ஞாயிறு, 22 ஜூன், 2025

சிவபெருமானை ‘யோகா மாஸ்டர்’ ஆக்கிய புருடா மாஸ்டர் ஆர்.என்.ரவி!!!

‘யோகா’ என்பது உடல், மனம்[இது குறித்தான ஆய்வுரை பிறிதொரு நாளில் வெளியாகும்] என்னும் இரண்டையும் பக்குவப்படுத்தி இவற்றின் நலம் பேணுவதற்கான ஒரு பயிற்சி மட்டுமே.

உடலை அணு அணுவாய் ஆராய்ந்து, மனத்துடன் இணைத்து அதை மேம்படுத்துவதற்கு நம் சித்தர்கள்  உருவாக்கிய ஒரு கலையாகும் இது.

சங்கிகள் இந்த நுட்பமான கலையை ஆன்மிகத்தின் ஒரு கூறு ஆக்கிவிட்டார்கள்.

ஆன்மா என்ற ஒன்றின் இருப்பு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஆன்மிகத்தை உயர்த்திப் பேசிப் பேசி மக்களின் ஆறறிவு வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் இவர்கள்.

இந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்குபவர்களே மோடி, அமித்ஷா வகையறாக்கள்.

இவர்களால், ஆளுநர் என்னும் பெயரில் நியமிக்கப்பட்ட அடாவடி ஆன்மிகப் புளுகர்தான் ஆர்.என்.ரவி.

இந்த ஆன்மிக மேதை, “யோகாவை நமக்கு வழங்கியவர் ஆதியோகியான சிவபெருமான்” என்று உளறியிருக்கிறார்.

கற்பனைப் புனைவுகளான புராணங்கள் மூலம் பிரபலக் கடவுளாக ஆக்கப்பட்டவர் சிவபெருமான்.

இவருக்கும் யோகா கலைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

இந்தக் கற்பனைக் கடவுளைத்தான் ஆதி யோகா மாஸ்டர் என்று பேசியிருக்கிறார் இந்த ஆன்மிகப் புருடா மாஸ்டர்.

தரம் தாழ்ந்ததாகத் தமிழினத்தை ஆக்குவதற்கென்றே கங்கணம் கட்டுவித்து அனுப்பப்பட்டவர் இவர்.

தங்களின் அறிவையும் உரிமைகளையும் காத்துக்கொள்வதற்காகத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய காலக்கட்டம் இதுவாகும். 

சனி, 21 ஜூன், 2025

நீங்களும் உங்கள் கடவுளும் என் கேள்வி பதிலும்!!!

 நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? 

“ஆம்” என்பது உங்கள் பதிலாயின், மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் கடவுளை நம்புவதோடு அவ்வப்போதோ எப்போதுமோ அவரிடம் ‘கோரிக்கைகள்’ வைக்கும் பழக்கம் உள்ளவரா?

இதற்கும் “ஆம்” என்பது உங்கள் பதில் எனின், நீங்கள் வைக்கும் கோரிக்கைகளில், “கடவுளே, எனக்குச் சாகாவரம் கொடு” என்பதும் இடம்பெறுவதுண்டா?

நன்கு யோசித்துச் சொல்லுங்கள், இல்லைதானே?

காரணம்?

மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்க இயலாதது; கூடாதது என்பது கடவுள் வகுத்த நெறி. எனவே, சாகா வரம் அருளும்படிக் கோரிக்கை வைத்தால் அவர் அதை நிராகரிப்பார் என்பதுதானே?

உயிர்களை மரணிக்கச் செய்வது கடவுள் வகுத்த உயிர்களுக்கான வாழ்க்கை நெறி என்பது போல, அவை தத்தம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவிக்க நேர்வதும் அவரால் வகுக்கப்பட்ட நெறிதான்.

எனவே, “என்னைத் தாக்கும் துன்பங்களை அகற்றி இன்பங்களை வாரி வழங்கு” என்பது போல நீங்கள் நம்பும் கடவுளிடம் கோரிக்கைகள்[வேண்டுதல்கள்] வைப்பது தவறு என்கிறேன் நான்.

உங்களால் மறுக்க இயலுமா?