புதன், 23 ஆகஸ்ட், 2023

ஒரு நாளுக்கான திருமணமும் ஒரு முறை[மட்டும்] உடலுறவும்!!!

//ஒரு நாள் திருமணங்கள் சீனாவின் பழம்பெரும் பாரம்பரியத்தில் இல்லை என்றாலும், சமீபத்தில் அத்தகைய திருமணங்கள் அந்நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. திருமணம் ஆகாமல் இளைஞர்கள் இறப்பது ‘சுப நிகழ்வு’ அல்ல என்னும் மூடநம்பிக்கையின் காரணமாக உருவானது இந்த ‘ஒரு நாள்' திருமணம்.


திருமணத்தன்று மட்டும் அவன் மணமகனாக இருப்பான்.//

மணமகளும் அவ்வாறே. அதன் பிறகு இவன் யாரோ, அவள் யாரோ என்னும் நிலைதான். 

இந்தத் திருமணத்திற்காக, இளைஞர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பணம் செலவழிக்கிறார்களாம். 

பொதுவாக, இளைஞர்களுக்குத் திருமணம் செய்விப்பதில் பெற்றோர்களுக்கு நிறையவே செலவாவதால், பல இளைஞர்கள் மணமாகாமலே வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘ஒரு நாள் திருமணம்’ செய்வதற்குக் காரணமாக அமைந்தது என்கிறார்கள் நிபுணர்கள். இந்நிகழ்வுகள் ரகசியமாக நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நம் நாட்டில் ‘ஒரு நாள் திருமணங்கள் நடைமுறையில் இல்லை[உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை] என்றாலும், ஒரு பெண் மணமாகாமலே இருந்து இறக்க நேரிட்டால், அவள் கழுத்தில் ஓர் ஆடவனைக்கொண்டு தாலி கட்டும் சடங்கு இன்றளவும் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது[தாலி கட்ட ஆட்கள் கிடைப்பது எளிதா என்பது தெரியவில்லை].

ஒரு நாட்டவருக்குரிய நாகரிகம் பிற நாடுகளுக்கும் பரவுவது வெகு இயல்பாக உள்ள நிலையில், சீனர்களிடமுள்ள இந்தத் திருமண முறை நம் நாட்டிலும் பரவினால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 

ஆனால், இதன் தொடர்ச்சியாக…..

மணமாகாமலே செத்துப்போவது நல்லதல்ல என்னும் மூடத்தனத்துக்கு மக்கள் ஆளாக நேர்ந்தது போலவே, ஒரு நாள் திருமணம் முடிந்து, அன்றிரவே உடலுறவுச் சுகம்[முதலிரவு] அனுபவிக்காமல் செத்துப்போவதும் நல்லதல்ல என்று நம்ப ஆரம்பித்தால்….. 

ஒரு முறை திருமணமும், ஒரு முறை உடலுறவும் கொள்வதற்குப் பெரும் செலவில் பெண்களை ஏற்பாடு செய்ய நேரிடும்.

ஆண்கள், மணமாகாமலோ, முதலிரவுச் சுகம் அனுபவிக்காமலோ சாகக் கூடாது என்பதாக நம்புவது போலவே, ஒரு பெண்ணும் அவ்வாறான நிலையில் சாகக் கூடாது என்று நம்பும் காலம் வருமேயானால் மக்கள் படும்பாடு விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையினால், நம் மக்களுக்கு நாம் சொல்ல விரும்பும் புத்திமதி….. 

“பையன்களைப் பெற்றெடுக்கும் அளவுக்கு நிறையப் பெண்களையும் பெறுங்கள். ஆண் பெண் எண்ணிக்கை சம விகிதத்தில் இருப்பது மிக மிக அவசியம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்” என்பதே!

* * * * *

https://india.postsen.com/world/931912.html

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

செயற்கை நுண்ணறிவும் கிறிஸ்தவர்களின் செயற்கையான கவலையும்!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது "கடவுளுடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்றும், சமூகத்திற்கு இதனால் அபாயங்கள் விளையும்" என்று இங்கிலாந்தில் சிலர் கவலை தெரிவித்திருக்கிறார்களாம். தேவாலயத்தின் முன்னாள் தலைவர் ஒருவர்[‘வெரி ரெவ் ஆல்பர்ட்’], அவர்களைத் தேற்றும் வகையில் செய்த அறிவிப்புகளை http://www.telegraph.co.uk/ என்னும் தளம் வெளியிட்டிருக்கிறது.

//ஸ்காட்லாந்தின் தேவாலயத்தின் முன்னாள் தலைவர்  “செயற்கை நுண்ணறிவுக்கு உயிர் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை" என்றும், "மனிதர்கள் பின்பற்றும் வழிபாட்டு முறைகளையும் அது அறியாது” என்றும் கூறினார். 

மேலும்,  “செயற்கை நுண்ணறிவுக்கு(AI) எவரும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், அது கடவுளுடன் பேச முடியாது” என்றும் கூறி அவர் கிறிஸ்துவர்களை ஆற்றுப்படுத்தினார்.

திருச்சபையின் மாத இதழில், "வழிபாடு நிகழ்த்துவதற்கான மனமோ, அதற்கான பரிசுத்த ஆவியின் உறுதுணையோ ‘செ.நு. அறிவு’க்கு இல்லை” என்று எழுதினார்.

இங்கே நம்மை வியப்பில் ஆழ்த்துவது, செயற்கை நுண்ணறிவுக்கு உயிர், மனம், புத்திசாலித்தனம் ஆகியவை இல்லாததால் அதனால் கடவுளுடன் பேசுவது சாத்தியப்படாது என்று கூறியிருப்பதுதான்.

*‘செ.நா.நுண்ணறிவு’ கடவுளுடன் பேசுவது உண்மையாக இருந்தால், அதனால் மனித இனத்துக்குப் பலவகை நன்மைகள் ஏற்படுமே தவிர, எவ்வகையில் தீங்கு நேரிடும் என்பது நமக்குப் புரியவில்லை.

*கடவுளின் பெயரால் மதவாதிகள், எப்படியெல்லாம் மக்கள் மீது மூடநம்பிக்கைகளைத் திணிக்கிறார்கள் என்பதை அது கடவுளிடம் சொல்லிவிடுமா?

*அதற்குச் சுயமாகச் சிந்திக்கும் அறிவு இருந்தால், கடவுள் இருப்பதாக மதவாதிகள் சொல்வது வெறும் கற்பனை என்னும் உண்மையைப் போட்டு உடைத்துவிடுமா?

*நாத்திகர்களுடன் சேர்ந்துகொண்டு, “கடவுள் இல்லை; இல்லவே இல்லை. கடவுள் நம்பிக்கையைப் பரப்புகிறவன் முட்டாள்; நம்புகிறவன் அடிமுட்டாள் என்று பரப்புரை செய்யுமா?

நமக்கான மேற்கண்ட ஐயங்களை மதவாதிகள் போக்குவார்களா?

ஊஹூம்!

வளர்க செயற்கை நுண்ணறிவு! ஒழிக செயற்கையாக உருவாக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை!!

                                  *   *   *   *   *



https://cloud.google.com/learn/what-is-artificial-intelligence