செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

‘ஆசைநாயகி’ ஆன அம்மாவும் ‘அனாதை’ ஆன சிறுமியும்!!!


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடைப்பள்ளியைச் சேர்ந்தவர் சுகாசினி. இவருக்குக் கீர்த்தனா, ஜெர்சி என இரண்டு மகள்கள். 

கணவன் இல்லை.

இவர் துரதிர்ஷ்டசாலிதான்.

பிள்ளைகள் பெரியவர்களாகி, திருமணம் ஆனவர்களாகவோ, சுயமாகச் சம்பாதிப்பவர்களாகவோ இருந்தால் எஞ்சிய ஆயுட்காலத்தை ஆண் துணை இல்லாமலே  கழித்துவிட முடியும்.

இவருடைய இரு மகள்களுமே சிறுமிகள்.

இந்த அம்மா பாலுறவு விசயத்தில் மிகவும் பலவீனமானவராக இருந்தால், நம்பகமான[இவர் விரும்பாதபோது தொடர்பைத் துண்டித்துக்கொண்டு, வேறு எந்தவொரு வகையிலும் தொல்லை தராதவன்] ஆணுடன், பிள்ளைகள் அறியாத வகையில் வாய்ப்புக் கிடைக்கும்போது உடலுறவு இச்சையைத் தணிக்கலாம்[இன்றையக் காலச் சூழலில் இது தவறில்லைதான்].

அப்படியொரு நபர் கிடைக்காதபோது, பெற்றெடுத்த வாரிசுகளுக்காக ‘அந்த’ ஆசையைத் துறந்து வாழ்வது இந்த அம்மாவுக்கான கடமை.

‘அவ்வாறு வாழ்வது கடினம்; வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கவும்கூடும்’ என்று அஞ்சினால், பிள்ளைகளை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு, “போதும்… போதும்” என்று பிதற்றும் வகையில் ‘புணர்ச்சி சுகம்’ வழங்கும் ஒரு போக்கிரியுடன் சேர்ந்து வாழலாம்; ‘தில்’ இருந்தால் திருமணமும் செய்துகொள்ளலாம்.

ஆனால், இந்தச் சுகாசினி என்னும் சுகபோகி இவற்றில் எதையும் செய்யாமல் வீட்டோடு ஒருவனைச் சேர்த்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறாள்.

இவளுடனான கள்ள உறவில் கசப்போ, சலிப்போ ஏற்பட்டிருந்தால், சொல்லாமல்கொள்ளாமல் அவன் ஓடியிருப்பான்.

அதைச் செய்யவில்லை அவன்.

காரணம், அவனின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்திருக்கலாம். இவளையும் பிள்ளைகளையும் ஏதோ காரணம் சொல்லி, காரில் வெளியே[ராஜ மகேந்திரவரம்] அழைத்துப்போனான்.

குறுக்கிட்ட, ‘கோதாவரி’ ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்தி, செல்பி எடுப்பதாகச் சொல்லி, அம்மா, மகள்கள் என மூவரையும் பாலத்தின் விளிம்பில் நிற்கவைத்து ஆற்றில் தள்ளினான்.

சுகாசினியும், இளைய மகள் ஜெர்சியும் ஆற்றில் விழ, அது அவர்களை அடித்துச்சென்றது.

மூத்தவள் கீர்த்தனா, சுதாரித்துக்கொண்டு, பாலத்திலிருந்த பிளாஸ்டிக் குழாயை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு தொங்கினாள்.

ஒரு கையால் குழாயைப் பற்றிக்கொண்டு இன்னொரு கையால் தன்னிடமிருந்த அலைபேசியில், எண் 100ஐத் தொடர்புகொண்டு காவல்துறைக்குத் தகவல் அனுப்பினாள்.

அது அதிகாலை நேரம் ஆயினும்[03.30] கவல்துறையினர் விரைந்துவந்து கீர்த்தனாவை மீட்டார்கள்.

