வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குமுதமே! திருந்து.....திருத்து!!

இந்த வாரக் குமுதத்தின் [03-10-2012] நான்கு ஒ.ப.கதைகள் இங்கு ‘அறுவை’ செய்யப்படுகின்றன.

விற்பனையில் நம்பர் 1தமிழ் வார இதழ் ஆசிரியருக்கு, ’நம்பர் 1 கதை இலக்கிய விமர்சகன்’ அறுவை மருத்துவன் வரையும் மனம் திறந்த மடல்.

குமுதம் ஆசிரியரே,

“விமர்சகன்’னு சொல்லிக்கோ. வேண்டாங்கல. ‘நம்பர் 1’ போட்டுக்கிறியே, அதுக்கு என்ன ஆதாரம்?”னு  கேட்குறீங்களா?

நானும் அதையேதாங்க கேட்குறேன்.

நீங்க ‘நம்பர் 1’ போட்டுக்கிறீங்களே, அதுக்குப் புள்ளிவிவரத்தோட[பிரதிகள் விற்பனை] ஆதாரம் தந்தீங்களா?

நீங்க போட்டியாளர்கள் மூனு பேருமே[குமுதம், விகடன், குங்குமம்] ‘நான்தான்  ஃபஸ்ட்...ஃபஸ்ட்...’டுன்னு பீத்திக்கிறீங்களே, உண்மையில் யாருங்க ஃபஸ்ட்?

இப்படி ஆளாலுக்கு நம்பர் 1 போட்டுக்கலாம். வளர்ற பையன் நான் போட்டுக்கக் கூடாதுங்களா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க எடிட்டர்.

‘குமுதமே திருந்து’ன்னு தலைப்பு வெச்சிருக்கேன். ‘நாம என்ன தப்புப் பண்ணினோம்?’னு நீங்க யோசிப்பது புரியுது. அதைப் பத்திச் சொல்லுறதுக்கு முந்தி உங்ககிட்டே சில கேள்விகளை முன் வைக்கிறேன். இந்தக் கத்துக் குட்டியை மதிச்சி என் கேள்விகளுக்குப் பதில் தேடுங்க.

இதழ் தவறாம இந்த ஒ.ப.க. [ஒரு பக்கக் கச்சடா கதைகள்?] கிறுக்கல்களை வெளியிடுறீங்களே, அது எதுக்குங்க?

வாசகன் மனசில் உள்ள அழுக்குகளை நீக்கி, நல்ல எண்ணங்களை வளர்க்கவா?

குடும்ப உறுப்பினர்களிடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளைப் போக்கி, சுமுக உறவை மேம்படுத்தவா?

சமுதாயப் பிரச்சினைகளைப் படம் பிடிச்சிக் காட்டி, அதுக்கெல்லாம் ஒரு தீர்வு கண்டறியவா?

வெறும் பொழுது போக்குக்காகவா?

இப்படி இன்னும் எத்தனையோ காரணங்களை  அடுக்கலாம்.

இதுகள்ல எந்த ஒரு காரணத்துக்காக கதைகள் வெளியிடுறீங்கன்னு தெரிஞ்சுக்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேங்க.

இந்த வாரக் குமுதத்தில் [03-10-2012] நாலு கதைகள் வெளியிட்டிருக்கீங்க.

ஐரேனிபுரம் பால்ராசா அவுங்க ‘மாற்றம்’ னு அரியதொரு படைப்பைத் தந்திருக்காங்க.

பனை ஓலையில் பெட்டி செய்யுற தொழில் எல்லாம் இன்னிக்கி இல்லாம போயிடிச்சி. அதைச் செஞ்சவங்க எல்லாம் வேறே தொழில் தேடிட்டாங்க. அதுமாதிரி, உயிருக்கு ஆபத்தான பட்டாசுத் தொழிலை நிறுத்திட்டு, அதைச் செய்யுறவங்க வேறே தொழில் செய்யலாம்’கிறதுதான், இந்தக் கதையோட ‘உள்ளடக்கம்’.

குமுதம் ஆசிரியரே,

இதைப் படிச்ச மறுகணமே, பட்டாசுத் தொழில் மட்டுமல்ல, வாகனம் ஓட்டுறது; கட்டடம் கட்டுறது; கடலில் முழுகி மீன் பிடிக்கிறதுன்னு எல்லாத் தொழிலிலும் ஆபத்து இருக்கு. உயிர்ப்பலி நேராம தொழில் செய்யுறதுக்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுட்டு, ஆபத்தில்லாத தொழிலைத் தேடிக்கணும்னு சொல்றது அடிமுட்டாள்தனம்னு எங்களுக்கெல்லாம் தோணுதே.

