செவ்வாய், 24 அக்டோபர், 2023

‘ஈரான்’ ஆடவர்கள்[+ஆப்கானிஸ்தான்] ஏகபத்தினி விரதர்களா?!?!

#ஈரானில் உள்ள அனைத்துப் பெண்களும் ஹிஜாப்[ஒட்டுமொத்த உடம்பை மறைக்கும் முக்காடு] அணிவது சட்டப்படி கட்டாயம் ஆகும்.

தெஹ்ரான் மெட்ரோவில், 16 வயதான  ‘அர்மிதாகெரவண்ட்’ என்னும் பெண் ‘முக்காடு’ அணியாததால்,  காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு, கடுமையான காயங்களுடன் தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ‘கோமா’[மூளைச் சாவு] நிலையில் உள்ளார்# என்பது செய்தி. 

இவ்வாறான கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாவதற்குக் காரணமான ‘ஹிஜாப்’புக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அதி முக்கியத்துவம் தருவது ஏன்?

//பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளில் மிக முக்கியமானது பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாவது. 

உடல் உறுப்புகள் தெரியும்படியாக ஆடை அணியும்போது அவற்றால் காம உணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஆண்கள் வன்புணர்வில் ஈடுபடும் கொடூரம் நிகழ்கிறது.

இக்கொடூரங்களில் சிக்கிச் சீரழியாமலிருக்கத் தங்களுக்குத் தாங்களே ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், ஹிஜாப் என்னும் கேடயத்தை இஸ்லாமியப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்[https://www.samarasam.net/view-art.php?id=265]// என்கிறார்கள் ‘ஹிஜாப்’பை அதி தீவிரமாக ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்.

“ஹிஜாப், பெண்ணின் கவர்ச்சியான உடலுறுப்புகளை மறைக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

அவர்களின் வாதப்படி, இஸ்லாமியப் பெண்கள் என்றில்லை, அனைத்துப் பெண்களின் அத்தனை உடலுறுப்புகளுமே கவர்ச்சியானவையா? காம இச்சையைத் தூண்டுகின்றனவா?

மார்பகங்களும், கன்னங்களும் உதடுகளும்[அந்தரங்க உறுப்புகள் உட்பட] தூண்டுதலுக்குக் காரணமானவை என்பதில் சந்தேகம் துளியும் இல்லை. அவற்றை மறைத்திடும் வகையில் ஆடை உடுப்பதில் தவறும் இல்லை.

ஆனால்.....

பெண்களின் தலைமுடியும், கழுத்தும், கைகளும்கூட உணர்ச்சியைத் தூண்டும் என்றால் அது அறிவுடைமை ஆகுமா? அவற்றை ஏன் மூடச் சொல்கிறார்கள்?

பெண்கள் உடுக்கும் உடைகளும், கடைகளில் விற்கப்படும் அவர்களுக்கான உள்ளாடைகளும்கூடத் தூண்டுகோள்களாக அமையக்கூடும் என்று சொன்னால், அது ஏற்கத்தக்கதா? அவற்றிற்கும் தடை விதிக்கலாமா?

உரிய மனப் பக்குவம் இல்லையென்றால், விலங்குகளும் பறவைகளும் புணர்ந்து இன்புறும் காட்சிகளைக் காண்பதுகூட உணர்ச்சிகளைத் தூண்டும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இவை தவிர.....

காணும் ஓவியங்கள், அழகுற வடிக்கப்பட்ட பெண் சிலைகள், பார்க்கும் திரைப்படங்கள்[குறிப்பாக, இணையங்களில் காட்சிப்படுத்தப்படும் ஆபாசக் காணொலிகள்] போன்றவையும் இது விசயத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்நிலையில், ஈரானியரிடமும், ஹிஜாப்பைக் கட்டாயப்படுத்துகிற பிற இஸ்லாம் நாட்டவரிடமும் நாம் முன்வைக்கும் கேள்வி, “இவை அனைத்தையும் நீங்கள் தடை செய்திருக்கிறீர்களா?” என்பதுதான்.