இது நேற்றைய[07.08.2023]ச் செய்தி[‘புதிய தலைமுறை’].

இனி வருவதுதான், நம் கண்களைக் குளமாக்கி, இதயத்தை நொறுங்கவைக்கும் உச்ச நிகழ்வு.

தன்னைக் காப்பாற்றிய காவல்துறையினரிடம்…..

“என் அம்மாவுடன் வசித்தவர்தான் எங்களைக் காரில் அழைத்துவந்து ஆற்றில் தள்ளினார்” என்றாள் கீர்த்தனா.

இங்கே நம் கவனத்தை ஈர்ப்பது…..

‘என் அம்மாவுடன் வசித்த…’ என்னும் சொற்றொடர்.

“எங்களுடன் வசித்த…” என்று சொல்ல அந்தச் சிறுமிக்கு மனம் வரவில்லை.

அந்தரங்க ஆசையைக் கட்டுப்படுத்தாமல் ஒரு தறுதலைக்கு ஆசைநாயகி ஆன ஒருத்திக்குப் பிள்ளையாகப் பிறந்த இந்த அனாதையை அக்கம்பக்கத்தார் எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.

படைத்த கருணைக் கடவுளுக்கோ ஆற்ற வேண்டிய பிற கடமைகள் ஏராளம் இருக்கும்.

இவளைத் தத்தெடுத்துப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவது ஆந்திர மாநில அரசின் கடமையாகும்.

* * * * *

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

‘அவன்’இன் எழுச்சியும் வீழ்ச்சியும்!!!

பட்டவகுப்பு இறுதித் தேர்வில் வெற்றிபெறத் தவறியதால், வேலைவெட்டி இல்லாமல் தவிப்பதைப் பார்த்த ‘அவன்’இன் அப்பா, “டவுன் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துக்கோ. நிறையப் புத்தகங்களும் பத்திரிகைகளும் படிக்கலாம். பொழுதும் போகும்; பொது அறிவையும் வளர்த்துக்கலாம்” என்றார்.

அவர் அறிவுரையை ஏற்று அவன் நூலக உறுப்பினர் ஆனான்.

கல்லூரி நூலகத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியிருந்த அவன், பொது நூலகத்தின் அருமையைப் படிப்படியாக உணர்ந்தான். புத்தகங்கள் மூலமாக, உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களும் தத்துவ ஞானிகளும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் படைப்பிலக்கிய எழுத்தாளர்களும் அவனுக்கு அறிமுகம் ஆனார்கள்.

அவர்கள் குறித்த நூல்களைத் தேடித் தேடிப் படித்ததன் விளைவு அவனின் பொது அறிவு வளர்ச்சியுற்றது.

பலவகைப்பட்ட பத்திரிகைகளை வாசித்ததில், கவிதைகள், கதைகள் என்று நவீன இலக்கியங்களின் மீதான ஈடுபாடும் அதிகரித்தது.

கவிதைகள், கதைகள் எல்லாம் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் அளவுக்கு அவனின் படைப்பார்வம் அதிகரித்தது.

அவை பிரசுரம் ஆகவில்லை என்றாலும், ஓர் இதழுக்கு அவன் அனுப்பிய ஒரு கேள்வி, ‘கேள்வி-பதில்' பகுதியில் வெளியானதும், ‘ஆசிரியருக்கு...’ ஆன பகுதியில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆனதும் அவனுக்கு எழுத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.

ஆயினும், அடுத்தடுத்துத் தொடர்ந்து தோல்விகளைத் தழுவியதால் பெரிதும் சோர்வுற்றான்.....

                         *   *   *   *   *

பின்னர் பெற்ற அனுபவங்களை ‘அவனே’ விவரிக்கிறான்:

“நூலகத்தில் இடம்பெறாத, பெட்டிக் கடைகளில் தொங்கும் ஜோதிடம், ராசிபலன் பற்றிய சிறியப் புத்தகங்களும், கவர்ச்சிப் படங்களை அட்டையில் தாங்கிய ஆபாசப் புத்தகங்களும் என்னை ஈர்த்தன.

