வெள்ளி, 10 ஜனவரி, 2025

இன்று ‘நரக வாசல்கள்’ திறப்பு[வைகுண்ட ஏகாதசி]!!!

சொர்க்கம் இருக்கும் இடம் தெரியாது; சென்று திரும்பிவந்து சொர்க்கம் இருப்பதை உறுதிப்படுத்தியவனும் இல்லை. குறைந்தபட்சம் அப்படியொன்று இருப்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்களைத் தந்தவனும் இல்லை.

ஆனால், மூடர்களின் களிமண் மண்டைகளில் திணிக்கப்பட்ட இந்த மூடத்தனத்தைக் கட்டிக்காப்பதற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள்தான் கோயில்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் குறுமதியாளர்கள்.

புண்ணியம் செய்தவனுக்கெல்லாம் சொர்க்கம் வாய்ப்பது உறுதி என்கிறவர்கள், வைணவக் கோயில்களில் உள்ள சொர்க்கவாசல்களைத் தரிசித்தாலே புண்ணியம் கிடைக்கும் என்று புளுகி வைத்தது ஏன்?

கொலை, கொள்ளை, வன்புணர்வு என்று அத்தனை அக்கிரமச் செயல்களில் ஈடுபவன்கள்கூட சொர்க்கவாசலைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்குமா? சொர்க்கம் செல்ல முடியுமா?

உழைக்காமல் உண்டு கொழுக்கவும் சமுதாயத்தில் தங்களின் ‘அந்தஸ்தை’ மேம்படுத்தவும் சுயநலக் கும்பல் கட்டிவிட்ட கதை இது.

ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகள் இவர்கள்.

அவர்கள் இவர்களைப் பாதுகாப்பதால்தான், பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் பட்ட பாடெல்லாம் வீணாகிப்போனது. மூடச் செயல்களை எதிர்ப்பவர்களைக் கைது செய்து வழக்குத் தொடுத்துத் தண்டிக்கும் கைங்கரியத்தை ஆட்சியாளர்கள் தவறாமல் செய்கிறார்கள். 

கோயில்களைச் சொந்தமாக்கிக்கொண்டு நாசகாரக் கும்பல்கள் அடிக்கும் கொட்டங்களைக் கண்டுகொள்வதே இல்லை. 

அயராமல் இந்தக் கும்பல் செய்யும் பரப்புரையால்தான், சொர்க்கவாசலைத்[அத்தனை வைணவத் தலங்களிலும் உள்ளன] தரிசிக்கக் கூட்டம் கூட்டமாகச் சென்று முட்டி மோதிப் பக்தர்கள் செத்தொழியும் அவலம் தொடர்கிறது[திருப்பதியில் 6 பேர் இறந்தது அண்மை நிகழ்வு. இந்தச் செம்மறி ஆட்டுக் கூட்டம் செய்த குற்றத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்].

சொர்க்க வாசலைத் தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும் என்று நாளும் பொய்யுரைக்கும் ஆதிக்க வெறிக் கும்பலுக்கும், இவர்களைப் பாதுகாக்கும் ஆட்சியாளர்களுக்கும் நாம் அறிவுறுத்துவது:

நீங்கள் திறந்து வைப்பது சொர்க்கவாசல்கள் அல்ல, மூடத்தனங்களை வளர்த்து, மூடர்களின் எண்ணிக்கையை அபிரிதமாகப் பெருக்கி இந்த மண்ணுலக வாழ்க்கையை நரகலோகமாக மாற்றும் அடாத செயலாகும்!

திருந்துங்கள், அல்லது திருத்தவிடுங்கள்.

வியாழன், 9 ஜனவரி, 2025

“ஆட்டுக்காரனுக்கும் ஆட்டக்காரனுக்கும்[சீமான்] ஆயிரம் கோடி நன்றிகள்”... ‘அவர்கள்’!

சொல்லும்போது மட்டுமல்ல, கேட்கும்போதும் மனம் கூசுகிற கடவுள்கள் குறித்த ஆபாசக் கதைகளின் பிறப்பிடம்தான் புராணங்கள்[அடுக்கடுக்காய் உதாரணங்கள் தர இயலும்]. ‘அவர்கள்’[யார் என்பதை நீங்கள் மிக எளிதாக அனுமானிக்கலாம்] மட்டுமே கல்வி கற்றவர்களாக இருந்த காலக்கட்டத்தில், அப்பாவி மக்களிடையே இந்த அசிங்கக் கதைகளைப் பரப்பி, அவர்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்தார்கள் 'அவர்கள்’. 

