திங்கள், 25 நவம்பர், 2024

ஸ்டாலின் ஆணவப் பேச்சும் அன்புமணியின் அடங்காத கடுங்கோபமும்!!!

“ஸ்டாலின் அதானியைச் சந்தித்தது ஏன்?” என்று வன்னியர் குலக் காவல் தெய்வம் ராமதாஸ் கேட்டாராம். “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை” என்று ஸ்டாலின் ஆணவமாக[ஆணவமா?!]ப் பதில் சொன்னாராம்.

பொங்கியெழுந்தார் ராமதாஸின் தவப்புதல்வன் அன்புமணி. “சமூகச் சீர்திருத்தவாதியாம் ராமதாசை அசிங்கப்படுத்திய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், உணர்ச்சிவசப்பட்டிருக்கும் ‘பாமக’ தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலாது” என்று சீறியிருக்கிறார்[‘news தமிழ்’ செய்தி. 25.11.2024 பிற்பகல் 2.45].

அன்புமணியை ஆதரிப்பதோ கண்டிப்பதோ நம் நோக்கமல்ல.

‘தொண்டர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறாரே, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருத்தல் வேண்டும்.

“ஸ்டாலினை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புங்கள்; ஊரூருக்குப் போராட்டம் நடத்துங்கள். ஸ்டாலின் போகுமிடமெல்லாம் வாகனத்தை வழிமறித்து அடித்து நொறுக்குங்கள்[கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சிக்கு உள்ளானவர்கள் செய்யும் செயல் அடித்து நொறுக்குவதுதான்]” -அன்புமணி இப்படிச் சொல்ல நினைத்திருப்பாரோ? சொல்லவில்லை. சொல்லியிருந்தால்.....

அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்பதால் தொண்டர்களைத் தூண்டிவிடுவதோடு நிறுத்திக்கொண்டார்.

தொண்டர்கள் தடியடிபடலாம்; சிறைக்குச் சென்று வதைபடலாம். அவையெல்லாம் ‘பாமக’வின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்யும் தியாகம்.

தொண்டர்களின் தியாகத்தில்தானே கட்சிகள் வளர்ச்சி அடைகின்றன! தலைவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்!!

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களைக் கொண்டது ‘பாமக’. அன்புமணி அதன் தலைவர்[அறிக்கைவிடுவது மட்டுமே ராமதாஸின் பணி].

அவர் வாழ்க! வளர்க!!

ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஏழுமலையானுக்கு இங்கு நிகரில்லை கண்டீர்!!!

திருப்பதியின் உலகப் புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோயிலின் நிகர மதிப்பு ₹2.5 லட்சம் கோடி(சுமார் 30 பில்லியன் டாலர்). ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, உணவு&குளிர்பான நிறுவனமான நெஸ்லே, அரசுக்குச் சொந்தமான எண்ணெய்&இயற்கை எரிவாயு ஆகியவற்றின் சந்தை மூலதனத்தைவிட இது அதிகம். 

சுமார் இரண்டு டஜன் நிறுவனங்கள் மட்டுமே இந்தக் கோயில் அறக்கட்டளையின் நிகர மதிப்பைவிட பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

ஏழு மலைகளில் உள்ள குடிசைகள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற சொத்துக்கள்&பழங்கால நகைகள்[சரியாக மதிப்பிடப்படவில்லை] நீங்கலாக.

பிரமிப்பின் உச்சத்தைத் தொட்டுவிட்ட நிலையில், நாம் எழுப்பும் கேள்வி.....

உலக அளவில், பல்லாயிரக்கணக்கான கடவுள்கள்[இஸ்லாம், கிறித்தவம், இந்து, பிற மதங்கள் சார்ந்தவை; ‘கடவுள் ஒருவரே’ என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தை] மக்களால் வழிபடப்படுகின்றன.

அக்கடவுள்களுக்குக் கோடி கோடி கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் திறமை திருப்பதி ஏழுமலையான் அளவுக்கு இல்லாமல்போனது எப்படி?

கடவுள்களுக்குள் ஏன் இத்தனைப் பிரமாண்ட ஏற்றத்தாழ்வுகள்?

ஏன்? ஏன்? ஏன்?

***நம்புங்கள், நம் கேள்வி மனப்பூர்வமானது; உள்நோக்கம் ஏதும் இல்லை! ஹி... ஹி... ஹி!!!

                          *   *   *   *   *

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.ndtv.com/andhra-pradesh-news/tirupati-temple-worth-over-rs-2-5-lakh-crore-is-richer-than-wipro-nestle-3496660