சில ஆபாச[போர்னோகிராபி]ப் புத்தகங்களை, என்னதான் எழுதுகிறார்கள் என்று அறியும் ஆசையுடன் வாங்கிப் படித்ததில், மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கு அடிமை ஆனேன்.

வாங்கிப் படித்துவிட்டு, சாக்கடையில் வீசி எறிந்த நிலை மாறி, வீட்டுக்கே எடுத்துச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் படிக்கும் அளவுக்குத் துணிச்சல் உள்ளவனாக மாறினேன்.

அன்று அப்பாவும் நானும் மட்டும் வீட்டில் இருந்தோம்

பண்ணை ஆட்களுடன் அவர் காரசாரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தபோது, படுக்கை அறையில், வாங்கி வந்திருந்த ஆபாசப் புத்தகம் ஒன்றைப் படிக்கலானேன். 

மீண்டும் மீண்டும் படித்து உணர்ச்சிவசப்பட்டதில் உடலும் மனமும் சோர்வடைய, புத்தகத்தை மறைத்து வைக்க மறந்தவனாக, படுக்கையில் மல்லாகப் படுத்துக் கண்ணயர ஆரம்பித்தேன். அப்போது அப்பா அங்கு வருவதைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.

வந்தவர் என்னை நெருங்கிவந்து, நான் சோர்ந்து படுத்துக் கிடப்பதையும், அட்டையில் ஆபாசப் படம் பதிக்கப்பட்ட புத்தகம் கிடப்பதையும் பார்த்திருந்தால்,  கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பார்; ‘நல்ல பையன்’ என்னும் என் மீதான நம்பிக்கையை அறவே இழப்பதோடு வெறுக்கவும் செய்திருப்பார்.

அப்படியொரு நிலை வரும்போது நான் உயிர்வாழ்வதேகூடக் கேள்விக்குறி ஆகியிருக்கும்.

என் நல்ல நேரமோ என்னவோ, என்னை நெருங்காமல் எட்ட நின்றபடியே, “பாடப் புத்தகம் படித்த களைப்பில் தூங்குறான். எழுப்ப வேண்டாம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அவரின் குரல் கேட்டுப் பேரதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளான நான் அவசர அவசரமாகப் புத்தகத்தைக் கால்சட்டைப் பையில் மறைத்துக்கொண்டு வீட்டின் வெளித் திண்ணையில் இருந்த அப்பாவைப் போய்ப் பார்த்தேன்,

“நீ தூங்கிட்டிருந்தே. எழுப்ப வேண்டாம்னு காத்திருந்தேன். வெளியே வேலை இருக்கு. சந்தைக்குப் போன உன் அம்மா வர நேரமாகும். வீட்டைப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு, ஒரு தூக்குப்பையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

அவர் புறப்பட்டுப்போன அடுத்த சில நிமிடங்களிலேயே அடுப்பைப் பற்றவைத்து, புத்தகத்தைத் தீயிலிட்டுக் கரி ஆக்கினேன்.

அந்த மாதிரியான புத்தகத்தை இனி வீட்டுக்குக் கொண்டுவருவதில்லை என்று முடிவெடுத்த சில நிமிடங்களிலேயே, “ஆபாசப் புத்தகங்களை இனி ஒருபோதும் படிக்க மாட்டேன்” என்று சபதமும் செய்தேன்.

மேற்கொண்ட சபதம் ஓரிரு வாரங்களிலேயே காலாவதி ஆன சோகக் கதையைப் பிறிதொரு நாளில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்!

                         *   *   *   *   *

***இது, ‘அவன்’இன் 2ஆவது அனுபவப் பதிவு. எதிர்பாராமல் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான். நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பது நம் விருப்பம்.

அடுத்த அனுபவப் பதிவு வெளியாகச் சற்றே காலதாமதம் ஆகலாம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.