மன்னர்கள் ஆண்டபோது மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலாகட்டும், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னராகட்டும்  அதன் மூலம் அவர்கள் பெற்ற பயன்கள் மிகப் பல[விவரிக்கத் தனிப் பதிவு தேவை].

மட்டுமல்ல.....

காலங்காலமாய் அவர்கள் பிற இனத்தவருக்குச் செய்த துரோகங்கள் கணக்கில் அடங்காதவை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்தப் ‘பிற இனத்தவர்’[தமிழர்கள்] ஓரளவு கல்வியறிவு பெற்ற நிலையில், ‘அவர்கள்’ திணித்த மூடநம்பிக்கைகளிலிருந்து இவர்களை[பிற இனத்தவர்] மீட்டெடுக்கப் பாடுபட்டவர்களில் முதலிடம் பெறுபவர், ‘தமிழர் தந்தை’ என்று மரியாதையுடன் அழைக்கப்படும்[பொதுவிடங்களில் பெண்களை ‘அம்மா’ என்று அழைப்பது போல்] பெரியார்[“இவர் எத்தனைப் பேர்களுக்குத் தந்தை என்று கேட்டுக் கிண்டல் செய்வது அந்தச் சூதுகாரர்களின் வழக்கம்] ஆவார்.

‘அவர்கள்’ செய்த அயோக்கியத்தனங்களை மக்கள் அறிந்திடச் செய்யப் பெரியார் எடுத்தாண்ட ஆயுதங்களில் புராணக் கதைகளைச் சாடுவதும் ஒன்று.

அவரால் சாடப்பட்ட ஆபாசக் கதைகளில் ஒன்றுதான்[வேதத்தில் சொல்லப்படுவது] மும்மூர்த்திகளில் ஒருவனான ‘பிரமன், தான் பெற்ற மகளைப் புணர ஆசைப்பட்டது[முந்தையப் பதிவில் எடுத்தாளப்பட்டுள்ளது].

‘பிள்ளை பெற, ஓர் ஆண் தன் தாயையோ, சகோதரியையோ, மகளையோ புணரலாம்’ என்று பிரமன் சொன்னதைப்[புராணக் கதை] பெரியாரே சொன்னதாக ஊடகங்களில் பொய் பரப்பினார்கள் ‘அவர்கள்’. ஆனால், தமிழரிடையே பெரியாருக்கு இருந்த மதிப்பை அவர்களால் சிறிதளவும் சிதைக்க இயலவில்லை.

அவர்களால் செய்ய இயலாததை ‘நான் தமிழன்’ என்று சொல்லித் திரியும் சீமானும்[ஆட்டக்காரன்], நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதை வெறுக்கும் அண்ணாமலையும்[ஆட்டுக்காரன்] செய்துகொண்டிருக்கிறார்கள்[‘அவன்கள்’ இவன்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளைச் செய்வதோடு முழுப் பாதுகாப்பும் தருகிறான்கள். இவன்கள் தமிழருக்குச் செய்யும் துரோகத்திற்கு அவன்கள் தரும் சன்மானம் வெறும் ‘எடுபிடி’ வேலைதான்].

நடப்பு நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்தால்.....

இந்நாள்வரை தலை நிமிர்ந்து நின்ற... இன்றும் நிற்க முயலும் தமிழினம் வெகு விரைவில், இவன்களும் இவன்களைப் போன்றவர்களும் செய்யும் துரோகத்தால் வீழ்ந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதன் பின்னர் நிகழவிருப்பனவற்றைக் கற்பனை செய்துபார்க்க என்  மனதுக்குப் போதுமான வலிமை இல்லை.

                                         *   *   *   *   *

*** //சீமான் ஈ.வெ.ரா., பேசி இருப்பதாகக் கூறிய கருத்தை, ஈ.வெ.ரா., எந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தைச் சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம். அதைப் பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காரணம், பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு[பெண்கள் குழந்தைகள் உட்பட] அருவருப்பு வந்துவிடும். அதைப் போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது// -அண்ணாமலை.

நாம்:

ஆட்டக்காரன் சொன்னதைவிடவா ஆட்டுக்காரன் சொல்லவிருப்பதில் அதிக ஆபாசம் இருந்துவிடப்போகிறது?


https://www.dinamalar.com/news/tamil-nadu-news/annamalai-supports-seamans-opinion-on-ev-ra-notice-of-readiness-to-furnish-evidence-/3826097