திங்கள், 6 மே, 2024

வாய்விட்டுச் சிரிக்கலாம்... மோடி அனுமதித்தால்!

உயிர் வாழ்வதற்குப் போதுமான அளவு உணவு தேவை. சிறப்பாகச் செயல்படுவதற்கு நல்ல உடலமைப்பும், ஆழ்ந்து சிந்திப்பதற்கு முழு வளர்ச்சி பெற்ற மூளையும் தேவை.

மூளை இல்லையேல் சிந்திப்பது மட்டுமல்ல, உடம்பின் இயக்கம் முழுமையாகத் தடைப்படும்.

மனிதர்கள் என்றில்லை, கோடானுகோடி உயிர்களின் இயக்கத்திற்கும் மூளையே முழு ஆதாரம் என்று சொல்லலாம்[விதிவிலக்குகள் இருக்கக்கூடும்].

பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று கொண்டாலும், மனிதர் உட்பட ஒவ்வோர் உயிரும் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில்தான் அவர் படைத்திருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச உணவுகூட இல்லாமல் நாம் பட்டினி கிடந்தால், சிந்திப்பது உட்பட நாம் இயங்குவது முற்றிலுமாய்த் தடைப்படுமே தவிர, “ஐயோ பாவம்” என்று இரக்கப்பட்டு, ஆவி வடிவில் அல்லது கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் உருவில் நம் உடம்பில் ஒட்டிக்கொண்டு, நாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் உடலுறவு கொள்ளும்போதும்[ஹி... ஹி... ஹி!!!] கடவுள் நம்மைக் கண்காணித்து இயக்குவதெல்லாம் இல்லை; இல்லவே இல்லை.

உண்மை இதுவாக இருக்க, நம் பிரதமர் மோடி அவர்கள்,  பிரபல நாளேடான ‘ஈநாடு’ பத்திரிகைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், உலகின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்ற ஏதோ ஒரு தெய்வீகச் சக்தி தன்னை இயக்குவதை அடிக்கடி உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்.


மோடியின் இந்தக் கூற்று நம்மை வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது. மோடி அனுமதித்தால்.....

சிரிக்கலாம்... சிரிக்கலாம்... வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்!

                                         *   *   *   *   *

https://www.etvbharat.com/ta/!bharat/divine-power-working-through-me-in-helping-india-become-a-superpower-says-pm-narendra-modi-tns24050503662

ஞாயிறு, 5 மே, 2024

தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் செய்த துரோகம்!!!

முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா மீதும், ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதும் பாலியல் துன்புறுத்தல் & வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

மிகவும் பாதுகாப்பான இடம் என்று நம்பித் தன் தந்தை தேவகௌடா வீட்டில் அடைக்கலமாகியிருந்த ஹெச்,டி,ரேவண்ணா[வன்புணர்வு வழக்குப் புகழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை & ஹோலேநரசிபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்] கைது செய்யப்பட்டார்[தினமலர்] என்பது ஊடகச் செய்தி.

ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஹெச்.டி.ரேவண்ணா தன்னைக் கைது செய்ய வந்த போலீசாரைக் காத்திருக்கச் செய்துவிட்டு ஜோதிடரின் ஆலோசனைப்படி 6.50 மணிக்குப் பின்னர் போலீசாருடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கக் கூடுதல் செய்தி.

மேற்கொள்ளும் செயல் நலம் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, ஜோதிடர்களை அணுகி நல்ல நேரம் பார்த்து நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள் நம்மில் பெரும்பாலோர்.

குற்றச் செயலில்[மகனுக்கு உடந்தையாக] ஈடுபட்டதாகக் கருதப்படும் ஹெச்.டி.ரேவண்ணா விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்போது நல்ல நேரம் பார்த்தது, அதன் மூலம் செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்புவதற்காகத்தான்.

ஆக, நல்லவை என்றில்லாமல், கெட்ட செயல்களில் ஈடுபடும்போதும் நல்ல நேரம் பார்த்து அவற்றைச் செய்தால், அவற்றின் விளைவு நன்மை பயப்பதாக அமையும் என்பது அவர் நம்பிக்கை..

ஆகவே, தன் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவை[ஹாசன் தொகுதி எம்பி. > 500க்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்வு செய்து சாதனை நிகழ்த்தியவர் & 2,976 ஆபாச வீடியோக்களைக் கைவசம் வைத்திருந்தவர்] ஜெர்மன் நாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமிதித்திருத்தல் கூடாது.

மாறாக, காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவைக் கைது செய்ய  வரும்போது, அவர்களைத் தாஜா செய்து சற்று நேரம் காத்திருக்கச் செய்துவிட்டு, ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்று, நல்ல நேரத்தில் விசாரணைக்காகப் போலீசாருடன் அவரை அனுப்பவது நல்லது. ஹெச்.டி.ரேவண்ணா இதைச் செய்திருக்கலாம். 

செய்யத் தவறியதன் மூலம், பெற்ற மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனான ஹெச்.டி.ரேவண்ணா!

                           *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/-deve-gowdas-son-revanna-arrested-in-sex-case--/3616026