வெள்ளி, 16 செப்டம்பர், 2022

'இந்தி'யர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற 'இது' மட்டுமே வழி!!!

இந்தியாவின் மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்[MP] எண்ணிக்கை 543.

இவற்றில் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறும்[தேர்தல் மூலம்] கட்சிதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளும் அதிகாரத்தைப் பெற்றிட முடியும்

'இந்தி'யர்கள் அதிகம் வாழும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், அரியானா ஆகிய மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களைப்[MP] பெற்றுவிடுவதோடு இந்தி கணிசமாகப் பேசப்படும் மாநிலங்களில் ஓரளவு உறுப்பினர்களையும் பெற்றாலே இந்திக்காரர்களால் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும்.

இந்நிலை நீடிக்கும்வரை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் ஆதிக்கமும் நீடிக்கும். அவர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியை ஆளும் மொழியாக[ஒரே நாடு ஒரே மொழி] ஆக்கும் அவர்களின் முயற்சி தொடரும். வெற்றியும் பெறுவார்கள் என்பது உறுதி[ரெயில்வே, தபால்துறை, அரசுடைமை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்றவற்றில் இந்தியைத் திணித்துப் பாதி வெற்றியை ஈட்டிவிட்டார்கள்].

இவ்வகையிலான இந்திக்காரர்களின் ஆதிக்கப் போக்கைத் தடுத்து நிறுத்திட வழியே இல்லையா?

உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. எப்படி? 

ஆட்சியைக் கைப்பற்ற 543 உறுப்பினர்களில் பாதிக்கும் மேலானவர்களின் ஆதரவு[272] தேவை என்பது இப்போதைய நிலை.

ஒரு கட்சி இந்த 272ஐப் பெறுவதில் சில மாற்றங்கள் செய்யப்படுவதன் மூலம் வழி காணலாம்.

இந்தக் குறைந்தபட்ச 272 உறுப்பினர்கள் குறிப்பிட்ட சில மாநிலங்களிலிருந்து[மேற்குறிப்பிட்ட ராஜஸ்தான் முதலானவை] தேர்வானாவர்கள் என்றில்லாமல், அனைத்து மாநிலங்களிலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருப்பது கட்டாயம் ஆக்கப்படுதல் வேண்டும். [குழு அமைத்து ஆராய்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம். ஒரு மாநிலத்தின் மொத்த உறுப்பினர்கள்(MP) 20 என்றால், மத்தியில் ஆளவிருக்கும் கட்சிக்குக் குறைந்தபட்சம் 2 பேர் தேவை என்பது போல]. 

இப்படிக் கட்டாயப்படுத்திவிட்டால், 'இந்தி'யர்கள், மேலே குறிப்பிட்டவாறு, தங்களின் தாய்மொழியான இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து மட்டுமே 272 உறுப்பினர்களைப் பெற்று நடுவணரசைக் கைப்பற்றிக் கொட்டமடிப்பது தடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் ஓரளவுக்கேனும் அந்தந்த மாநில மக்களின்[குறிப்பாக, இந்தி அல்லாத மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்] ஆதரவையும் பெற்றிருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும்.

எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த முறைப்படி பெரும்பான்மை பெற இயலவில்லை என்றால்.....

கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றாகும்[இது தனி ஆய்வுக்குரியது. எவ்வகையிலேனும், 'இந்தி'யர்களின் சர்வாதிகார ஆட்சி தொடராமல் தடுக்கப்படுதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்].

இதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் உடனடித் தேவை. இது எளிதான செயலல்ல. எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து மிகக் கடுமையாகப் போராடினால் மட்டுமே சாத்தியமாகும்.

மேற்கண்ட வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படவில்லை என்றால்.....

'ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்; ஒரே மொழி' என்ற இந்தி வெறியர்களின் நீண்ட நாள் கனவு, அமித்ஷாவின் பேராதரவுடன் வெகு விரைவில் நனவாகும் என்பதை இந்திய நாட்டின் ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

*****வன்முறைக்குக் கிஞ்சித்தும் வழிவகுக்காத அகிம்சை வழி இது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது!

வியாழன், 15 செப்டம்பர், 2022

'இது' விசயத்தில் இங்கிலாந்துக்காரர்கள் தேவலாம்!!!

இங்கிலாந்து மகாராணியாரின் சவப்பெட்டி, ஸ்காட்லாந்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, வானிலிருந்து வந்த ஓர் ஒளிக்கற்றை மிகச் சரியாக மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழுந்ததாம். இந்த நிகழ்வைக் கண்ணெதிரே கண்டுகொண்டிருந்த மக்கள், இதைத் 'தெய்வீகச் செயல்' என்று வியந்து நெகிழ்ந்தார்களாம்.


இது 15.09.2022 செய்தி https://news.lankasri.com/article/a-beam-of-light-fell-from-the-sky-on-the-coffin-1663147575 . ஏற்கனவே, பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவான அதிசயம் ராஜ குடும்ப ரசிகர்களை நெகிழச் செய்தது என்கிறார்கள்.

 இரட்டை வானவில் காட்சியை இயற்கைச் சம்பவம் என்று சொல்வது சரியாக இருக்கலாம், இயற்கையில் இது போன்றவற்றிற்கு அறிவியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்கும் என்பதால்.

சவப்பெட்டி மீது விழுந்த ஒளிக்கற்றையைத் தெய்வச் செயல் என்பதுதான் உள்மனதை உறுத்துகிறது.

சர்க்கஸ்காரர்கள் புதிதாக ஓர் ஊருக்குச் சென்று, காட்சியைத் தொடங்குவதற்கு முன்னால், கூடாரத்துக்கும் வானத்துக்குமாக ஓர் ஒளிக்கற்றையை நிலைநிறுத்திச் சுழலச் செய்வார்கள். அதைப் போன்றதொரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு, பிரமாண்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் எங்கோ யாரோ பதுங்கியிருந்து இதைச் செய்திருக்கலாம்தானே?

இந்த 'ஒளிக்கற்றை' குறித்து இம்மாதிரியான கேள்விகளை இங்கிலாந்து வாழ் பகுத்தறிவாளர்கள் கேட்டிருக்கிறார்களா? அறிய  இயலவில்லை.

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால்.....

'கருணைக் கடவுளே ஒளிக்கற்றையாகக் காட்சிதந்து அருள்பாலித்தார்' என்பதோடு நில்லாமல், அதில் "கண்ணன் புன்னகை புரிவது கண்டேன்", "பரமசிவன் பார்வதி சமேதரராகக் காட்சியளித்தார்", "பிள்ளையாரைப் பார்த்தேன்", "சிரித்த முகத்துடன் லட்சுமி எனக்குக் கையசைத்துப் 'பை' சொன்னார்" என்றெல்லாம் ஆளாளுக்குக் கதை சொல்லிக் கண்ணீர் வடித்து கட்டாந்தரையில் நீட்டிப் படுத்துத் தரிசனம் செய்திருப்பார்கள்.

ஆனால், இங்கிலாந்துக்காரர்களோ, "ஒளிக்கற்றையில் கர்த்தரைத் தரிசித்தேன்" என்றுகூடச் சொல்லாமல், "இது தெய்வச் செயல்" என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். 

அவர்கள் தேவலாம்!