செவ்வாய், 4 மார்ச், 2025

திருமணமும் உடலுறவும் நிலை தடுமாறும் குடும்ப உறவும்!!!

தம்பதியர் விவாகரத்துச் செய்துகொள்வதற்கான காரணங்கள் பல உள்ளன{குறட்டைவிடுவது, ஒழுங்காகக் குளிக்காதது, அடிக்கடி மூக்கை நோண்டுவது, பல்லிடுக்கில் சிக்கிய உணவுத் துணுக்கை நோண்டி எடுத்து முகர்ந்து பார்ப்பது[ஹி... ஹி... ஹி!!!] என்றிவை உட்பட}.

இவற்றுள் உடலுறவு கொள்வதில் போதிய அக்கறை காட்டாததும் ஒன்று.

'இல்லற வாழ்க்கையில் ஒருவர் தனது இணையருடன் உடலுறவு கொள்ளாமல் நீண்ட நாட்கள் விலகி இருந்தால், அது இந்து[மற்ற மதங்களும்தான்] திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமையான விஷயமாகக் கருதப்படும். அத்துடன் இதையே காரணமாகக் கூறி ஒருவர் விவாகரத்து கோரலாம்' என்று இது தொடர்பான பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன’ என்பது நான் எப்போதோ வாசித்த ஒரு செய்தியின் சாரம்.

உடலுறவைத் தொடர்புபடுத்தி ஒருவர் விவாகரத்துக் கோரிய ஒரு வேடிக்கையான வழக்கு பற்றிச் சற்று முன்னர் அறிய நேர்ந்தது.


//தனது மனைவி 5 மாதங்களில் தன்னுடன் 10-15 முறைதான் உடலுறவு கொண்டிருந்தார். அத்துடன் உடலுறவின்போது அவர் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஒரு ‘ஜடம்’ போல் இருப்பார் என்பது மணவிலக்குக்கான காரணமாக விவாகரத்து கோரிய வழக்கில் ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு அதற்கான அனுமதியை வழங்கினார் நீதிபதி// என்பது செய்தி[https://www.bbc.com/tamil/articles/cek19mz00vvo


இதே நீதிபதி[டெல்லி உயர் நீதிமன்றம்], 2012ஆம் ஆண்டில், முதலிரவில் மனைவி உடலுறவுக்கு மறுத்ததற்காக அவளின் கணவருக்கு விவாகரத்துச் செய்துகொள்ள அனுமதி வழங்கினார்.


“உடலுறவு சார்ந்த பிரச்னைகளின் காரணமாக அதன் புனிதத்தன்மை கெட்டுவருவதுடன், திருமணப் பந்தத்தின் உத்வேகமும் குறைந்துவருகிறது என்றும், இதன் விளைவாகப் பாலினப் பாகுபாடற்ற திருமணங்கள் தொற்றுநோய் போலப் பரவி வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும் நீதிபதி தம் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

* * * * *

நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஒரு மாதத்தில் தம்பதியர் கொள்ளும் உடலுறவுக்குக் குறைந்தபட்ச வரம்பு விதிக்கும் காலமும் வரும் என்று தோன்றுகிறது.


‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்லிப்போன அந்தக் கூமுட்டை யார்?!

திங்கள், 3 மார்ச், 2025

ஜெய் ஜோதிர்லிங்கம்! அடுத்த நம் பிரதமரும் மோடிஜியே!!

கீழே, நம் பிரதமர் மோடிஜி அவர்கள் சோம்நாத்[குஜராத்] கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்திற்குப் பூஜை, சிறப்பு அபிஷேகம்[வேறு எவரையும் அண்டவிடாமல் தானே தனியராய்ச் செய்வது?] எல்லாம் செய்து வழிபட்ட காட்சி[காணொலி] இடம்பெற்றுள்ளது.

பல்வேறு மதத்தவரும், மதச் சார்பு இல்லாதவர்களும், நாத்திகர்களும், கடவுள் சிந்தனையே இல்லாத அனாதைகளும் இரண்டறக் கலந்து வாழும் இந்த மதச்சார்பற்ற[என்று சொல்கிறார்கள்] நாட்டில், வழிபாட்டைப் பிறர் அறியாமலும், யூடியூப் காணொலியாகப் பதிவு செய்து வெளியிடாமலும் இவர் நிகழ்த்தியிருக்கலாமே என்று கேட்கத் தோன்றியதே தவிர கேட்பது சாத்தியப்படவில்லை.

காரணம்.....

100% மனம் ஒன்றிய நிலையில்[அருகில் அணுகுண்டு வெடித்திருந்தாலும் அவர் கவனம் சிதறியிருக்காது] ஜோதிர்லிங்கத்திற்கு மலர்கள் தூவி,  வாசனைத் திரவியங்கள் சொரிந்து, நெய்யும் பாலும் பெய்து மோடிஜி அதை வழிபட்டார் என்பதே.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் பக்திச் சிரத்தையுடன், வேதமந்திரங்கள் ஒலிக்க  இவர் செய்த பூஜை ஏறத்தாழ ஒரு நாத்திகனான அடியேனின் முழு நெஞ்சையும் நெகிழ்வித்தது.

இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையாக உள்ள அத்தனை இந்துக் குடிமக்களும் மோடிஜியின் வழிபாட்டை, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு கண்டு மெய் சிலிர்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

இதன் பயனாக, இந்தப் புண்ணியப் பூமியில் அடுத்து நடைபெறும் தேர்தலிலும் நம் மோடிஜியே வெற்றி பெற்றுப் பிரதமராகி நல்லாட்சி நடத்துவார் என்பது உறுதி.

ஜெய் பாரதம்! ஜெய் ஜெய் மோடிஜி!!

                                       *   *   *   *   *
உள்மன உறுத்தல்!
அனைத்து உலகங்களையும் அதில் வாழ்கிற அனைத்து உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாக்கிற ஜோதிர்லிங்கத்தை வழிபடும் கடவுளின் வாரிசான[கடவுளின் குழந்தை] மோடிக்கு, கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் பாதுகாப்புத் தேவையா?