கதை எழுதின பால்ராசய்யாவுக்கும் உங்களுக்கும் தோணலையே, அது ஏங்க?

அடிமுட்டாள்தனம்னு நான் சொன்னது பொதுவாத்தாங்க. நீங்களும் ஐரேனிபுரம் அய்யாவும் கோவிச்சுக்கிடாதீங்க. பிளீஸ்.....

மேலே சொன்ன படைப்புக்கான காரணங்களில் எது இந்தக் கதைக்குப் பொருந்தி வருது?

எதுவும் இல்லீங்களே!

இதை ஒரு நல்ல பொழுது போக்குக் கதைன்னுகூடச் சொல்ல முடியலையே.

நல்ல பொழுது போக்குக் கதைன்னா எதுன்னு கேட்குறீங்களா?

உங்களுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் உங்க குமுதத்தில் இருந்தே எடுத்துக்காட்டுத் தர்றேன். 

[’பல்லி விழுந்த பலன்’ ஆசிரியர்: ஹேமா. குமுதம் ப் 13-03-75]

வெளியூர்ப் பயணம் காரணமா, பெண்டாட்டியைப் பல நாள் பிரிஞ்சிருந்த இளைஞன் வீடு திரும்புறான்.

ஒட்டு மொத்த குடும்பமும் கலந்துரையாடிட்டிருக்கு.

அப்போ, ஒரு பல்லி, வாலிபனோட இடது தோள்பட்டையில் விழுந்துது.

கெட்ட பலன் ஏதும் இருக்குமோன்னு, பஞ்சாங்கம் எடுத்து, ’பல்லி விழும் பலன்’ பார்க்குறாங்க. வாலிபனோட பெண்டாட்டிக்குக் காட்டாம எல்லாரும் அவளைப் பார்த்துச் சிரிக்கிறாங்க.

அன்னிக்கி ராத்திரி, புருசனோட சந்தோசமா இருக்கும்போது, அவன் சொல்றான்: ‘இடது தோள் மேல பல்லி விழுந்தா அதுக்கான பலன் ‘ஸ்திரீ சம்போகம்’. அதாவது, பெண்டாட்டியோட உடலுறவு”. அப்பிடீன்னு சொல்லிட்டு அவன் அவளைக் கட்டித் தழுவுறானாம்.

இதைப் படிச்சதும் கிழடுகிண்டுகள் மனசில்கூட இனம் புரியாத ஒரு சந்தோசம் பரவுதில்லியா?

இம்மாதிரி ஒரு சந்தோசத்தைத் தர்றதுதான் உண்மையான பொழுது போக்குக் கதைங்க.

எடிட்டர் அவர்களே, இது உங்க...சாரி, நம்ம குமுதத்தில் ரொம்ப வருசங்களுக்கு முந்தி ’ஹேமா’ன்னு ஒருத்தர் எழுதினதுதானுங்க. காலரைத் தூக்கி விட்டுக்குங்க!

                            *                                            *                                            *

ஒரு முக்கிய அறிவிப்பு:     

குமுதத்தில்‘அவுட் ஸோர்ஸிங்னு கதை எழுதியிருக்கிற எஸ். ராமனுக்கும், குமுதம் ஆசிரியருக்கும் இதைத்[அவுட் ஸோர்ஸிங்] தமிழ்ப்படுத்தத் தெரியலையாம்.

பாவங்க இவங்க. உடனே, இதுக்கான தமிழாக்கத்தை அனுப்பி வைங்க. நீங்க நல்லா இருப்பீங்க.

தலைப்பைத்தான் தமிழில் போடலே. கதையாவது புரியுற மாதிரி இருக்கான்னா, அதுவும் இல்லீங்க.

ஒரு ஐ.டி. கம்பெனியின் வைஸ் பிரஸிடெண்ட்[இதையெல்லாம் தமிழ் படுத்தினா தமிழ் வளர்ந்துடுமேன்னு கதாசிரியர் ராமன் ரொம்ப எச்சரிக்கையா இருக்காருங்க. எடிட்டருக்கு அட்டைப்படக் கவர்ச்சி நடிகையைத் தேர்ந்தெடுக்கவே நேரமில்ல; இதுக்கெல்லாம் அவரால் நேரம் ஒதுக்க முடியாதுங்க. தயவு செஞ்சி கோபப்படாதீங்க].

ஐ.டி.தொழிலகத்தின் துணைத் தலைவர் ராகுல், எல்லா வேலைகளையும் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைச்சுட்டு,[இதைத்தான் ’அவுட் ஸோர்ஸிங்’னு ராமன் சொல்றாரு] நோகாம நோம்பி கொண்டாடுறவரு.

