சனி, 28 ஜூன், 2025

பலியாகும் பக்தர்களும் பலி கொடுத்துப் புவி ஆளும் புத்திசாலிகளும்!!!

நகரங்களில் பிறந்து நகரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கிராமங்களின் மேய்க்கப்படும் ஆட்டு மந்தை பற்றி அறிந்திருப்பார்களே தவிர, மந்தையை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டியிருக்காது. 

கீழ்வரும் காணொலியில் முட்டி மோதி நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறும் மனிதர் கூட்டத்தைக் கானலாம். அந்தக் கூட்டத்திற்குப் பெயர்தான்  ‘மனித மந்தை’.

தேர்த்திருவிழாவில் அலைமோதும் இந்த மனிதர்களுக்குப் பதிலாக அங்கே செம்மறி ஆடுகள் இருப்பதாகக் கற்பனை செய்தால் ஆட்டு மந்தையை நேரில் காணும் வாய்ப்பையும் பெறலாம்.

இந்த அறிவியல் யுகத்திலும், அலங்கரிக்கப்பட்ட வெறும் பொம்மையை[பூரி ஜெகன்னாதர்]த் தேரில் வைத்து இழுப்பதாலும், அதைக் கண்டு கண்டு கன்னங்களில் போட்டுக்கொள்வதாலும், நினைத்தது நடக்கும் என்று நம்பும் முட்டாள்கள் இந்த நாட்டில் கோடிக்கணக்கில் இருப்பது  வெட்கக்கேடானது.

நாட்டை ஆளுவோருக்கு இது வெட்கக்கேடான செயல் என்பது தெரியும்.

தெரிந்திருந்தும் தொடர் பகுத்தறிவுப் பரப்புரைகள் மூலம் இவர்களைத் திருத்த முயலாமல், விழா என்னும் பெயரில் கூட்டம் கூட வசதிகள் செய்து தரும் அவர்கள் கொலைகாரர்கள்.

ஆம், விழா என்னும் பெயரில், இல்லாத கடவுள்களுக்கு நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலியிடும்[தேர்த் திருவிழா நெரிசலில் படுகாயமுற்றவர்கள் 170 பேர்> பலர் பலியான தகவல் விரைவில் வெளியாகும்] இவர்கள் கொலைகாரர்களே என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

யார் அந்தக் கொலைகார்கள் என்று கேள்வி எழுப்பலாம். பதில் சொல்வது தண்டனைக்குரிய குற்றமாயிற்றே!


வெள்ளி, 27 ஜூன், 2025

கொடுத்துவெச்ச மகராசன்! பொறாமையில் புழுங்குது என் பொல்லாத மனசு!!

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில்[இதில் மெச்சும்படியாக என்ன சாதிக்கிறார்கள்?] கலந்துகொள்ள, அவர் பிரேசில் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பயணத்துடன், டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, கானா, நமீபியா ஆகிய 4 நாடுகளுக்குப் பயணம்[சுற்றுலா] மேற்கொள்கிறார்> செய்தி.

இதன் மூலம் உலகளாவிய நாடுகளுடன் உறவுகளை அவர் மேம்படுத்துவதாக, தினத்தந்தி போன்ற ஊடகங்கள் ஊதிப் பெருக்கி அவரின் புகழ் பரப்புகின்றன.

இயல்பாகவே பொறாமைப்படும் குணம் அடியேனுக்குக் கொஞ்சம் அதிகம்.


மோடி குறித்த இது போன்ற செய்திகளை வாசிக்கும்போதெல்லாம்.....


அவருக்கென்ன, நேரத்துக்கொரு ஆடை! வாரத்துக்கு நான்கு சுற்றுலா! சு.உலா இல்லாதபோது கோயில் கோயிலாகப் பக்தி உலா! தேர்தல் நடக்கவுள்ள உள்நாட்டு ஊர்களில் வீதி உலா!


“கொடுத்துவெச்ச மகராசன்யா” என்று சொல்லிச் சொல்லிப் பொறாமைப்பட்டுப் பட்டுப் புழுங்குது என் பொல்லாத மனசு!

* * * * *

https://www.dailythanthi.com/news/india/pm-modi-to-visit-brazil-next-week-1165272