வெள்ளி, 18 ஏப்ரல், 2025

போதைப் புருசனும் புத்திசாலிப் பெண்டாட்டியும்![குடும்பக் கதை> பழசோ பழசு]

"கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குற" -கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ், முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா? என்றாள் கல்யாணி.

“ஏண்டி பொய் சொல்றே?”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலைன்னு கோபப்பட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” -முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” -குழைவாகச் சொல்லிக்கொண்டே, உடம்பெங்கும் காமம் பரவ, கண்கள் கிறங்கக் கல்யாணியின் கை பற்றினான் கண்ணுச்சாமி.

வெடுக்கெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட கல்யாணி, “குடிச்சிட்டு வந்து என்னைத் தொடுறதை நிறுத்திக்கோ. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘உன்னை நான் தொடவே இல்லை’ன்னு கூசாம பொய் சொல்லுவே” என்று கடுகடுத்தாள் கல்யாணி.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.

                                *   *   *   *   *
'குமுதம்’ வார இதழில்[2010] வெளியான கதை[கதாசிரியன்... நானே நான்!].

வியாழன், 17 ஏப்ரல், 2025

வறுமையில் வாடும் சாதியாருக்கு அரசாங்கச் செலவில் கோயில்!!![பரிந்துரைப் பதிவு]


“கடவுள் என்றொருவர் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஏன் இப்படிக் கண்ட கண்ட சாமியின் பெயரால் அடித்துக்கொள்கிறீர்கள்?” என்று பகுத்தறிவு பேசி அறியாமையில் உழலும் மனிதர்களைத் திருத்துவது இயலவே இயலாது.

எத்தனை எத்தனைப் பெரியார்கள் வந்து, இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்குப் பரப்புரை செய்தாலும், இவர்களைத் திருத்துவது அத்தனை எளிதல்ல.

மேற்கண்டது[காணொலி] போன்ற பிரச்சினைகள் எங்குமே எழாமலிருக்க, அனைத்துக் கிராமப்புறக் கோயில்களையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, விழாக்கள் நடத்தும் பொறுப்பையும் ஏற்கலாம்.

ஆனால், கோயிலுக்கு உரிமை கொண்டாடும் ஜாதிக்காரகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்[தேர்தலில் வாக்களிக்கமாட்டார்கள்] என்பதால் இது சாத்தியமே இல்லை.

எனவே, இது மாதிரியான நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு, எந்தெந்த ஊரிலெல்லாம் எந்தெந்தச் சாதியாருக்குக் கோயில் இல்லையோ அந்தந்தச் சாதியாருக்கென்று அரசாங்கம் தனித் தனிக் கோயில் கட்டிக் கொடுக்கலாம்[சாதிக்காரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கோயில் எழுப்ப ஆகும் செலவை நிர்ணயிக்கலாம்?].

தங்களுக்கான கோயிலைத் தவிர பிற சாதிக்காரர்களின் கோயிலுக்குள் அவர்களின் அனுமதியில்லாமல் நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்தல் மிக அவசியம்.

திருந்தவே திருந்தாத முட்டாள்களை அவர்கள் வழியில் சென்று திருப்திப்படுத்தினால் மட்டுமே, சாமிகளின் பெயரால் நிகழும் மோதல்களைத் தடுத்திட இயலும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.