அப்பா அம்மாவைக்கூட முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டாராம். இதுவும் ஒரு வகையில் ‘அவுட் சோர்ஸிங்தான்’னு தன் பெண்டாட்டிகிட்டே பீத்திக்கிறாரு.

இந்த அவுட் சோர்ஸிங் என்கிற கருமாந்தரம் உங்களுக்குப் புரிஞ்சுதா? மரமண்டை எனக்கு ஒரு எளவும் புரியலீங்க.

அவரோட வூட்டுக்காரி, “ஏன்... நாம் குழந்தை பெற்றுக் கொள்வதற்குக்கூட ‘அவுட் ஸோர்ஸிங் செய்யலாமே?”ன்னு கேட்குறாளாம்.

குமுதத்தில் இந்த மாதிரி கதைகளைப் படிக்காம தப்பிக்க ஏதாவது ‘அவுட் ஸோர்ஸிங்’ இருந்து சொன்னீங்கன்னா, வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன்.

                                  *                                             *                                    *

அடுத்து நம்மை வரவேற்கிற ஒ.ப.க. தூத்துக்குடி வி. சகிதாமுருகன் படைச்ச ‘பாரம்’

இதைப் படிச்சதும் ஏற்கனவே இருந்த தலைபாரம் அதிகமாயிடிச்சுங்க.

ஏற்கனவே படிச்ச கதையை மறுபடியும் மறுபடியும் வெவ்வேற வடிவத்தில் படிச்சா தலைவலி வரத்தாங்க செய்யும்.

குமுதம் எடிட்டர்கிட்டே சொன்னா, அடுத்த இதழோட ஒரு தலைவலித் தைலம் இலவச இணைப்பா அனுப்பிடுவாருங்க. மற்றபடி, மறந்தும் கதைகளைத் திருத்தி வெளியிடமாட்டார்!

மறக்காம ஒரு e MAIL  தட்டிவிடுங்க.

“அப்படியென்ன அறுப்புக் கதை?”ன்னு கேட்குறீங்களா?

சொல்றேன்.

மகனுக்குக் கல்யாணம் ஆகி, மருமக வலது காலை எடுத்து வெச்சி வீட்டுக்குள்ள நுழைஞ்சாளோ இல்லியோ, அவகிட்ட சம்பளக் கவரைக் கொடுக்கச் சொல்லித் தன் மகனுக்கு உத்தரவு போடுறா ஒரு அம்மாக்காரி.

அவ மகள் கேட்குறா: “ஏம்மா இப்படிச் சொன்னே?”

“வர்ற வருமானத்தில் குடும்பச் செலவைச் சரிக்கட்ட முடியாம நான் படாத பாடு படுறேன். இனி அவள் படட்டும்.”

அம்மாக்காரி இப்படிச் சொன்னதும், “நாம போற வீட்டில் சம்பளக் கவரைத் தொடவே கூடாது”ன்னு மகள் சொல்லுறா.

ஒரு குடும்பம் உருப்படறதுக்கு எத்தகைய ஓர் உன்னதமான வழியைச் சகிதாமுருகன் காட்டியிருக்கார் பார்த்தீங்களா?

நெஞ்சு சிலிர்க்குதுதானே!?

இவருக்கும் இவர் கதையைப் பிரசுரிச்ச குமுதம் ஆசிரியருக்கும் நன்றி சொல்லலேன்னா கெட்ட சாபத்துக்கு ஆளாவீங்க. ஜாக்கிறதை!

                                *                      *                          *

இன்னும் மிச்சமிருக்கிறது, கோவை நா.கி பிரசாத் எழுதின ‘வாய்மைகதை.

ஒரு பேச்சுப் போட்டியில் பேச, நெட்டில் கருத்துகள் திரட்டித் தரும்படி, ஒரு பாப்பா, தன் அப்பாவைக் கேட்குது.

அதைக் காது கொடுத்துக் கேட்ட அங்கே வாடகைக்குக் குடியிருக்கும் பெரியவர், “போட்டியில் கலந்துக்கப் போறியா பாப்பா?” ன்னு கேட்குறார்.

அது இல்லேங்குது.

“நீ பொய் சொல்லுறே. என் பொண்ணு சுவேதா அந்தக் குறிப்பைக் கேட்கும்னு பொறாமைப் படுறியா?”ன்னு சாடுறார்.

“எனக்கு நாக்கில் புண்ணு..... உங்க சுவேதாவுக்குக் கொடுக்கத்தான் என் அப்பாகிட்டே குறிப்பு வாங்கினேன்”ன்னு பாப்பா சொல்லுதாம்.

