ஞாயிறு, 28 ஜனவரி, 2024

‘பிரியா விடை’யும் இறப்பவருக்கு இருப்பவர் அளிக்கும் ஆறுதல் பரிசுகளும்!!!


இறக்கவிருப்பவர் நம் உறவினராகவோ, வேறு துணை இல்லாத  உற்ற நண்பராகவோ இருந்தால், அவரின் உடல் நோவைச் சற்றேனும் குறைக்கவும், மன வலியையும் மரண பயத்தையும் ஓரளவுக்கேனும் தணிக்கவும் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

*அறை விளக்கைச் சற்றே மங்கலாக ஒளிரவிட்டு மனதுக்கு இதமான சூழலை உருவாக்கலாம்.

*அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருப்பது, பிரிவை எதிர்கொள்ளவிருக்கும் அந்த நேரத்தில் அவருக்கும் நமக்கும் ஆறுதல் அளிப்பதாக அமையும்.

*பிரியாவிடை பெறும் அந்தக் கணங்களில் ஆரவாரமற்ற அமைதியான சூழல் அவசியம் என்பதால், அதிக அளவில் கூட்டம் சேரவிடாமல், அவரின் அன்புக்குரிய சிலரை மட்டும் அறைக்குள் அனுமதிப்பது நல்லது.

*அவருடைய செவிப்புலன் நல்ல நிலையில் இருந்தால், அவருக்கு மிக விருப்பமான பாடல்களைக் குறைந்த தொனியில் ஒலிக்கவிடலாம்; அவர் மிக விரும்பும் நூலிலிருந்து சில பகுதிகளைப் படிக்கலாம்.

*அவர் உரையாடும் நிலையில் இருந்தால், அவருக்கு என்ன தேவை என்று கேட்பதன் மூலம் அவர் மீதான நம் பாசத்தை உணரச் செய்யமுடியும்.

*அவர் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பது, அந்தத் துயரம் மிகுந்த நேரத்திலும் அவருக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்து ஆறுதல் பெற உதவும்.

*தேவைப்பட்டால், குறைந்த அளவில் அவருக்கு மிகப் பிடித்தமான உணவைத் திரவ வடிவில் அருந்தச் செய்யலாம்.


*தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் அவர் இருந்தால் அந்நிலையிலேயே இருக்க விடுவது நல்லது. பாச மிகுதியால் பேச்சுக்கொடுப்பது மரண வலி அதிகரிக்க வழிவகுக்கும்.


*அவர் நம்மைப் பிரியவிருக்கும் இறுதி வினாடிகளில்.....


இரத்த அழுத்தம் குறையும். சுவாசம் ஏறுமாறாக இருக்கும்; இதயத் துடிப்பும் குறையும்; வெப்பநிலை தணிந்து உடம்பெங்கும் குளிர்ச்சி பரவும்.

 
எனவே, 

*நம்மிடமிருந்து அவர் ‘பிரியாவிடை’ பெறும் தருணம் அது என்பதைப் புரிந்துகொண்டு, சில வினாடியாயினும் அவரைப் பிரியாமலிருப்பது மிக மிக முக்கியம்.

மேற்குறிப்பிட்ட செயல்களை மனம் கோணாமல் செய்து முடிப்பதால், இறப்பவர் அனுபவிக்கும் மரண வலி சற்றே குறைய வாய்ப்புள்ளது; இருப்பவரும் ஓரளவு மன அமைதி பெறலாம்.

                                               *   *   *   *   *
***தளங்கள் சிலவற்றில் பொறுக்கிச் சேர்த்த கருத்துகளுடன் என் பரிந்துரைகளையும் இணைத்து வடிவமைத்த பதிவு இது.

சனி, 27 ஜனவரி, 2024

பெரிய பெரிய மதங்களும் பெரும் பேரழிவுகளும்!!!

இந்தத் தளத்தில் வெளியான இடுகைகளில் ஆங்காங்கே, ‘மதங்களால் அதிக அளவில் தீமைகளே விளைகின்றன[நன்மைகள் மிகவும் குறைவு]' என்னும் கருத்தாக்கம் வலியுறுத்தப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.

‘கோரா’வில் சற்று முன்னர் வலம்வந்தபோது, வாசிக்க நேர்ந்த சில அன்பர்களின் பதிலுரைகள்[‘கேள்வி-பதில்’] மனதைக் கவர்ந்தன.

அவற்றை இங்குப் பகிர்ந்துள்ளேன்.

                                         *   *   *   *   *

தேவேந்திரன்: 

மதம் இல்லாத உலகம் என்னவாகத் தோற்றமளிக்கும்?

சமணர் கழுவேற்றங்கள் நடந்திருக்கமாட்டா.

சிலுவைப் போர்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை..

இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு அவசியமிருந்திருக்காது.

இலங்கைக்குள் யுத்தம் நடந்து, தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டிரார்.

பாகிஸ்தான் உருவாகியிருக்காது.

கோட்சே காந்தியைச் சுட்டிருக்கமாட்டான்.

வார்ணாசிரமம் தழைத்தோங்கி, மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்டவர் ஆக்கப்பட்டு, கடும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிரார்.

பெரியார் இராமசாமி, பெரியார் ஆகியிருக்கமாட்டார்.

பாபர் மசூதி இருந்திருக்காது,

பாஜகவும் இருந்திருக்காது.

மொத்தத்தில்,

புனிதம் என்ற சொல்லே இருந்திருக்காது.

மனிதம் இன்னும் மிகுந்திருக்கும்.

* * * * *

மார்செலோ எலியாஸ் டெல் வாலே: 

மதம் மனிதர் குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலா?

ஆம், மதம் மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. குறைந்தபட்சம், இது தனி மனிதச் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மதம், வரலாற்று ரீதியாக, மக்களுக்குப் பெரும்பாலும் உதவியாக இருந்ததில்லை; மதவாதிகளின் சுயநலத்திற்காக அது எப்போதும் சேவை செய்கிறது. இது கட்டுப்பாடு, கையாளுதல் மற்றும் அந்நியப்படுத்துதல் ஆகியவற்றிற்கான கருவியாகும்.

* * * * *

Chandrasenan C G:

மதங்கள்... விளைவுகள்?

மதம் மனிதர்களுக்கு இடையே தீராத பகைமையையும் கொலை வெறியையும் வளர்த்ததுதான் மிச்சம். மதவெறியால் மனிதர்கள் லட்சக்கணக்கில் இறந்ததற்குச் சரித்திரம் சாட்சியாகும். நடுக்கிழக்கில் இருந்து வந்த அந்த இரண்டு மதத்தவரும் மனித இனத்தைச் சீரழிக்காமல் ஓயமாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்துக் கணிப்பு. 1.இயற்கைச் சீற்றங்கள் 2.யுத்தங்கள் 3.மதங்கள் ஆகியவற்றால் பெரும் பேரழிவுகள் நிகழ வாய்ப்புள்ளது.

மதம் சார்ந்தவர்கள் குற்றங்கள் புரிவதில்லை, அல்லது அதைக் குறைவாகச் செய்கிறார்கள் என்பதெல்லாம் பொய். சொல்லப்போனால், தங்களின் கடவுள்களையே உறுதுணையாகக்கொண்டு அதிக அளவில் அதைச் செய்கிறார்கள் என்று சொல்லலாம். மனிதர்களைச் சட்டங்கள்&தண்டனைகள் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்பது அறியத்தக்கது..... Yes, strong governance and rule of law alone solution for every thing.