“ஆம்” என்றால் உங்களின் கண்ணுக்குத் தென்படும் அத்தனை ஹிஜாப் அணிந்த பெண்களையும்[மனைவியை, அல்லது மனைவிகளைத் தவிர] உடன் பிறந்த சகோதரிகளாகப் பார்க்கிறீர்களா?

“ஆம்... ஆம்” என்றால், உங்கள் நாட்டு ஆடவர்கள் எல்லோருமே ‘ஏகபத்தினி/பத்தினிகள்’ விரதர்கள் என்றாகிறதே?

“ஆம்... ஆம்... ஆம்” என்றால்.....

நீங்கள் வற்புறுத்துகிற ‘ஹிஜாப்’பை இவ்வுலகத்துப் பெண்கள் அனைவருக்குமான ‘பொது உடை[மை]’ ஆக்கலாம் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை!

திங்கள், 23 அக்டோபர், 2023

அடங்காத ஆசையும் அல்லாடும் இளவட்டங்களும்!!![உளவியல் கதை]

இது நான் படைத்த, கருத்தாழம் மிக்க உளவியல் கதை[ஹி... ஹி... ஹி!!!]; 2015இல் 67 பேர் மட்டுமே வாசித்தார்கள்.  

“பாவம் ‘பசி’பரமசிவம்!” என்று பரிதாபப்படுகிறீர்களா?

ஊஹூம்! அந்த 67இல் நீங்களும் ஒருவர் என்றாலும் மீண்டும் படியுங்கள்.

இதைக் குறைந்தபட்சம் 1,00,000 பேராவது[ஹி... ஹி... ஹி!!!] வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை... அல்ல, பேராசை!

நன்றி!

“சாயங்காலம் வரும்போது எப்பாடுபட்டாவது ஒரு மாந்திரீகனை அழைச்சிட்டு வாங்க" என்றார் அன்னபூரணி.

“எதுக்கு.” -விழிகள் விரியக் கேட்டார் சாமிநாதன்.

“கொஞ்ச நாளா நம்ம புள்ளயோட நடவடிக்கை ஒரு மாதிரியா இருக்கு.  எனக்குப் பயமாவும் இருக்கு.”

“விளக்கமா சொல்லு.”

“எப்பவும் என்கூடப் படுக்கிறவன், இப்போவெல்லாம் தனியாத்தான் படுத்துக்குறான்.”

“இப்போ அவன் குழந்தையில்ல; பதினாறு வயசைக் கடந்தவன். டீன் ஏஜ் பையன். பருவம் மாறும்போது நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இதுல பயப்பட ஒன்னுமில்ல. வேறென்னவெல்லாம் செய்யுறான்?”

“இனிமே, அசைவம் சாப்பிட மாட்டானாம்.”

“ஆன்மிகப் புத்தகங்கள் படிச்சிருப்பான்; சொற்பொழிவு கேட்டிருப்பான். மேலே சொல்லு.”

“அடிக்கடி, கண்ணை மூடிட்டு எதையோ முணுமுணுக்குறான். ‘என்னடா பண்றே?’ன்னு கேட்டா, 'போ. உன் வேலையைப் பாரு’ன்னு எரிஞ்சி விழறான். இதெல்லாம்கூடப் பரவாயில்லை. நடு ராத்திரில, பாத்ரூம் போயி, பச்சைத் தண்ணியை மொண்டு மொண்டு ஊத்திக்கிறான்......” -சொல்லி நிறுத்திக் கணவனின் முகத்தை ஆராய்ந்தார் அன்னபூரணி.

“இது எனக்கும் தெரியும். இன்னும் சொல்லு” என்றார் சாமிநாதன்.