கதைக்கு இப்படி எதிர்பாராத நெஞ்சைத் தொடுற முடிவைக் கொடுத்து எழுத்தாளர் நம்மை ஏமாத்துறார்.

கொஞ்சம் யோச்சீங்கண்னா இதுல இருக்கிற ஓட்டைகள் புலப்படும்.

ஒரு பொண்ணு தனக்குத் தயார் பண்ணுற குறிப்பை இன்னொரு பொண்ணுக்கு எப்படிக் கொடுக்கும்?

அதுக்குப் பொறாமை காரணம்னு சுவேதா அப்பா திட்டுறது அநாகரிகம் இல்லையா?

இப்படியொரு சொத்தைக் கதையைக் குமுதம் ஆசிரியர் எப்படி அங்கீகரிச்சார்?

அடப் போங்கய்யா, இந்தக் கதையுலகத்தில் என்ன நடக்குதுன்னே புரியல.

                                  *                    *                     *

இதுவரைக்கும் ஓட்டை உடைசல் கதைகளைக் கேட்டு ரொம்பவே மனசு உடைஞ்சி போயிருப்பீங்க.

படிச்சதும் மனசைக் கனக்கச் செய்யுற கனமான ஒரு கதையைச் சொல்லி முடிச்சுடறேங்க.

இதுவும் குமுதத்தில் வந்ததுதாங்க. ஆனா, இது ஒரு அமுதக் கதைங்க.

கதைப் பேரு: ‘ஒரு பானை காலியாகிறது’. எழுதினவர்: எஸ்.பாலகிருஷ்ணன். [குமுதம் 11.10.84]

காலையில் இருந்து அந்தக் குடிசையில் அடுப்பு எரியல.

சாயங்காலமா, அந்தக் கூலிக்காரன் கொண்டு வந்த கொஞ்சம் அரிசியைச் சட்டியில் போட்டு அடுப்பை எரிய விடுறா அவன் பெண்டாட்டி.

சோறு தயாரானதும், பசியால் துடிச்சிட்டிருந்த புள்ளைகளை உட்கார வெச்சுச் சோறூட்டப் போறா அந்தத் தாயி.

அந்த நேரம் பார்த்து. ஒரு அரசியல் கட்சித் தலைவர் அங்கே வர்றார்.

அவருக்கு ஒரு ஏழை வீட்டில் சாப்பிடணுமாம். அதைப் படம் எடுத்துப் பத்திரிகைகளில் போடணுமாம்.

குடிசையில் நுழைகிறார்.

பானையைக் காலியாக்குகிறார்கள் அவரும் உடன் வந்தவர்களும்!

அவர்கள் போகிறார்கள்.

கூலித் தொழிலாளி சட்டியைப் பார்க்கிறான்.

‘ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளுடன் பல்லிளித்தது மண்பாத்திரம்’ -இப்படி முடியுதுங்க கதை.

இது கதை! இது படைப்பு!!

கதை முடிவு எப்படி ‘சக்’னு நெஞ்சில் ஒட்டிடிச்சி பார்த்தீங்களா?

இம்மாதிரிக் கதைகள் இப்போதெல்லாம் குமுதத்தில் வர்றதில்லேங்குற எரிச்சலில்தான்.....

‘குமுதமே! திருந்து.... திருத்து!!’ன்னு பதிவுக்குத் தலைப்புக் கொடுத்தேன்.

மற்றபடி, குமுதத்தின் மீது எனக்கு எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்ல.

நம்புங்கள் குமுதம் ஆசிரியரே.

வியாழன், 27 செப்டம்பர், 2012

படித்த கதைகள் 17. ”ஆஹா..” 4! ”ஐயோ..” 12! ”தேவலாம்..” 1!

தமிழ் வார இதழ்க் கதைகளின் சாரத்தைப் பிழிந்து தரும் தளம் இது. தவறாமல் படிக்கிறீர்களா?

கதைகள்... குங்குமம், கல்கி, தேவி, ராணி, பாக்யா, வாரக் கதிர், வார மலர், குடும்பமலர் இதழ்களில் வெளியானவை.

தலைப்பைப் படிச்சிட்டு, ”முதலில் தரமான நாலு கதையையும் சொல்லிடு அறுவை.”ன்னு கோரிக்கை வெச்சுடாதீங்க.

அந்த நாலையும் கேட்டுட்டு ’எஸ்கேப்’ ஆயிடுவீங்க. உங்களை நல்லாவே நான் புரிஞ்சி வெச்சிருக்கேன்!

