சனி, 23 செப்டம்பர், 2023

‘இபிஎஸ்’களின் தலைவர் ‘அண்ணா’வா, ‘அமித்ஷா’வா?!?!

“அறிஞர் அண்ணாவை அவமதித்தவனின் நாக்கை அறுப்போம்; குஞ்சைத் துண்டிப்போம்” என்று இங்கே மேடை ஏறிச் சபதம் மேற்கொண்டது அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கட்சி நடத்தும் ஒரு கூட்டம்.

இப்போது ‘சமாதானம்’ பேச அண்ணாமலைக் கட்சியின் அதி முக்கியத் தலைவர் அமித்ஷாவைச் சந்திக்கத் தில்லி சென்று காத்துக்கிடக்கிறது.

அவர் இவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார் என்பது இன்றையக் காலைச் செய்தி[‘சன்’ தொ.கா].

தன்மானத் தமிழர்களா இவர்கள்?

கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், அதைச் சரி செய்ய, பெரிய கட்சித்(தமிழ்நாட்டில்) தலைவரை அல்லது, தலைவர்களைச் சிறிய கட்சியின்[தமிழ்நாட்டில் ‘பாஜக’ எடுபிடிகளின் ஒரு சிறு கும்பல் மட்டுமே உள்ளது] தலைவரோ, தலைவர்களோ தேடிவந்து சந்தித்துப் பேசுவதுதான் வழக்கம்.

அந்த வழக்கத்தை இவர்கள் மாற்றியிருக்கிறார்கள்[அமித்ஷாதான் எடப்பாடியைத் தேடிவந்து சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்]. 

இவர்கள் சென்றது சமரசம் பேச அல்ல; அமித்ஷாவின் திருவடி வருடி மன்னிப்புக் கேட்பதற்காக.

பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து தமிழ்நாட்டின் எந்தவொரு தலைவரும் இப்படியொரு இழி செயலைச் செய்ததில்லை.

பதவியில் இருந்தபோது சம்பாதித்த சொத்துகளைச் சேதாரமில்லாமல் கட்டிக் காப்பதற்காகத் தமிழனின் தன்மானத்தை விலை பேசுகிறார்கள் இவர்கள். 

அமலாக்கத் துறை, வருமானவரித் துறை என்று எதையெதையெல்லாமோ ஏவி ஏவித் தாங்கள் தப்பான வழிகளில் சம்பாதித்ததையெல்லாம் பறிப்பார்கள் ‘அவர்கள்’ என்ற பயம் இவர்களுக்கு  இருந்தால்.....

“கட்டுக்கட்டாய்ப் பணம், கொத்துக்கொத்தாய்த் தங்க நகைகள் என்று இருப்பில் இருப்பதையெல்லாம், இற்றுப்போகாத கெட்டியான பாலிதீன் பைகளில் மூட்டை கட்டி, கழிவுகள் தேங்குகிற ‘செப்டிக்’ டேங்குகளில் போட்டு வையுங்கள். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்பதே இவர்களுக்கான நம் பரிந்துரை.

“உங்களின் சுயநலத்திற்காகத் தமிழனின் தன்மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டாம்” என்பதே நம் வேண்டுகோள்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

இந்தப் பாதிரியார் ‘ஒரு மாதிரி’யா?!?!

மனோஜ்[50] ஒரு கிறித்தவப் பாதிரியார்; பெங்களூருவில் பணியாற்றுகிறார்.

திடித்திடீர்னு சபரிமலை ஐயப்பன் மீது அபிரிதமான ஈர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குப் போய், மாலை போட்டு, காலை மாலை என்று இரண்டு வேளையும் அழுக்குப்போகக் குளித்து ஐயப்ப சாமியைத் தரிசனம் செய்தார்.

41 நாள் விரதம் முடிந்ததும், இருமுடி கட்டி, சபரி மலைக்குச் சென்று ஐயப்ப சாமியை[“சாமியேஏஏஏய்... சரணம் ஐயப்பா!!!”]த் தரிசனம் பண்ணினார்.

ஐயப்பனுக்குப் பூஜை செய்யும் நம்பூதிரிகள் ஆனந்த சாகரத்தில் மூழ்கித் திளைத்தார்கள்; இவருக்குப் பொன்னாடை அணிவித்து மனம் பூரித்தார்கள்.

மலையாளம், தமிழ், இங்கிலீசு, இந்திலீசுன்னு இங்குள்ள அத்தனைப் பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது பாதிரியாரின் இந்த அதிரடி ஐயப்பத் தரிசனம்.

ஒரு பேட்டியில், “பல்வேறு மதங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளும் ஆசை எனக்கு உண்டு. இதன் காரணமாகத்தான் சபரிமலை வந்தேன்” என்று கூறியிருக்கிறார்[ஆனால், மதம் மாறவில்லையாம்].

கணுக்கால்வரை கைலி கட்டி, தொப்பி அணிந்து, “உங்களுடன் ஒரு நாள் தொழுகை நடத்த விரும்புகிறேன்” என்று திருவனந்தபுரம் இஸ்லாமியரிடம் இவர் சொல்வாரேயானால், அவர்கள் ஏற்பார்களா, எள்ளி நகையாடுவார்களா? சீக்கியர்களிடம் அனுமதி வேண்டினால், அவர்கள் ஆரத் தழுவி வரவேற்பார்களா, சிரித்து மழுப்புவார்களா?

வேறு வேறு மதங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்பட்ட  பாதிரியார், சம்பந்தப்பட்ட கோயில்களுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மதத் தலைவர்களின் அனுமதியோடு ஆய்வு நிகழ்த்தியிருக்கலாம்; தொடர்புடைய ஆய்வு நூல்களைத் தேடிக் கண்டறிந்து வாசித்திருக்கலாம். மாறாக.....

“ஒரு மதத்தைப் பற்றி அறிந்துகொள்ள[கிறித்தவராக இருந்துகொண்டே] அந்த மதம் சார்ந்த பக்தராக மாறியது நம்மை நகைக்கத் தூண்டுகிறது.

இவரின் செயல்பாடு சரியானதே என்றால்.....

கொலைகாரர்கள் பற்றி அத்துபடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவருக்குக் கொலை செய்த அனுபவம் தேவை என்றாகிறது.

ஆபாசப் படங்களில்[Porno] நடிப்பவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திட நினைத்தால், அம்மாதிரிப் படங்களில் நடித்திருப்பது அதற்கான தகுதி என்று கொள்ள நேரிடும்.

ஒரு பெண் ஆய்வாளர், விலைமகளிரின் அவல வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால், சிறிது காலமேனும் ஒரு விலைமகளாக வாழ்ந்திருத்தல் அவசியமாகிறது.

பாதிரியாரின் பித்துக்குளித்தனமான செயல்பாடு நம்மைப் போன்றோருக்கு வினோதமானதாகத் தோன்றுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட கிறித்தவ நிர்வாகச் சபை இதை அவமானமாகக் கருதியிருக்கிறது; திருப்பலி உள்ளிட்ட சடங்குகளை இவர் செய்யத் தடை விதித்துள்ளது.

இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் திரும்பப் பெற்றுள்ளது.

எது எப்படியோ,

“விதம் விதமான மதவாதியாக மட்டுமல்ல, பரிசுத்த நாத்திகனாகவும் நான் வாழ்ந்துகாட்டுவேன்” என்று பாதிரியார் பின்னர் அறிவிப்பார் என்பது அடியேனின் அசைக்க இயலாத நம்பிக்கை!

ஹி... ஹி... ஹி!!!