திங்கள், 18 டிசம்பர், 2023

பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி! மிக்க நன்றி!! நெஞ்சார்ந்த நன்றி!!!

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாரணாசி ‘நமோ காட்’ என்ற இடத்தில் காசி தமிழ்ச் சங்கமம் 2.0 ஐத் தொடங்கிவைத்தார்.

அவர் உரையாற்றியபோது, ’புதிய நிகழ்நேரச் செயற்கை நுண்ணறிவு’ (AI)-அடிப்படையிலான ‘பாஷினி’[தமிழாக்கம் தேவை] என்ற மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்தபட்டது. அவர் ஆற்றிய உரையைத் தமிழாக்கம் செய்த கருவி அது.

“இந்த AI தொழில்நுட்பத்தை நாங்கள் முதன்முறையாகப் பயன்படுத்துகிறோம்” என்று கூறிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் இயர்போனைப் பயன்படுத்தித் தன் பேச்சைக் கேட்குமாறு அறிவுறுத்தினார்.

“இன்று, செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு இங்கு நடந்துள்ளது. இது ஒரு புதிய ஆரம்பம் மற்றும் நான் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது என்று நம்புகிறேன்” என்றும் கூறினார்.

விழாவில் பங்கேற்ற தமிழர்கள் மொழியாக்கக் கருவியைப் பயன்படுத்திப் பிரதமரின் உரையை முழுமையாகப் புரிந்துகொண்டார்கள்.

“இந்த AI தொழில்நுட்பத்தை நாங்கள் முதன்முறையாகப் பயன்படுத்துகிறோம்” என்று பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

இந்தத் தொழில்நுட்பத்தை முதலாவதாகத் தமிழர்களுக்கெனப் பயன்படுத்தியிருப்பது நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

மோடி அவர்களுக்குத் தமிழினத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

மிக்க நன்றி மோடி அவர்களே!

குறிப்பு:
'பாஷினி' என்பது AI- அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்பு அமைப்பாகும், இது மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுடன் பேசும்போதும், அந்த மொழியைப் புரியாதவர்களுடன் பேசும் போதும் அவர்களின் சொந்த மொழியில் பேச உதவுகிறது. இது,  ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகள் வழியாக அணுகக்கூடியது.

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

காசியில் தமிழ்ச் சங்கமம் விழா! ஊர் சுற்றப்போகும் மோடியின் கொத்தடிமைகள்!!

‘வாரணாசியில் நடக்கவிருக்கும் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடக்க விழா[17.12.2023]வுக்குச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வாரணாசி  செல்லும் பயணிகளை வழியனுப்பி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்’ -செய்தி[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kashi-tamil-sangam-program-opening-ceremony-pictures -15/12/2023]

இவ்விழா, காசித் தமிழ்ச் சங்கமத்தின் சார்பாக நடைபெறவுள்ள இரண்டாவது நிகழ்வு ஆகும். தமிழகம் & புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாராணசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்றுவரும் 8 நாள் பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது. https://arasiyaltoday.com/inaugural-ceremony-of-kashi-tamil-sangam-on-dec-17/

தமிழைச் சிறப்பிக்கிறோம் என்னும் பெயரில் மோடியின் 1400 கொத்தடிமைத் தமிழர்களுக்கு, மேற்கண்ட இடங்களை ‘ஓசி’யில் சுற்றிக் காட்டிக் ‘குஷி’ப்படுத்துவதோடு, இவர்களை வாரணாசியில் கூட்டிவைத்து[சங்கமம்], விழா என்னும் பெயரில் வாயளவில் தமிழைப் புகழ்வதன் மூலம், தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளை அள்ளுவது மோடியின் திட்டம்[தந்திரம்!].

ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் உள்ள வங்கி, ரயில் போக்குவரத்து, அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் இந்தித் திணிப்பையும் ‘இந்தி’யர் திணிப்பையும் கண்டு மனம் கொதித்துக் கிடக்கும் தமிழர்கள் ‘பாஜக’வைத் தேர்தல்களில் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி. அவர்களின் ஆதரவைப் பெற மோடி செய்யும் சூழ்ச்சி இது.

தொடரும் மோடியின் தமிழ்த் துரோக நடவடிக்கைகளை கிடப்பில் வைத்து[ஏற்கனவே கேட்கப்பட்டவை], இக்கணத்தில் நாம் முன்வைக்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி:

ஆங்கில மொழியில் உள்ள இந்திய அரசியல் சாசனக் கோப்புகளுக்கு அவசர அவசரமாக, வாயில் நுழையாத இந்திப் பெயர்களையும் சமஸ்கிருதப் பெயர்களையும் சூட்டிக் குதூகளிக்கும் மோடி, ஏதேனும் ஒரு கோப்புக்காவது தமிழ்ப் பெயர் சூட்டியிருக்கிறாரா[பிற இந்திய மொழிகள் உட்பட]?

இல்லை; இல்லவே இல்லை.

அப்புறம் எதற்குக் காசித் தமிழ்ச் சங்கமம் விழா, வாரணாசி வெங்காயத் துவையல் விழா, பக்திச் சுற்றுலா எல்லாம்?!

‘அடிமை ஏஜண்ட்’ அண்ணாமலைக்கு இந்தக் கேள்வி சமர்ப்பணம்!