“உடம்பில் கண்ட கண்ட இடத்தில் விதம் விதமான ஆஞ்சநேயர் உருவம்[tattoos]. ஏன் இப்படியெல்லாம் பண்றான்னு புரியலீங்க. யார் கண்ணும் பட்டிருக்குமோ, காத்து கறுப்புத் தீண்டியிருக்குமோன்னு பயமா இருக்கு. ஏழு மணிக்குப் புறப்பட்டுப் போனா, ராத்திரி ஒம்பது மணிக்கு வந்து சாப்பிட்டுத் தூங்கிப் போறீங்க. எதையும் கண்டுக்கிறதில்ல. மறக்காம, வரும்போது ஒரு மாந்திரீகரைக் கூட்டிட்டு வாங்க. நம்ம புள்ள கவினுக்கு சாந்தி கழிக்கணும்; கயிறு மந்திரிச்சிக் கட்டணும்” என்றார் அன்னபூரணி, கவலை தோய்ந்த குரலில்.

சம்மதம் சொல்லிக் கிளம்பினார் சாமிநாதன்.

அது ஒரு மனநல மருத்துவமனை.

காத்திருந்த சாமிநாதன், தன் முறை வந்ததும் மருத்துவர் குணசீலனைச் சந்தித்து ’வணக்கம்’ சொன்னார்.

“சொல்லுங்க” என்றார் டாக்டர் குணசீலன்.

தன் மகனின் மன நிலை மாற்றங்களை விவரித்த சாமிநாதன், “என் மனைவி, ஒரு மாந்திரீகனைத் தேடிப் பிடிச்சி அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. எனக்கு, மந்திரம், மாந்திரீகத்திலெல்லாம் நம்பிக்கை இல்லாததால, உங்களைத் தேடி வந்தேன்” என்று சொல்லி முடித்து, டாக்டரின் மறுமொழிக்காகக் காத்திருந்தார்.

"உங்க பையன் பேரு?”

“கவின் டாக்டர்.”

கவினுக்கு என்ன வயசு?”

“பதினாறு முடிஞ்சி ஆறு மாசம் ஆச்சு.”

“நாம எல்லோருமே பதினாறு பிளஸ்ஸைக் கடந்தவங்கதான். பதினாறில் கால் பதிச்ச போது பெண்களுடனான உங்க அனுபவத்தை மீட்டெடுத்துச் சொல்லுங்களேன்.” -சிரித்துக்கொண்டே சொன்னார் குணசீலன்.

கண்மூடி யோசனையிலாழ்ந்த சாமிநாதன் சொன்னார்: “ஓடிப் பிடிச்சித் தொட்டுத் தழுவி என்னோடு விளையாடிய என் தோழி ஒருத்தியை, சில ஆண்டுப் பிரிவுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. மலர் மொட்டுகளையும் மணம் பரப்பும் பூக்களையும் சுமந்த பூங்கொடி போல அவள் அசைந்து ஒசிந்து நடந்து வர்றதைப் பார்த்த போது, என் உடம்பு முழுக்க ஒருவித இன்பச் சிலிர்ப்பு பரவிச்சி டாக்டர்.....

.....அப்புறமும் அவளைப் பார்க்கணும், பேசணும்னு மனசு ஆசைப்பட்டது. பட்டும் படாமலும் ஒட்டி நின்னும் பேசினப்போ, உடம்போடு உடம்பு லேசா உரசினப்போ எல்லாம் புதுவிதமான சந்தோஷத்தை மனம் அனுபவிச்சது. அவளுடனான சந்திப்பு சாத்தியம் இல்லாமல் போன பிறகு, அழகான பெண்களைப் பார்க்கும் போதெல்லாம், நெருங்கி நின்னு அவங்க அழகை ரசிக்கவும், தொட்டுப் பேசவும், ஏன், கட்டி அணைக்கவும்கூட மனம் ஏக்கப்பட்டது. அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலையில், மானசீகமாய் அவர்களுடன் உறவாடித் திருப்தி அடைஞ்சிருக்கேன்.....

திருமணம் ஆகும்வரை இந்த நிலைதான் நீடிச்சது. எல்லாப் பதினாறு பிளஸ் விடலைகளின் நிலையும் இதுதானே டாக்டர்?” என்றார் சாமிநாதன்.

