செவ்வாய், 5 மார்ச், 2024

நீதிமன்றங்கள் நீதிபதிகளுக்காகவா மக்களுக்காகவா?!?!?!

சமுதாயத்தில்  ஏற்றத்தாழ்வுகளும், பெண்ணடிமைத்தனமும், அளவிறந்த மூடநம்பிக்கைகளும் விஷக்கிருமிகளாகப் பரவி நிலைகொள்ளக் காரணமான சனாதன தர்மத்தைக் கடுமையாகச் சாடி, சமூக ஆர்வலர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் என்பது பலரும் அறிந்ததே.

சனாதன தர்மத்தைச் சுமந்து திரிபவர்களால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பதோடு, சில மாநிலங்களைச் சேர்ந்த சனாதனிகள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தார்கள் என்பதும் அறியப்பட்ட நிவுழ்வுகள்தான்.

இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, “கருத்துரிமை, மதச் சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றை உதயநிதி தவறாகப் பயன்படுத்திவிட்டார்” என்று சொல்லியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

உதயநிதி தவறாகப் பயன்படுத்திவிட்டார் என்று சொல்வதற்கு முன்னால், கருத்துரிமையையும், மதச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி மதவாதிகள், குறிப்பாக, தங்களைக் கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லி அலையும் சாமியார்கள், தங்களின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள என்னவெல்லாம் அட்டூழியங்கள் செய்தார்கள் என்பதைப் பற்றி விசாரித்து அறிந்திருந்தால் நீதிபதிகள் பெரும் பாராட்டைப் பெற்றிருப்பார்கள்.

அறிந்திருந்தால், உதயநிதி கருத்துரிமையையும், மதச் சுதந்திர உரிமையையும் மீறிவிட்டதாகக் கண்டித்திருக்கமாட்டார்கள்.

நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டும் சட்டங்களின்படி, உதயநிதி தவறுகள் செய்திருந்தாலும், உரிய விசாரணைக்குப் பிறகு அவர் செய்த குற்றத்திற்கான தண்டனையை அவர்கள் அறிவிக்கலாம்.

இதற்கு மாறாக, விசாரணயின் ஆரம்பக் கட்டத்திலேயே, உதயநிதி தவறு செய்துவிட்டார் என்று அறிவித்திருப்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை.

மிக மிக எச்சரிக்கையாக நடுநிலையுடன் செயல்பட வேண்டிய நீதியரசர்கள் அவசரகதியில், சனாதனத்தை ஆதரிப்பது போல்[?] பேசியிருப்பது சரியா? 

மக்களுக்கான நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தலாமா?

இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்களைத் தரும் உரிமை, அல்லது அதிகாரம் நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது என்பதால் வேறு எவரொருவரின் தலையீடும்[தலையிட்டால் தண்டிக்கப்படுவார்கள்] அவசியமற்றதாகும்.

திங்கள், 4 மார்ச், 2024

‘25 ஆண்டுகள்’...இது என்ன கணக்கு மோடி அவர்களே?!

‘குஜராத்’ அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, 1900 இளைஞர்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், நம் பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதம் படிக்கப்பட்டது.

அதில்.....

“அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆக்கும் கனவை நனவாக்கத் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். அந்த வகையில், அந்த 25 ஆண்டுகள் நம் நாட்டுக்கு முக்கியமானவை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், தன்னலம் துறந்தும் இளைஞர்கள்[எல்லா வயதுக்காரர்களும்தான்] கடுமையாக உழைத்தால் ஐந்தாறு ஆண்டுகளிலேயே வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுதல் சாத்தியமே.

5 ஆண்டுகள் போதாதென்று மோடி நினைத்திருந்தால், 10 ஆண்டுகளில் என்று சொல்லியிருக்கலாம்.

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆண்டுகளைத் துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியாது என்றால், ‘வெகு விரைவில்’ என்றுகூடக் குறிப்பிட்டிருக்கலாம்.

அவர் 25 ஆண்டுகள் என்றது எந்த அடிப்படையில்?

மோடிஜிக்கு இப்போது 70[சற்றே கூடுதலாகவும் இருக்கலாம்] வயது. 95 வயதுவரை இந்த நாட்டின் பிரதமராகக் கோலோச்சும் ஆசையைத்தான் ‘நாட்டு நலன்’ என்னும் முலாம் பூசி, இந்தியா வளர்ந்த நாடாக 25 ஆண்டுகள் தேவை என்று சொல்லியிருக்கிறார்.

மோடி உலகமகா புத்திசாலிதான். சந்தேகமே வேண்டாம்!