புதன், 5 ஜூன், 2024

தியானிச்சி பிரேமலதாவும் தியானன் நரேந்திர மோடியும்!!!

வழிபடும் கடவுளின் பெயரை, சப்பணமிட்டு அமர்ந்த கோலத்தில்  நிமிடக்கணக்கிலோ, மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ உச்சரிப்பது ‘தியானம்’ எனப்படும்[மாறுபட்ட விளக்கங்களும் உள்ளன].

தியானம் செய்பவன் தியானன்; செய்பவள் தியானிச்சி.

ஆழ்நிலை தியானத்தின் மூலம் உலகோர் கவனத்தை ஈர்த்த தியானன் ரட்சகன் மோடி.

தியானிச்சி அன்னை பிரேமலதா.

நேரம் காலம் பார்க்காமல் தியானத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த காலங்களில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

நிகழ்காலத்தில் பிறவி ஞானி மோடி, அவ்வப்போதும் தொடர்ந்தும் தியானம் செய்து இது விசயத்தில் சாதனை புரிந்திருப்பது உலகறிந்த அதிசய நிகழ்வு.

ஆனால், அதன் மூலம் அவர் பெற்ற பலன்?

நானூறு தொகுதிக்கு ஆசைப்பட்டு இமய கிரி, கைலாயகிரி, கன்னியாக்குமரி என்று கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் தியானம் செய்தும் 241ஐத் தாண்ட இயலவில்லை.

இது அண்மைக்கால நிகழ்வுகளில் ஒன்று.

இன்னொன்று.....

மகனின் வெற்றிக்காகக் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தியானம் செய்தார்[மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தபோது] என்பது.

பயன்?

அவர் மகன் தோல்வியைத் தழுவினார்.

அவர் வெற்றி பெற்றிருந்தால், இது தலைவி பிரேமலதா செய்த தியானத்தின் பலன் என்று ஊடகக்காரர்கள் கொட்டை எழுத்துகளில் செய்தி வெளியிட்டுக் குதூகளித்திருப்பார்கள். அம்மையாரும் ‘அவதாரப் புருஷி’[மோடி ‘அவதாரப் புருஷன்’] ஆகியிருப்பார்!

பாவம் பிரேமலதா! பாவம் மோடி!!


https://tamil.asianetnews.com/gallery/gallery/premalatha-vijayakanth-sat-in-meditation-for-the-success-of-her-son-mma-sejv5a#image4null

செவ்வாய், 4 ஜூன், 2024

தேவை... கடவுள் மோடிக்கு நாடெங்கும் கோயில்கள்!!!

கடவுள்தான் தன்னை இந்தப் பூமிக்கு அனுப்பியதாகத் தேர்தல் பரப்புரையில் பேசினார் நம் பிரதமர் மோடி.

அவரின் வேட்பாளர்கள்[பாஜக] பெரும்பாலோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை[பகல் 11.55] வகிப்பதால்,  மோடி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்றுப் பிரதமராக நீடிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.

அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை நம் மக்களில் பெரும்பான்மையோர் நம்புகிறார்கள் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதால், ஏற்கனவே அவர் கடவுளுடன் வாசம் செய்தவர் என்பதும், கடவுள் தன்மை வாய்ந்தவர் என்பதும் உறுதியாகிறது.

கடவுள் தன்மை வாய்க்கப்பெற்றவரையும் கடவுள் என்றே சொல்லலாம்.

அதாவது, கடவுளால் இங்கு அனுப்பப்பட்ட கடவுளாவார் மோடி.

இனியும் அவர் நம்முடன் இருந்து நம்மைப் பாதுகாப்பார் என்பதால், வேறு கடவுளையோ, கடவுளர்களையோ நாம் தொழ வேண்டிய அவசியம் இல்லை.

ஆதலினால்…..

ஊரூருக்கு கடவுள் மோடிக்குக் கோயில் எழுப்பவது நம் கடமை. 

ஏற்கனவே இங்குள்ள அனைத்துக் கோயில்களிலும்[பிற கடவுள்களுக்கானவை] மோடிக் கடவுளைக் குடியேற்றி வழிபடலாம்.

போற்றி போற்றி... மோடி பகவான் போற்றி!!!