‘சுபமி’ன்னு ஒரு எழுத்தாளர். [கதை: ‘ஷாக்’. இதழ்: குங்குமம் [01=10=2012]

சந்துருவையும் அவனுடைய புதுப் பெண்டாட்டியையும் கிராமம் பார்க்க அனுப்புறார் கதாசிரியர்.

சந்துரு, “கிராமத்தில் இருக்கிற தாத்தாவும் பாட்டியும் பழைமையில் ஊறினவங்க. என் பேரைச் சொல்லிக் கூப்பிடாதே”ன்னு புறப்படும் போதே பெண்டாட்டியை எச்சரிக்கை பண்றான்.

அவளும் அவன் சொன்னபடியே கிராமம் போனதும் மரியாதையா கூப்பிடுறா.

இப்போ முக்காக் கதை முடிஞ்சிதுங்க.

முழுக் கதையும் கேட்டா,  ”கடவுளே, இப்படியெல்லாம் கதை எழுதி நம்மைப் பித்துக்குளி ஆக்குறாங்களே”ன்னு தலை தலையா அடிச்சுக்குவீங்க. நான் உங்க பக்கத்தில் இருந்தா, “இந்தக் கதையைத்தான் முதலில் சொல்லணுமா?”ன்னு என்னையும் போட்டுத் தாக்கிடுவீங்க!

கதை முடிவில், பாட்டி தாத்தாகிட்ட சொல்லுது....................

“இவள் என்ன நம் சந்துருவை ‘என்னங்க’ங்கிறா.....நாகரிகமா பேசத் தெரியல” 

இங்கிலீசு படிச்ச பாட்டியாம். அதான் அப்படிச் சொன்னாங்கன்னு நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார் படைப்பாளர் சுபமி.

‘ஷாக்’ இப்போது சந்துருவைத் தாக்கியது’ன்னு கடைசியா ஒரு வரியும் சேர்த்திருக்கார்.

’ஷாக்’ சந்துருவை மட்டும் தாக்கல; நம் எல்லோரையும்தான்!

சுபமி வாழ்க!

                                     *                                   *                                 *

‘தேர்வு’ ன்னு ஒரு கதை. அதைப் பிரசுரம் பண்ணிப் பெருமை தேடிகிட்டதும் குங்குமம் தான். அதை எழுதின புதுவை சந்திரஹரி, வாசகரின் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடுறதில், ”சுபமிக்கு நான் எந்தவிதத்திலும் குறைஞ்சவனில்லை” என்கிறார்.

கல்யாணம் ஆகாத மனோகர், ’தளதள’ வனஜாவையும் ‘சுமார்’ சுமதியையும் பெண் பார்த்துட்டு வர்றான். யாரைக் கட்டிக்க விரும்புவான்னு உங்களுக்கே தெரியும்.

அம்மாக்காரி ரெண்டு குடும்பத்தைப் பத்தியும் விசாரிச்சுட்டுச் சொல்றா.............

”வனஜாவோட அம்மா அடங்காப்பிடாரியாம். வனஜாவும் அப்படித்தான் இருப்பா. அதனால, நீ சுமதியைக் கட்டிக்கோ”.

‘தாயைப் போல பிள்ளை’ங்கிறது இன்னிக்கிச் செல்லுபடியாகாத பழமொழிங்கிறது கதாசிரியருக்குத் தெரியல.

பாவம் சந்திரஹரி!

                                        *                               *                           *

அடுத்த குங்குமக் கதை, உமா கல்யாணி எழுதினது. தலைப்பு: அக்கரைப் பச்சை.

இந்தக் கதைக்கு ‘ரத்தினச் சுருக்கம்’ மட்டும் தர்றேன்.

ஒரு குடும்பத் தலைவியோட கணவன், புதுசா காய்கறிக்கடை வைக்கிறான். அக்கம் பக்கத்துப் பொண்ணுக எல்லாம் இந்தத் தலைவியை நினைச்சி, ”இவ இனி நோகாம வீட்டோட இருப்பா. புருசன் காய்கறி கொண்டுவந்து கொடுத்துடுவான்”ன்னு பொறாமைப் பட்டாங்களாம்.

குடும்பத் தலை என்ன நினைக்கிறா தெரியுமா?

“மத்த பொம்மணாட்டிங்க ஜாலியா கடைக்குப் போயி, புத்தம் புதுசா வாங்குவாங்க. என் புருசன் முத்துனதைக் கொண்டு வருவான்”

”அடடா!....அடடா! எத்தனை உன்னதமான உளவியல் தத்துவத்தை இந்தக் கதை வெளிச்சம் போட்டுக் காட்டுது!”ன்னு நான் சொன்னா, “உன் ஊரைச் சொல்லுடா அறுவை. உதைக்க வர்றோம்”னு சொல்லுவீங்கதானே?

