வியாழன், 13 ஏப்ரல், 2023

காமக் கொடூரி!!![காமக் கொடூரனுக்கு எதிர்ச்சொல்]

அவளுக்கு உடம்பெங்கும் காமம். தீராத உடலுறவுத் தாகம்.

தணியாத தாபத்தைத் தணிக்க ஒரு காமுகன் தேவைப்பட்டான்.


கணவனும் மாமனார் மாமியார் ஆகியோரும் அப்பாவிகள் என்பதால் அப்படியொருவனை அவளால் மிக எளிதாகத் தேடிக்கொள்ள முடிந்தது.


அவர்கள் மூவரும் இடையூறாக இருந்ததால், நாளெல்லாம் இடையீடு இல்லாமல் இன்பம் துய்ப்பது இயலாமல்போனது.


மாமனார்&மாமியார் பெயரிலுள்ள சொத்தை அபகரித்துக்கொண்டு, ஆசைநாயகனுடன் வெளியூர் சென்றுவிடத் திட்டம் தீட்டினாள் அவள்.


அவர்களைத் தீர்த்துக்கட்டினால்தான் அது சாத்தியப்படும் என்று நம்பினாள்.


தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள்.


அன்று…..


கணவன் பணியகம் சென்றிருந்தான். அவனின் அப்பாவும் அம்மாவும் கடைவீதி சென்றிருந்தனர்.


கள்ளக் காமுகனை அழைத்தாள் அந்தக் காமாந்தகி.


அவனும் அடியாளுடன் வந்தான்.


அப்புறம்?


‘அப்புறம் என்ன, வீடு திரும்பிய மாமனாரையும் மாமியாரையும் 

கழுத்தறுத்துக் கொல்ல வைத்தாள் அந்த மா பாதைகி’.....


என்று கதை முடிவதாகத்தான் உங்களைப் போலவே நானும் நினைத்தேன்.


ஆனால், அதற்கு இடைப்பட்ட வேளையில்தான் அந்த உலகமகா அதிரச... அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்தது.


அது…..


அடியாளை மாடியில் விட்டுவிட்டு, சல்லாபக் கலையில் கில்லாடியான கள்ளக் காமுகன் மட்டும் கீழ்த்தளம் வந்து ஆசைநாயகியுடன் அந்தரங்க லீலையில் ஈடுபட்டான்! https://www.thanthitv.com/latest-news/father-in-law-mother-in-law-covered-in-blood-in-the-morning-whatsapp-message-that-shocked-the-police-179586 [முகவரிக்குள் ‘காணொலி’ உள்ளது].


கட்டிய கணவனுக்குத் துரோகம். மாமனாரையும் மாமியாரையும் சற்று நேரத்தில் தீர்த்துக்கட்டும் திட்டம். கீழே நடக்கவிருப்பதை மேலே இருந்து அனுமானிக்கும் அடியாளின் மனவோட்டம்.


இவை பற்றிய நினைப்பால் ஏற்படும் கடும் பதற்றத்துக்கிடையே அவனுடனான அந்தரங்க லீலைக்கு அவள் சம்மதித்தது எப்படி?


கருணாமூர்த்தியான கடவுளின் படைப்பில் இப்படியும் பெண்களா?!


ஐயகோ!!!


 *   *   *   *   *


***கொஞ்சம் நாட்களுக்கு முன்பு, தான் பெற்ற மகளுடன் உறங்கிக்கொண்டிருந்த ஆடவன் ஒருவன், சற்றுத் தள்ளி, கள்ளக் காமுகனுடன் தன் மனைவி புணர்ச்சி சுகத்தில் மூழ்கிக்கிடந்ததை அறிந்தான்: அவளைத் திட்டினான். அவள் அவனைக் காமுகனின் உதவியுடன் அடித்துக் கொன்ற ஒரு கொடூர நிகழ்வு நினைவுக்கு வருகிறது[வெளியிட மனம் ஒப்பாததால் வரைவில் இடம்பெற்றிருந்த பதிவை அழிக்க நேரிட்டது].

=========================================================================

புதன், 12 ஏப்ரல், 2023

‘வேப்பமரத்தம்மன்’... கடவுள்[புதுசு] அறிமுகம்!!!

சில நாட்கள் முன்பு, ஓய்வூதியத் திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்திற்குச் செல்ல நேரிட்டது.

வளாகத்தில் உள்ள ஒரு புதிய கடைக்குத் தேனீர் அருந்தச் சென்றபோது, அங்கிருந்த(கடைக்குள்) வேப்பமரத்தம்மனைத் தரிசித்துக் கழிபேருவகை  எய்தினேன்[ஹி... ஹி... ஹி!!!].

அந்தத் தெய்வீக மரத்தின் தலைப்பகுதி முற்றிலுமாய் அகற்றப்பட்ட நிலையில் முண்டமாகக் காட்சியளித்த அதன் அடிப்பக்கத்தில் செங்கற்களால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு[நீர்பாய்ச்சுவதற்கு], குங்குமம் பூசி, மாலை அணிவித்து, வண்ணத்தாள்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஊதுவர்த்தி வாசம் கடையெங்கும் கமகமத்தது.

“இதென்ன வேப்ப மரம்தானே?” என்று நான் கேட்க, சில கணங்கள் என்னை முறைத்துவிட்டு, “இது மரமல்ல, வேப்பமரத்தம்மன்” என்று அம்மனை எனக்கு அடையாளப்படுத்தியதோடு, மரம் அம்மன் ஆன வரலாற்றையும் விவரித்தார் கடைக்காரர்.

நிர்வாகத்தின் அனுமதியோடு புதிய கடைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்த வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டி முடித்தபோது, இருள்சூழத் தொடங்கிவிட்டதால் அடிமரம் வெட்டும் வேலையை ஒத்திவைத்து வீடு சென்றார் கடைக்காரர்.

இரவில் உறங்கும்போது அம்மனே அவர் கனவில் தோன்றி, “நீ பாதி வெட்டிய வேம்பு வெறும் மரமல்ல, அதில் நான் நீண்ட காலமாகக் குடியிருக்கிறேன்” என்று சொன்னாராம்.

அடுத்த நாளே, மரத்தைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, உரிய முறையில் பூஜை செய்து வேம்பை ‘வேப்பமரத்தம்மன்’ ஆக்கிவிட்டார் கடைக்காரர்.

வேம்பு மரம் அம்மன் ஆன கதையைச் சொன்னதோடு, வாடிக்கையாளர்களில் பலரும் வேப்பமரத்தம்மனிடம் வேண்டுதல் வைப்பதாகவும், சில நாட்களிலேயே வேண்டுதல் நிறைவேற்றப்படுவதால், மீண்டும் வந்து அம்மனைத் தரிசித்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் கடைக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருமானமும் கூடியிருக்கும் என்பதை அவர் சொல்லாமலே நான் புரிந்துகொண்டேன்.

புறப்படும்போது, “உண்டியல் வெச்சிடுங்க. அந்த வருமானத்தை வைத்து ஆண்டுதோறும் வேப்பமரத்தம்மனுக்கு விமரிசையாய் விழா நடத்திடலாம்; நன்கொடை வசூலித்துக் கோயில்கூடக் கட்டலாம்” என்றேன்.

அவர் முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பு என் யோசனை ஏற்கப்பட்டது என்பதை அறியச்செய்தது!