“ஆமா. இந்த மாற்றங்கள் இயற்கையானதுதான். கவலைப்பட ஒன்னும் இல்ல.”

“எங்க பிள்ளையோட நடத்தை ரொம்ப வித்தியாசமா இருக்கே டாக்டர்?”

“குமரிகளைப் பார்ப்பது, பேசுவதுமான இன்னபிற அனுபவங்களையெல்லாம் தனிமையில் அசைபோட்டுச் சுகம் காணும்போது பிறர் குறுக்கீடு நிகழ்ந்தால், அவர்களிடம் எரிந்து விழுவதும் விடலைகளுக்கான பொதுக் குணம்தான். இந்தக் குணம் உங்க மகனுக்கும் இருக்கு. அதோட கொஞ்சம் விதிவிலக்கானவனாகவும் இருக்கான். இவனைப் போன்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்..” என்ற டாக்டர் தொடர்ந்து பேசினார்.

“கவின், ஆஞ்சநேயர் உருவத்தைக் கையில் சுமந்து திரியறான்னா, அந்த பிரமச்சரியக் கடவுள், இச்சையைக் கட்டுப்படுத்த உதவுவார் என்ற நம்பிக்கைதான் காரணம். நடு இரவில், கவர்ச்சிக் குமரிகளின் நினைப்பில் உறக்கம் வராமல் இம்சைப்படும் போதெல்லாம் குளிர்ந்த நீரில் குளிச்சிருக்கிறான். அது இச்சையைத் தணிக்கும் என்பது தெரிஞ்சிருக்கு. எங்கோ படிச்சிருக்கான்; கேள்விப்பட்டிருக்கிறான். அசைவம் வேண்டாம்னு சொல்றது, அது இச்சையைத் தூண்டும் என்பதால்தான்.....

.....இந்த மாதிரியான காரியங்களில் அவன் ஈடுபடுறான்னா, அதுக்கு, சராசரிக்கும் மேலான காம உணர்ச்சியின் தாக்குதலே காரணம். எப்பாடு பட்டாவது அதை ஜெயிக்கணும்; வாழ்க்கையில் சாதிக்கணும்கிற  உத்வேகம் அவனுக்கு இருக்கு. இது ஒரு வகையான போர்க்குணம். அதீதக் காம உணர்ச்சி உள்ள இளைஞர்கள், முறையா அதைக் கட்டுப்படுத்தி, ஒரு லட்சியத்தோடு வாழ்ந்தா, எதிர்காலத்தில் சாதனையாளர்களா உருவாவது நிச்சயம்.

சாதனை நிகழ்த்திய அறிஞர்கள், மற்றும் மேதைகளின் வாழ்க்கையைத் தோண்டித் துருவி ஆராய்ந்தால், அவர்களில் மிகப் பலரும் மிகையான காம உணர்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஒரே ஒரு உதாரணம்... மகாத்மா காந்தி, தன் வாலிப வயதில் இதைக் கட்டுப்படுத்த மணல் மூட்டை சுமந்து ஓடுவாராம்; ஜில் தண்ணீரில் நேரம் போறது தெரியாம உட்கார்ந்திருப்பாராம்......

.....உங்க மகன், எதிர்காலத்தில் நிச்சயம் சாதிப்பான்.....

.....நல்ல சிந்தனையாளர்களின் நூல்களைப் படிக்கக் கொடுப்பது; அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கச் செய்வது; பல்வேறு இடங்களுக்கும் அழைச்சிட்டுப் போயி, பலதரப்பட்ட மனிதர்கள் பற்றி அறியச் செய்வது என்று உங்களால் முடிந்தவரை அவனுக்கு உறுதுணையா இருக்கலாம்.” -சொல்லி முடித்தார் டாக்டர்.

“நன்றி டாக்டர்.” -மலர்ந்த முகத்துடன் விடை பெற்றார் சாமிநாதன்.