                               *                                    *                                    *  

அப்புறம், அடுத்து ஒரு குப்...........

கொஞ்சம் இருங்க. ‘குப்’னு மல்லிகை வாசம் வருது!

எதிர்த்த வீட்டு மாமி! அவங்க ஒரு ‘மதனகாமி!! நெட்டில் அவங்க பார்க்காத நீலப் படமே இல்லை!!!

“என்னடா அம்பி, அஞ்சாறு பதிவு போட்டுட்டே. கதை கதையா எழுதித் தள்ளுறே. ஒரு காதல் கதைகூட இல்லையேடா”ன்னு கேட்டுட்டு, அம்மாவைப் பார்க்க சமையல் கட்டுக்குள் நுழைஞ்சிட்டாங்க.

இநத மாமிக்குக் கூச்ச நாச்சமே கிடையாதுங்க. ஒரு விடலைப் பையன்கிட்டே கேட்கிற கேள்வியா இது?.

அவங்க பத்த வெச்சதில், என் மனத்திரையில் ஒரு பழைய காதல் கதை ஓட ஆரம்பிச்சுட்டுதுங்க.

அது அவர்களுக்கு முதலிரவு.

அன்புக் கணவன், ஆசை மனைவியைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுக்கப் போறான். அவ நெருங்க விடல. எவ்வளவு முயற்சி பண்ணியும் அவன் ஆசை நிறைவேறல.

“என்னைப் பிடிக்கலையா?”ன்னு  பாவமா கேட்குறான்.

அவ சிரிச்சிட்டே சொல்றா: “உங்க ஃபிரண்ட்ஸெல்லாம் பார்க்குறாங்க. எனக்கு வெட்கமா இருக்கு”.

“யாரும் நம்மைப் பார்க்கலையே”ன்னு சொல்லிட்டு, சாவித் துவாரத்தைத் துண்டுப் பேப்பர்ல அடைச்சுட்டு வர்றான் அவன்.

அப்புறமும் அவ வெட்கப்படுறா.

என்னை உனக்குப் பிடிக்கல. நான் போறேன்”ன்னு அவன் கதவைத் திறக்கப் போறான்.

”அதோ பாருங்க”ன்னு சுவர்ல தொங்குற ஒரு புகைப் படத்தைக் காட்டுறா அவ.

அவன் தன் நண்பர்களோட எடுத்துட்ட ‘குரூப் ஃபோட்டோ அது.

”அடச்சே”ன்னு படத்தை அவன் திருப்பி வைக்கிறதுக்குள்ள ஓடிப் போயி அவனைக் கட்டிப் பிடிச்சி முத்த மழை பொழியுறா அவ.

‘ஜிவுஜிவு’ன்னு உடம்பு பூரா இன்ப உணர்ச்சி பரவுதுங்களா? [இது குமுதத்தில் படிச்சது. ஆசிரியர் பேரு மறந்து போச்சு]

படிக்கிற நம்மை முட்டாள் ஆக்கினாலும் இதைப்படிக்கும் போது ஒருவித சுகம் கிடைப்பது உண்மைதானுங்களே?

என்னவோ தெரியல, இப்பவெல்லாம் இந்தமாதிரிக் கதைகள்  வார இதழ்களில் வர்றதேயில்லை.

கதை நடையும் ‘சப்’னு இருக்கு. கதாசிரியர்களுக்குச் சுவாரசியமா கதை சொல்லணும்கிற எண்ணமே அத்துப் போச்சுங்க.

அப்புறம்...............

அது வந்து ....குப்பைக் கதைகளைப் பத்திச் சொல்லிட்டிருந்தேன் இல்லியா?. அதைக் கடைசியா வெச்சுக்கலாம். இனி, கொஞ்சம் தரமான கதைகள் பத்திப் பேசுவோம்.

                            *                                   *                                *

கனகராஜன் எழுதின ‘பலி’. கல்கி [30-09-2012] சிறுகதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வானது.  

அஞ்சு பொடிப்பசங்க [ஒருத்தனுக்குப் பதினஞ்சி வயசு] சேர்ந்துட்டு, கைக்காசைச் [ஒருத்தன் தன் முதல் சம்பளத்தைத் தர்றான்] செலவு பண்ணி, இவங்க தலைவன்  ’மஞ்சுநாத்’ ங்கிற சினிமா நடிகனின் பிறந்த நாளுக்குப், அட்டகாசமா ஒரு ’பிளக்ஸ்’ தயார் பண்ணி ஒரு டிரான்ஸ்பார்மருக்குப் பக்கத்தில், அதை, கம்பு நட்டு மாட்டுறாங்க.

