கவே மிரட்டப்பட்டாள்.


உயிருக்குப் பயந்து மகள் நாற்காலியை எட்டி உதைத்தாள். பெற்ற அன்னை தூக்கில் தொங்கினாள்.


பதை பதைக்கச் செய்யும் இப்படியானதொரு பயங்கரம் இவ்வுலகில் நிகழ்ந்தது உண்டோ?

உண்டு... ஈரானில்!


சவூதி அரேபியாவில், சமூக வலைதளங்களில் பதிவிட்டதால்[வெறும் பதிவுதான்; குத்துவெட்டோ கொலையோ அல்ல] ஒரு வாழ வேண்டிய நடுத்தர வயதுப் பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது பரபரப்பான ஓர் ஊடகச் செய்தி.


ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள்[இஸ்லாமியப் பெண்கள்தான்] அதிகபட்ச அடக்குமுறைக்கு ஆளாவது உலகறிந்தது.


அனைத்து நாடுகளிலுமே ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், இஸ்லாம் நாடுகளின் ஆண்களோடு ஒப்பிடும்போது அவர்கள் 'தேவலாம்' என்றே சொல்லத் தோன்றுகிறது.

===================================================

https://hindustannewshub.com/world-news/the-limits-of-cruelty-crossed-in-iran-the-mother-was-hanged-at-the-hands-of-the-daughter-know-what-is-the-whole-matter/


புதன், 31 ஆகஸ்ட், 2022

அமைச்சர் முருகனுக்கு[முருகு>அழகு] இது அழகல்ல!

சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தாராம்.

அப்போது.....

"விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்துத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது.....

நடைமுறை இதுவாக இருக்கையில், முதல்வராக இருப்பவர் அனைத்துப் பண்டிகைகளுக்கும்[பெரும்பான்மையோரால் கொண்டாடப்படுவதால்] வாழ்த்துக் கூறுவதுதான் முறையாக இருக்கும். எனவே, முதல்வர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறில்லாமல், "பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்துத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது" என்றும் சொல்லியிருக்கிறார்.

இவர் சொல்வது சரியென்றால், இஸ்லாமியர், கிறித்தவர் போன்ற சிறுபான்மை மதத்தவர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லத் தேவையில்லை என்றாகிறதே?

முருகன் அவர்கள் கொஞ்சம் முன்யோசனையுடன் பேசியிருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மிகச் சீரழிந்துள்ளது. பெண்கள் நகை அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

பண்டிகை நாளும் அதுவுமாக[பிள்ளையாரின் பிறந்த நாள்; அதாவது, பார்வதி தேவி தன் மேனி அழுக்கை உருட்டி எடுத்து இந்தச் செல்லப் பிள்ளையாரை உருவாக்கிய நாள்] மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இடித்துரை வழங்கியிருக்கிறார் நடுவண் அமைச்சர் அவர்கள்[இந்து தமிழ், 31.08.2022].

* * * * *

முருகன் அவர்களே,

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் சொல்லாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டாலும் நாட்டிலுள்ள அத்தனை மதம் சார்ந்த சாமிகளுக்கான பண்டிகைகளுக்கும் மிச்சம் மீதி இல்லாமல் அத்தனை தலைவர்களும் வாழ்த்துச் சொல்வது வழக்கமாக உள்ளது.

எத்தனை "வாழ்க! வாழ்க! வாழ்க!" சொல்லியும், வாழ்த்துப்பெற்ற பக்திமான்களால் வழிபடப்படுகிற எந்தவொரு கடவுளும் பெண்கள் நகை அணிந்து வெளியே செல்லப் பாதுகாப்புத் தருவதில்லையே, ஏன் என்று கொஞ்சம் சிந்தித்தீர்களா?!