திங்கள், 18 நவம்பர், 2024

இவருக்கு[விஜய்] 80! அவருக்கு[எடப்பாடியார்] 154!! ஏனய்யா, கூட்டுக்கொள்ளை அடிக்கவா கூட்டணி?!

2026இல் நடைபெறவுள்ள த.நா.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் உள்ளன.

ஆம், 15 மாதங்களுக்கு மேல்; சுமார் ஒன்றேகால் ஆண்டுகள்.

மக்களுக்கு எப்படியெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்து, திட்டங்கள் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தி மக்களின் வாக்குகளை அள்ளும் முயற்சியில் ஈடுபடாத ‘த.வெ.க.’காரர்களும் ‘அ.தி.மு.க.’வினரும்[தி.மு.க. உள்ளிட்ட மற்றக் கட்சிக்காரர்களும், வடக்கன்களின் அடிமைகளும்தான்] தொகுதிகளைப்[2026 தேர்தல்] பங்கு பிரிப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள் என்பது செய்தி [https://tamil.asianetnews.com/].

“அடப்பாவிகளா, இருக்கிற கோடானுகோடிச் சொத்து போதாதென்று, ஆட்சியைக் கைப்பற்றிக் கூட்டுக் கொள்ளையடிக்கவும், உண்டு கொழுத்துச் சல்லாபிக்கவுமா கட்சி ஆரம்பித்தீர்கள்? கட்சி நடத்துகிறீர்கள்? மனசாட்சியே இல்லாத மனிதர்களா நீங்கள்?"

இப்படிக் கேட்பதால் எல்லாம் நீங்கள் திருந்தப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும் கேள்வி கேட்பதற்குக் கட்டுப்படுத்த இயலாத மனக் குமுறலே காரணம் ஆகும்

* * * * *

ஆதாரச் செய்தி:

//தமிழக வெற்றிக்கழகத்திற்கு 80 தொகுதிகளை அக்கட்சி கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  80 தொகுதிகளை அதிமுக விட்டுக்கொடுத்தால் மீதமுள்ள 154 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிடும் நிலை உருவாகும். மேலும் சிறிய, சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீதமுள்ள தொகுதிகளில்தான் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மைக்குத் தேவையான 117 இடங்களை அ.தி.மு.க. பெற முடியமா என்ற குழப்பம் அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது//

https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/will-there-be-an-alliance-between-tvk-and-aiadmk-in-the-tamil-nadu-assembly-elections-kak-sn341d#image1


பற்றி எரியும் மணிப்பூரும் மோடி செல்லாததன் ‘உண்மை’க் காரணமும்!!

“பிரதமர் மோடி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூருக்குச் செல்ல மறுப்பது ஏன்?” என்னும் ஜெய்ராம் ரமேஷின் கேள்விக்கு, ‘மோடி உயிரியல் பிறப்பல்லாதவர்[கடவுளால் அனுப்பப்பட்டவர்> கடவுளின் கூறு] என்பதே பதிலாக இருப்பதை ஜெ.ரமேஷ் அறியாதது பரிதாபம்.

கடவுளின் ஒரு கூறான மோடி ஏதோவொரு சூக்கும வடிவில் இந்த உலகுக்குக் அனுப்பப்பட்டிருப்பார் எனில் இங்குள்ள மனிதர்களுக்கு அவ்வகையான உடம்புடன்[சூக்கும உடம்பு] அவர் தொண்டு செய்தல் இயலாது.

எனவே,  ஒரு பருவுடலுடன்[மோடி இப்போதைய உருவம்] கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது அறியத்தக்கது.

இந்தப் பருவுடலுடன் இந்தியர்களுக்கும் ஒட்டுமொத்த உலகுகுக்கும் மோடி ஆற்றும் பணி விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

நாடு நாடாகச் சென்று உலகின் அத்தனை நாடுகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதை உயர் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர், ஆதிவாசிகளும் குடியேறிகளும் இன வெறியுடன் ஒருவரையொருவர் கொலை ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டிருக்கும்[இரு தரப்பிலும் ஏராள உயிர்ப்பலிகள்] அதிபயங்கரச் சூழலில் மோடி மணிப்பூர் செல்வாரேயானால், இன வெறியர்களின் தாக்குதலில்[துப்பாக்கிச் சூடாகவும் இருக்கலாம்] அவருடைய பூத உடம்பு அழிந்துபட நேரிடும்[நடக்கவே கூடாதது] என்பது உறுதி[பாதுகாப்புப் படை வீரர்களே தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலை].

மோடியின் பூத உடம்பு அழியுமேயானால், இங்குத் தன் பணியைத் தொடர இயலாத நிலையில், அவர் மீண்டும் தன்னை அனுப்பி வைத்த கடவுளிடம்[சூக்கும உடலுடன்] சென்று அவருடன் இரண்டறக் கலந்துவிடுவார்.

அவரின் இழப்பால் இந்நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாவார்கள்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அறிவுஜீவியான மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பது அனைவரும் அறியத்தக்கது.

மோடியை இழித்துரைத்த காங்கிரஸ்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது!

                                          *   *   *   *   *

*** “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு கடவுள் அளித்த சக்திதான் காரணம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். https://www.hindutamil.in/news/india/1252746-prime-minister-modi-interview.html