அதைச் செயும்போது, பலமா காத்து வீச, இரும்புக் கம்பு டிரன்ஸ்பார்மரில் பட, ஒரு பையன் ஷாக் அடிச்சிச் செத்துப் போறான்.

சினிமா பித்துப் பிடிச்சி அலையுற பசங்களுக்கும், அரசியல்வாதிகளைத் துதிபாடித் திரியற ஏமாந்த சோணகிரிகளுக்கும் பாடம் கற்பிக்கிற கதை இது.

ஒரு தடவை கல்கியில் படிச்சாத்தான் எவ்வளவு நல்லா கதாசிரியர் கதை சொல்லியிருக்கார்னு புரியும்.

கல்கியைக் காசு கொடுத்து வாங்கப் பிரியம் இல்லேன்னா ஓசியில் படியுங்க.

                                  *                                       *                              *

வாரக்கதிரில் [செப்-23]வெளிவந்திருக்கிற பிரபா படைத்த கனவு மெய்ப்படும் கதையும் ரொம்பக் கனமானது.

ஊருக்குப் பொதுவான ஏரி குளங்களை ஆக்கிரமிக்கிற மக்கள், மனம் திருந்தி அதையெல்லாம் ஊருக்கே ஒப்படைக்க, எல்லாருமா சேர்ந்து, ஏரி குளங்களைச் சீரமைச்சி, மழைக் காலத்தில் நீரைச் சேமிக்க வழி காணுவதை யதார்த்தமா சித்திரிச்சிருக்கார் படைப்பாளர். நீங்க தவறாம படிக்கணும்; வாரக் கதிருக்கு ஒரு பாராட்டுக் கடிதமும் எழுதிப் போடணும்.

                                   *                                  *                                    *

வாரமலரில் [செப்-23] பிரசுரமான மணிமேகலை எழுதினதும் உருப்படியான கதைதாங்க.

தள்ளுவண்டிக்காரனிடம் பேரம் பேசுற ஒரு பெண்மணி, அவன் ஒரு கஷ்டத்துக்கு உள்ளான போது தயங்காம உதவி செய்யுறதை மிகைப் படுத்தாம கச்சிதமா படம் பிடிச்சிருக்கார் மணிமேகலை.

                                  *                                       *                                         *

எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கிறவர் கதிர் மாமா.

அன்னிக்கி, பிரபு அவரைச் சந்திக்கப் போனபோது, அவர் முகத்தில் இயல்பான சிரிப்பு இல்ல. ஆனாலும் சிரிச்சுட்டுத்தான் பேசுறார்.

“உடம்பு சரியில்லே”ங்குறார்.

உண்மையில் அவருக்கு மனசுதான் சரியில்ல.

அதுக்குக் காரணம்......................

ரெண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் பெண்டாட்டி, ஒருத்தனைக் கூட்டிட்டு ஓடிட்டதுதான்.

இப்படி வேதனையின் உச்சத்திலும் ஒருத்தர் சிரிச்சிப் பேசுறார்னா, அவர் லட்சத்தில் ஒருத்தரு.

அத்தகைய ஒருத்தரை நமக்கு அறிமுகப் படுத்திய அற்புத எழுத்தாளர் யார் தெரியுங்களா?

 பிரபு. கதை: எங்க அம்மா செத்துப் போச்சு. இதழ்: பாக்யா [செப் 28...]

தலைப்பு கச்சிதமா பொருந்தியிருக்குங்க.

                                      *                                        *                                   *

இந்த நான்கைத் தவிர, ’நல்ல கதை’ப் பட்டியலில் வேறு எதையும் சேர்க்க முடியலேங்கிறதை நினைச்சா மனசு கிடந்து தவியா தவிக்குதுங்க.

புதுப் புருசனோட  வாக்குவாதம் பண்ணும் போது, விட்டுக் கொடுக்க மனசில்லாம சண்டை போட்டுகிட்டுத் தாய் வீட்டுக்கு வந்துடறா ஒரு பொண்ணு.

தாத்தாவும் பாட்டியும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து அன்னியோன்னியமா பழகி, சந்தோசமா இருக்கிறதைப் பார்த்து மனம் திருந்துறா.

இது மாதிரி கதையெல்லாம் எத்தனையோ வந்திருக்கு. ஆனாலும் கதை சொன்ன முறை நல்லாயிருக்கு.

