திங்கள், 26 டிசம்பர், 2022

நெஞ்சை நெக்குருகச் செய்யும் ஓர் இணைபிரியாத தம்பதியர் மரணம்!

அவர் பெயர் ஹூபர்ட். அவரின் பிரிய மனைவியின் பெயர் ‘ஜூன் மாலிகோட்’.

ஒரு விருந்தளிப்பு நிகழ்வுக்குப் பிறகு ஜூன் மாலிகோட் நோய்வாய்ப்பட்டார்.


நோயின் தாக்கம் கடுமையானதாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


திருமணம் ஆகி 79 ஆண்டுகள் இணைபிரியாமல் பாசப் பிணைப்புடன் வாழ்ந்த இருவருமே 100 வயதைக் கடந்தவர்கள்.


மோசமாக இருந்த ‘ஜூன் மாலிகோட்’டின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவரின் உயிர் பிரிந்தது. 


உயிர் பிரிந்த அந்தக் கணங்களில் அவரின் கையை ஹூபர்ட்டின் கை இறுகப் பற்றியிருந்தது. சில மணி நேரங்களில் அவரும் மரணத்தைத் தழுவினார்.


தன் உயிர் பிரியவிருந்த கடைசி நொடிவரை தனக்குரியவளைப் பிரிந்திருக்க விரும்பாத ஹூபர்ட்டையும், அந்த அளவுக்கு அவருடன் மனம் கலந்து அன்பைப் பொழிந்து வாழ்ந்த ஜூன்மாலிகோட் ஆகிய தம்பதியரைப் போன்று ஓர் இணையை இந்த உலகம் கண்டிருக்குமா? அதற்கான வாய்ப்பு இனியேனும் அமையுமா?


இவர்கள் வாழ்ந்த வாழ்வை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


ஆனால், இவர்களும் இவர்களைப் போன்ற இணையர்களும் இணைக்கப்பட்டுப் பின் மரணத்தின் மூலம் பிரிக்கப்படுவதை எண்ணும்போது நெஞ்சம் வெகுவாகக் கனக்கிறது.


எத்தனைக் கொடூரம் இது?


‘மரணம்’ என்னும் பெயரில் இணைத்துப் பின் பிரிக்கும் இந்தச் செயலைச் செய்வது யார்?


இந்த இழிசெயலைச் செய்த அந்தப் படைப்பாளன்[கடவுள்] பண்பில்லாதவன் என்கிறார் சங்ககாலப் புலவர் ஒருவர்.


“படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்” என்று, அனைத்தையும் படைத்தவனான கடவுளையே கடிந்துகொள்ளும் அவர், புறநானூற்றுப் புலவர் ‘பக்குடுக்கை நன்கணியார்’[பாடலும் பொருளும் கீழே] என்பவர்.


பக்குடுக்கை நன்கணியார் நம் போற்றுதலுக்கும் பின்பற்றுதலுக்கும் உரிய சீரிய சிந்தனையாளர் ஆவார்!


பாடல்:


’ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்...’

உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கர்னாடக[கா]க் குமரிகளின் கருணை உள்ளம்!!!

உலகம் முழுவதுமே Free Hugs என்ற பெயரில், சில ஆர்வலர்கள் தங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகக் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் என்று பதாகைகள் ஏந்தி இயக்கம் நடத்துவதை[பெண்கள்தானே?] வழக்கமாகக் கொண்டுள்ளார்களாம்.

இது குறித்துக் கேள்விப்பட்டோ படாமலோ, பெங்களூருவில் இரு கல்லூரி மாணவிகள் இந்த free hugs இயக்கத்தை நடத்திப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள் என்பது திகட்டவே திகட்டாத இனிப்புச் செய்தியாகும்.

கிறித்துமஸ் & புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளதால், பெங்களூருவின் கடைத்தெருக்கள் பரபரப்பாகக் காணப்படும் நிலையில்.....

அந்நகரின் சர்ச்கேட் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு அபூர்வா அகர்வால், தனிஷி என்னும் பெயர்களைக் கொண்ட அந்த இரு கல்லூரி மாணவிகள் free hugs என்ற பதாகைகளை ஏந்தி நெடுநேரம் காத்திருந்து. அந்தப் பகுதியில் சென்ற பலரையும் கட்டித் தழுவித் தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது அது தொடர்பான செய்தி[https://tamil.news18.com/news/national/two-girl-students-offered-free-hugs-in-bengaluru-church-street-861777.html].

“வந்துநின்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் 100 பேரைக் கட்டித்தழுவி உலகச் சாதனை நிகழ்த்தியுள்ளோம்” என்று அவர்கள் மிகு பெருமிதத்துடன் கூறினார்களாம்[இந்தச் சேவையைக் கிழவர்களும் கிழவிகளும்கூடச் செய்யலாமா?].

"ஒரு நபர் நாள்தோறும் எட்டுமுறை கட்டிப்பிடித்தால் அவர் அந்த நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருப்பார்” என ஆய்வாளர்கள் அறிவித்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்களாம். அந்த ஆய்வு உண்மையானதுதானா என்று அவர்களிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்துகொண்ட எவரும் கேட்டிருக்கமாட்டார்கள்[எவனும் கேட்டிருந்தால் அவன் படு கிறுக்கனாவான்].

ஆக, கட்டிப்பிடிப்பதால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது சரியே என்றாலும்.....

“உச்சக்கட்ட மகிழ்ச்சி கிடைக்க எட்டுத் தடவை என்பது போதுமா?” என்று இச்சையைக் கட்டுப்படுத்த இயலாமல் அலைந்து திரியும் இளவட்டங்கள் கேட்பார்களே, அதற்கு இந்தக் குமரிகள் சொல்லப்போகும் பதில் என்னவாக இருக்கும்?

விடை தெரிந்தாலும் பதில் சொல்ல விரும்பாத கேள்வி இது!

ஹி... ஹி... ஹி!!!

================================================================