ஞாயிறு, 13 நவம்பர், 2022

காமக் காணொலி காண்போரின் கனிவான கவனத்திற்கு!!![பகிர்வு]

கேள்வி[quora.com]:

'நிஜ வாழ்வில் தம்பதிகள் கொள்ளும் தாம்பத்திய உடலுறவுக்கும், ஆபாசக் காணொளியில் இடம்பெறும் உடலுறவுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன? தற்காலச் சந்ததிகளை மனதில்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்[quora.com].

பதில் அளித்தவர்: 'மழைத் துளி'[புனைபெயர்], விவசாயத் திணைக்களம்-இல் விவசாய போதனாசிரியர் (2018–தற்போது வரை)நவ. 7

நீங்கள் ஆபாசக் காணொளிகளைப் பார்த்து அவற்றை உண்மை என்று நம்பி விட்டீர்களோ தெரியவில்லை. அவை, உங்களுடைய காமத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதாவது.....

நீங்கள் காணும் ஒரு நிமிடக் காட்சி மிகப் பல முறை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பு(Retake) நடத்தப்பட்டு, இயக்குனருக்குத் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே வெளியிடப்படுகிறது.

பின்னர் பின்னணிக் குரல் சேர்க்கப்பட்டு, நன்றாகத் திருத்தம்[Edit] செய்யப்பட்ட பிறகே நம் பார்வைக்கு வருகிறது. நாமோ அதை, இயல்பாக நடந்த உண்மை நிகழ்வு என்று நம்பி அதனோடு ஒன்றிப்போய், உணர்ச்சிவசப்பட்டு மனதைக் கெடுத்துக்கொள்கிறோம். எதார்த்த வாழ்க்கையில் அது போல் புணர்வது என்பது சாத்தியமே அல்ல.

படப்பிடிப்பின்போது நடிக நடிகைகளின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காகப் போதைப் பொருள் பாவிக்கப்படுவதும், அதிகப் போதைப் பாவனையால் நடிகைககள் இறந்துவிடுவதும் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரங்கள் ஆகும்.

அவர்கள் முழுக்க முழுக்க அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். படங்கள் ஈட்டும் வருமானத்தோடு ஒப்பிடும்போது அவர்கள் பெறும் ஊதியம் மிகவும் குறைவு[விதிவிலக்கானவர்கள் உண்டு].

இங்கே பெரிதும் கவனத்தில் கொள்ளத்தக்கது என்னவென்றால், இடைவெளிவிட்டு எடுக்கப்படும் காட்சிகள் இணக்கப்பட்டே காணொளி வெளியிடப்படுகின்றது. அதனால், நெடுநேரத்துக்கு ஆண் குறி எழுச்சி பெற்ற நிலையில் இருப்பதாக நாம் நம்பி ஏமாறுகிறோம். நமக்கு அது சாத்தியப்படவில்லையே என்று கவலைப்படுகிறோம். இது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு.

ஆண்களைப்[சராசரி] பொருத்தவரை, பெண்ணுறுப்புடன் இணையும்போது, ஆணுறுப்பின் எழுச்சி நீடிப்பதற்கான நேரம் மிகச் சில நிமிடங்களே. அதில் மனநிறைவு பெற இயலாத நிலையில்தான் அதற்கான நேரத்தை நீட்டிக்க விரும்புகிறோம். அதற்கான வழி, ஒரு பாலியல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுதான். அதிக அளவில் தீங்கு விளைவிக்காத மாத்திரைகளையோ, களிம்புகளையோ அவர் பரிந்துரை செய்வார்.

இது விசயத்தில், கணவனும் மனைவியும் மனம்விட்டுப் பேசி, முன்விளையாட்டு, புணர்ச்சிக்கான நேரம் ஆகியவற்றை முடிவு செய்து, முழுப் புரிதலுடன் இணைந்து இன்புறுதலே நல்லது. "இது போதும்" என்று திருப்திகொள்ளும் மனப் பக்குவம் இருவருக்கும் தேவை.


ஆக, ஆபாசக் காணொளிகளைப் பார்ப்பதால், பார்ப்பவர் காம வெறி பிடித்த மிருகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே, இளைஞர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது, ஓரிரு முறை அதைப் பார்த்திருந்தால் அத்துடன் அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதே.