 ‘புது வாழ்வு’ ங்கிற இக்கதை தினத்தந்தி இணைப்பான குடும்ப மலரில் [23-09-2012] வந்தது

பழைய ‘கரு’வுக்குப் புதிய நிகழ்ச்சிகளை இணைச்சிப் புது வடிவம் கொடுத்திருக்கிறார் கதாசிரியர் ஜி.விஜயலட்சுமி.

புதிய மொந்தையில் பழைய கள்ளு. கதை ’தேவலாம்’ ரகம்.

                            *                                         *                              

தரமான கதைகள் 4. சுமார் ரகம் 1. மொத்தம் 5.

17 இல் 5 போனா எத்தினீங்க?

மிச்சமுள்ள அத்தனையும் குப்பைதான்!

”மறுபடியும் குப்பையைக் கிளறாதே”ன்னு என்னை மிரட்டாதீங்க.

உங்களுக்காகத்தான் இந்தக் கதைகளையெல்லாம் கண் விழிச்சிப் படிச்சேன்.

நான் பெற்ற துன்பம் நீங்கள் பெற வேண்டாமா?

இனி, கதைச் சுருக்கம் சொல்லாம, கதையின் ‘உள்ளடக்கம்’ மட்டும் தர்றேன். பிகு பண்ணாம கேட்டுக்கிடுங்க!

குப்பை 4

அவனும் அவளும் ஓடிப்போகத் திட்டம் போடுறாங்க.

”உன் நகைகளைப் பணம் பண்ணிக்கலாம். கொண்டுவா”ன்னு அவன் சொல்ல, அவள் கவரிங் நகைகளைக் கொடுக்க, உண்மை தெரிஞ்சி, அவன் அவளைக் கை கழுவுறான். ”உன்னை ‘டெஸ்ட்’ பண்ணத்தான் இப்படிச் செய்தேன்” ன்னு சொல்லிச் சிரிக்கிறாள் அவள்!

இது பாக்யா [செப் 28-]கதை. படைப்பாளர்: ஜி.சுந்தரராசன்.

இப்படியெல்லாம் நடக்குதான்னு நான் சிரிக்கிறேன். நீங்களும் சிரிங்க.

ஹா........................ஹா.............................ஹா......................................

 *                                      *                                     *

குப்பை 5

ஒரு கம்பெனியில், சமமான தகுதியுள்ள ரெண்டு பேர்ல ஒருத்தரை மேனேஜரா தேர்ந்தெடுக்கணும்.

அதில் வேலை செய்யும் அலுவலர்களையே, அவரவருக்குப் பிடித்தவர் பேரை எழுதித் தரச் சொல்லி, மேனேஜரைத் தேர்ந்தெடுத்தாங்களாம்.

இந்தக் கதையை பாக்யாவில் எழுதின பி.சந்திரா,  நம் காதில் பூ மட்டும் சுத்தலீங்க; தலையில் மிளகாயே அரைச்சுடறார்!

சந்திராவுக்கு நம் நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்!

                                    *                                   *                                         *

குப்பை 6

’மண[ன] வாசம்’. மன்னன்காடு எஸ்.முத்துக்கண்ணு ங்கிறவர் , ராணியில் எழுதினது.

நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை, ஒரு பொண்ணு கட்டிக்க மாட்டேன்னு சொல்லுது.

காரணம் என்ன தெரியுங்களா?

‘நமக்குக் கல்யாணம் ஆனதும் தனிக் குடித்தனம் போலாம்”னு அந்தப் பையன் பொண்ணுகிட்ட சொல்லிட்டானாம்.

பொண்ணுங்க இப்படிச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஒரு பையன் சொன்னான்னு கதாசிரியர் சொல்றது புதுமையிலும் புதுமை போங்க!

                                *                                *                                          *

ஐயோடா! இதுக்கு மேல என்னால குப்பைகளைக் கிளற முடியலீங்க.

 இராஜேஷ்ஜோதி, கோவில்பட்டி எஸ்.தங்கராஜ் ஆகியோர்  பாக்யாவில் கொட்டிய குப்பைகளையும், தம்பி. பன்னீர்செல்வம், மீனாசுந்தர் ஆகியோர் தேவி [26-09-2012] இதழில் கொட்டியதையும், கல்கி [30-09-2012] யில், ஆனந்தகுமார் விரும்பிச் சமர்ப்பித்த குப்பையையும் அருள்கூர்ந்து நீங்களே கிளறிப் பார்த்துடுங்க.

தங்கள் வருகைக்கும் கட்டிக் காத்த பொறுமைக்கும் கோடி நன்றி!!!


*****************************************************************************************************************    

நாளை [28-09-2012] வெளிவரும் பதிவு..........  

‘குமுதமே! திருந்து.....திருத்து.....!’

****************************************************************************************************************