===========================================================================

சனி, 12 நவம்பர், 2022

சமாதியும் மகா சமாதியும் நம் கேள்வியும்!!

மோட்சம் கொடுப்பதாக ஒருவருக்குச் சமாதி கட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னவில் நடந்துள்ளது. 

3 சாதுக்கள்[சாமியார்கள்] ஒருவருக்கு முக்தி தருவதாகக் கூறியுள்ளனர். அவரும் சம்மதித்திருக்கிறார்.


இதையடுத்து, பள்ளம் தோண்டி அந்த நபரை உயிருடன் உட்கார வைத்து மேலே மூங்கில் கம்புகளை அடுக்கி, அதற்கு மேல் களிமண்ணைப் பரப்பி மூடியிருக்கிறார்கள் அந்த 3 பேரும்.


இந்தச் சம்பவம் 'உன்னவ்' மாவட்டப் போலீஸாருக்குத் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அங்கிருந்த அந்தக் காவிகளிடம்(3 சாமியார்கள்) விசாரணை நடத்தினார்கள். 


அப்போது ஓர் இடத்தில் பள்ளம் வெட்டி எதையோ மூடிவைத்தது போல் இருந்ததைக் கவனித்தார்கள். மூங்கில், களிமண் ஆகியவற்றை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே சாமியார்களால் உட்கார வைக்கப்பட்ட நபர் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். 


அந்த நபர் வெளியேற மறுத்த நிலையிலும்[அந்த அளவுக்குச் சாமியார்க் காலிகள் அவரை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்] அந்தப் பள்ளத்திலிருந்து அவரை உயிருடன் மேலே கொண்டுவந்தார்கள்.


சமாதி நிலையை அடைய விரும்பிய நபர் மீது மட்டுமல்லாமல், 3 சாமியார் வேடம் தரித்திருந்த தறுதலைகள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

* * * * *


காவல்துறையினரின் கைது நடவடிக்கை நமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அதே வேளையில், நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் சில கேள்விகள் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.

குழிக்குள் புதையுண்டு கிடந்தவர் மீட்டெடுக்கப்படாவிட்டால் அவர் உயிர் பிழைத்திருக்கமாட்டார் என்று நினைத்துத்தான் காவலர்கள் அவரை மீட்டார்கள். அதன் மூலம் ஒருவர் உயிரோடு சமாதியானால் அவர் மோட்சம் அடைவார் என்று சொல்வது கட்டுக்கதை என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுகிறது.

காவலர்கள் மட்டுமல்லாது, அவர்களை இயக்குகிற உத்தரப்பிரதேச அரசுக்கும்[நடுவணரசுக்கும்கூட] இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றே நம்பலாம்.

உயிரோடு சமாதி ஆகி மோட்சம் பெறலாம் என்பது பொய்யுரை... பச்சைப் புளுகு என்றால், 'மகா சமாதி' ஆவதும் அதைப் போன்றதுதான். இதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

உண்மை இதுவாக இருக்கும் நிலையில், சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் ஆடம்பர அலட்டல் சாமியார், கட்டிய பெண்டாட்டியை, 'உயிரோடு மகா சமாதியானார்' என்று சொல்லிக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானதோடு, அந்த ஆள் மீது வழக்குத் தொடுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது[தொடுத்தவர் பெண்ணின் தந்தை].

ஆனால், நீதிமன்ற வழக்குகளிருந்து விடுதலை ஆனது மட்டுமல்லாமல், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளிலிருந்தும் தப்பி, தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு, சொகுசுக் கார்களிலும், ஹெலிக்காப்டர்களிலும், விமானங்களிலும் உலகையே வலம் வந்துகொண்டிருக்கிறானே அவன், இது எப்படி என்பதே நம் கேள்வி.

நீங்களும் கேட்கலாம். விரும்பினால், அனைத்து நண்பர்களுடனும் உற்றார் உறவினருடனும் இக்கேள்வியைப் பகிருங்கள்.

இது எம் வேண்டுகோள்.
===========================================================================